வேதாகமத்தை அறியாதவன் கிறிஸ்துவை அறியாதவன் – புனித ஜெரோம்
“ மறைநூலில் உள்ளதெல்லாம் கடவுளால் ஏவப்பட்டுள்ளது. போதிக்கவும், கண்டிக்கவும், சீர்திருத்தவும், இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வில் மக்களைப் பயிற்றவும் பயன்படும் ” ( 2 தீமோ.3:16 )
“ நான் நடக்க வேண்டிய பாதையைக் காட்டும் விளக்கு உம் வார்த்தை ; செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே “ ( சங்.118:105)
இத்தகு பெருமைமிகு வேத வசனங்கள் மக்களின் வாசிப்பிற்கு வழங்கப்படும்போது உண்மையானதாக, சத்தியத்தை சொல்வதாக அதிகாரப்பூர்வமானதாக இருக்க வேண்டும். ஒரு வேத புத்தகம் பல்வேறு அர்த்தங்களை கொடுக்கும் பல்வேறு மொழி பெயற்புகளைக் கொண்டதாக இருக்கும் என்றால், எதை உண்மை என்று நம்புவது? எது உண்மையான அர்த்தம் என்று எடுத்துக்கொள்வது ? நிச்சயமாக ஒரு மொழிபெயற்பிலிருந்து மற்றொன்று மாறுபடும். அப்போது அர்த்தங்களும் மாறுபடும்.
வேதபுத்தகம் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. இதில் கத்தொலிக்கர்களின் நிலை பரிதாபத்திற்குரியது.
குட்நியூஸ் பைபிள் என்று ஓர் ஆங்கிலப்பதிப்பை பலர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது பைபிளே அல்ல; பைபிளின் பொழிப்புரை மட்டுமே என்று அந்த பைபிளின் முன்னுரையிலேயே இருப்பதை எத்தனைபேர் அறிவார்கள் ?
இன்று தமிழ் பைபிள் என்று சொல்லி “ திருவிவிலியத்தை மார்போடு அனைத்துக்கொண்டு பைபிள் பக்தர்களாகச்செல்லும் கத்தொலிக்கரில் 99 சதவீதத்தினர், அது கத்தொலிக்கப் பைபிள் என்று நினைக்கிறார்கள். இதில் ஆயர்களும், குருக்களும் அடக்கம். ஆனால் அந்த பைபிளே தன் நெற்றியில், “ நான் ஒரு பொது மொழி பெயற்பு மட்டும்தான் என்று எழுதிக்கொண்டிருப்பதை எத்தனை பேர் அறிவர்?
பொது மொழிபெயற்பு என்றால் அது யாரோ இரு குழுவினர்களுக்கு பொதுவானது என்று பொருள். அந்த விவிலியத்தின் முன்னுரையின் முதல் பத்தியிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கத்தொலிக்கரும், பிரிந்த சபையினரும் சேர்த்து செய்த கலவைதான் பொதுவிவிலியம் என்று அதுவே சொல்கிறது.
இதற்கு சாட்சியாக 1995-ல், திண்டிவனம் TNBCLC – யால் வெளியிடப்பட்ட திருவிவிலியம் பொதுமொழிபெயற்பு நினைவு மலரில் தமிழக ஆயர்கள், குருக்கள் மட்டுமின்றி பிரிவினை சபையை சேர்ந்த பலர் வாழ்த்துமடல் எழுதியுள்ளார்கள்.
சரி….பொதுமொழிபெயற்பு கத்தொலிக்கரின் கையில் உள்ளது. ஆனால் பிரிந்த சபையினர் இதைப் பயன்படுத்துவது இல்லையே! ஏன்?. ஆக ஏமாந்தவர்கள் கத்தொலிக்கர்கள் மட்டும்தானே? கத்தொலிக்கர்கள் தலையில்தானே யாரும் மிளகாய் அரைக்க முடியும்.
பிரிந்தவர்கள் அவர்கள் தங்கள் பழைய பைபிளை பயன்படுத்துகிறார்கள். கத்தொலிக்கர் பொது மொழி பெயற்பை பயன்படுத்துகிறார்கள். அப்படியானால் இடையில் ஏதோ ஒன்று கானாமல் போய்விட்டதே அது என்ன?. அதுதான் அனைத்து கத்தொலிக்கர்கர்களும் முன்பு பயன்படுத்திய திருச்சபையின் அதிகாரப்பூர்வ பரிசுத்த வேதாகமம். பொது மொழிபெயற்பு வந்து கத்தொலிக்கரின் பரிசுத்த வேதாகமத்தைக் கொலை செய்திருக்கிறது. இதுவே அதன் சாதனை.
சரி பொதுமொழிபெயற்பில் உள்ள தப்பரைகள் சிலவற்றைக் காணலாம்
ஆண்டவர் இயேசுவின் கன்னிமைப் பிறப்பைக் குறித்த தீர்க்க தரிசனங்களுள் மிகப் பிரபலமானது இசையாஸ் 7:14,
“ ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கோர் அடையாளம் தருவார்; இதோ கன்னிப்பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள் ; அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்”
இதில் கன்னிப்பெண் என்னும் வேதாகம வார்த்தை திருவிவிலியத்தில் இளம்பெண் என்று மாற்றப்பட்டுள்ளது. இப்படி மாற்றப்பட்டிருப்பது கூட அநேகர்களுக்குத் தெறியாது. கத்தொலிக்க மற்றும் பிரிந்த சபையாரின் மொழிபெயற்புகள் அனைத்திலிலும் கன்னிகை என்றே இருக்கிறது. யார் இளம்பெண் என்று கண்டுபிடித்தார்கள் என்று தெறியவில்லை. இவர்களின் உள் நோக்கம் ஆண்டவரின் கன்னிப்பிறப்பை மறுதலிப்பதுதான்.
இவர்களுக்கு ஓர் அடிப்படை உண்மை கூடவா தெறியாது ? இளம்பெண் கருத்தாங்குவது எங்கும் நடக்கும் செயல். இதில் கடவுளின் அற்புத அடையாளம் எங்குள்ளது. ஆனால் கன்னியானவள் கருத்தாங்குவது கடவுளால் மட்டுமே முடிந்த செயல். எனவே ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அற்புத அடையாளம் தருவார் என்றால், அது கன்னியானவள் கருத்தாங்கி என்றுதானே இருக்க வேண்டும்.
மேலும் இதுபற்றி அர்ச்.மத்தேயு தமது சுவிசேசத்தில் 1:26 (பொதுமொழிபெயற்பு) வசனத்தில் மாதாவை கன்னிகை என்று குறிப்பிடுகிறார். ஒரு நல்ல கிறிஸ்தவன் மத்தேயு எழுதியுள்ளதை நம்பவேண்டுமா? அல்லது இசையாசை நம்பவேண்டுமா? ஒரே பைபிளில் ஏன் இந்த முரண்பாடு.
எனவே புரிந்துகொள்ளுங்கள் பொது மொழிபெயற்பில் உள்ள பிரச்சனைகளை.
மேலும் அர்ச்.லூக்காஸ் தமது சுவிசேசம் 1:42 –ல் (பரிசுத்த வேதாகமத்தில்) மாதாவின் திருவயிற்றில் உள்ள ஆண்டவரை “ உம் வயிற்றின் கனி “ என்று குறிப்பிடுகிறார். ஆனால் பொதுமொழிபெயற்போ (திருவிவிலியம்) வயிற்றில் உள்ள குழந்தை என்று குறிப்பிடுகின்றது. லூக்காஸ் கனி என்றுதான் எழுதினாரே தவிர குழந்தை என்று குறிப்பிடவில்லை. இதற்கு ஒரு காரணம் உண்டு. ஒரு கனியைக்கொடுத்து, ஏவாள் உலகைக்கெடுத்தாள்; மாதாவோ தம் திருவயிற்றின் கனியைக் கொடுத்து உலகைக் காக்கிறார்கள் என்று பொருள். திருவிவிலியம் இந்த அற்புதமான விசுவாசத்தை அறிந்துகொள்ள முடியாதபடி செய்துவிட்டது.
ஆதியாகமம் 3:15 –ல் மாதாவை ஓரம் கட்டியது திருவிவிலியம் ( பொது மொழிபெயற்பு). வேதாகமத்தில் மாதாவைக் குறித்து “அவள் உன் தலையை நசுக்குவாள் “என்றுதான் இருக்கிறது. இசையாஸ் 7:14 இல் மாதாவின் கன்னிமைக்கு பங்கம். லூக்காஸ் 1:28 –ல் பாரம்பரிய போதனையை மாற்றி மாதாவின் அமல உற்பவத்தை மறுத்து ஜெபமாலை பக்தியை பாழாக்குகிறது. “ அருள் நிறைந்தவளே வாழ்க ! “ “ அருள் மிகப்பெற்றவளே “ ஆக்கப்பட்டாள்.
லூக்காஸ் 1:42-ல் புதிய ஏவாள் மாதா என்னும் வேத சத்தியம் மக்களுக்குப் போய்ச்சேராமல் தடுக்கிறது திருவிவிலியம்.
இயேசுவுக்கே புகழ் !! இயேசுவுக்கே நன்றி !! மரியே வாழ்க !!