காய்ச்சல், நெஞ்சுவலி மற்றும் தொடர் இருமலால் தினமும் தூங்கக் கூட முடியாமல் அவதிப்பட்ட புனித மரிய மதலேனாள் தன்னை கவனிப்பவர்களிடம் கூறிய வார்த்தை,
“ இத்தகைய சிரமத்திலும் எப்படி உங்களால் பொறுமாய இருக்க முடிகிறது?” என்று சகோ. பசிபிக்கா கேட்ட போது,
“ நான் சிலுவையில் அறையுண்ட சேசுவை உற்று நோக்குகிறேன். பயங்கரமான வலியை எத்தகைய நேசத்துடன் நமதாண்டவர் தாங்கினார்!. நான் அவரை நோக்குகிற போது, அவர் என் பலவீனத்தைக் காண்கிறார். எனக்கு பலம் தருகிறார். சிறிய வேதனையோ, பெரிய வேதனையோ, அவர் கரங்களிலிருந்துதான் வருகிறது என்று நான் நினைக்கும்போது, அனைத்து வேதனைகளும் எனக்கு இனிமையாக இருக்கின்றன “ என்று கூறினாள்.
நம் எல்லாருக்கும் பொத்தம் பொதுவாக ஒரு சிலுவை தரப்பட்டுள்ளது. ஆகவே அதை முனுமுனுக்காமல் சுமந்து ஆண்டவரின் திருப்பாடுகளோடு ஒப்புக்கொடுப்போம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !
பாசி மரிய மதலேனா :
புனிதை உடல் நலம் பெறுவாள் என்ற நம்பிக்கை இல்லாமல் போகவே, மடத்துத்தாயார் புனிதையை வார்த்தைப்பாடு கொடுக்க அனுமதிப்பதென்று முடிவு செய்தார். முன்னொரு நாள், “ நான் தனியே வார்த்தைப்பாடு கொடுக்க அனுமதிப்பீர்கள் “ என்று புனிதை முன்னுரைத்தது நிறைவேண்டிய காலம் வந்தது. ஒரு கட்டிலில் புனிதையை கிடத்தி, தேவ மாதாவின் பீடத்திற்கு அவளைக் கொண்டு வந்தனர்.
அன்று 1584-ம் ஆண்டு மே மாதம் 27- தேதி பரிசுத்த தமத்திருத்துவ திருநாள். தந்தை அகஸ்டின் கேம்பி திருப்பலி நிறைவேற்றினார். அவரிடம் நமது புனிதை தனது வார்த்தைப் பாட்டை அதாவது ‘தான் நித்தியத்திற்கும் ஆண்டவருக்கு உரியவளாயிருப்பேன் ‘ என்ற உறுதிமொழியை எடுத்தாள். பின்பு சேசு நாதரின் புதிய மணவாளியை கன்னியர் நோயாளிகளின் அறைக்கு எடுத்துச் சென்றனர்.
என்ன ஆச்சரியம் ! தொடர் இருமல் காரணமாக ஒரு “அருள் நிறை “ மந்திரம் கூட சொல்ல முடியாதிருந்த புனிதை, மிக அமைதியாக, இரண்டு மணி நேரம் கண்கள் பளிச்சிட தனது பாடுபட்ட சுரூபத்தை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். இரண்டு மணி நேரம் கழித்து அவள் பழைய நிலைக்கு திரும்பினாள். தொடர் இருமல், காய்ச்சல், மூச்சுத்திணரல் ஆனால் முகத்தில் மட்டும் மகிழ்ச்சி. அவளது ஆசை நிறைவேறியது. வார்த்தைப்பாடு கொடுத்தாகிவிட்டது. அவளுடைய மகிழ்ச்சிக்கான காரணத்தை கீழ்ப்படிதலின் பெயரால் தெறிவித்தாள்.
சிந்தனை : “ நான் நித்தியத்திற்கும் ஆண்டவருக்கு உரியவளாயிருப்பேன் “ எப்பேர்பட்ட வார்த்தைப்பாடு. அது அவருக்கு மட்டுமா?.. நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் நம் ஆண்டவர் இயேசு சுவாமிக்கு கொடுக்க வேண்டிய அனுதின வார்த்தைப்பாடு… ஆண்டவருக்கு உரியதை மட்டுமே செய்தால்.. ஆண்டவருக்கு பிடிக்காததை செய்யாமல் இருந்தால்..ஆண்டவருக்கு உரியவனாக.. உரியவளாக நம்மால் கண்டிப்பாக இருக்க முடியும்.. அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள சவாலான இந்த நாட்களில் ஆண்டவரோடு ஒன்றித்து அவரோடும், நம் குடும்பத்தோடும் மகிழ்சியாய் இருப்போம்..
நம் ஆண்டவர் நம்மை மகிழ்ச்சியாக இருக்க வேண்டாம் என்று சொல்லியதே இல்லை..
“ எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்; இடைவிடாது ஜெபியுங்கள்; என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள் “ என்றுதானே சொல்லியிருக்கிறார்..
உலகக்காரியங்களில் மகிழ்ச்சியாய் இருப்பதற்கும் உன்னதரோடு மகிழ்ச்சியாய் இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு.. முதலாவது தற்காலிகமானது.. இரண்டாவது நிரந்தரமானது.. அதை பறிப்போர் யாருமில்லை..
நம் மகிழ்ச்சியை ஆண்டவர் மகிழ்ச்சியோடு இனைத்துவிட்டால்.. அது அழியா மகிழ்ச்சியாகிவிடும்..
ஆண்டவரோடு கொஞ்சம் கொஞ்சம் நேரம் செலவழித்துப்பாருங்கள்..
அப்புறம் என்ன.. நம் தற்காலிக மகிழ்ச்சி தலைமறைவாகிவிடும்… நிலையான மகிழ்ச்சி நிரந்தரமாகிவிடும்.. நம்மோடும் நம் குடும்பத்தோடும் நிரந்தரமாக தங்கிவிடும்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !