அன்புள்ள சகோதரரே !
கத்தோலிக்கத் திருச்சபை நான்கு இறுதிக்காரியங்களை அடிக்கடி தியானிக்கும்படி நம்மை எப்போதும் அழைக்கின்றது.
அவை : மரணம், தீர்வை, மோட்சம், நரகம் ஆகியவை.
ஆனால் நாமோ, ஆன்ம வாழ்கை மறந்து உலக வழியில் பணம், பதவி, அதிகாரம் என்னும் உலக குறிக்கோள்களுடன் வாழவே விரும்புகிறோம். இதனால் உலகில் எல்லாப் பாவங்களையும் எளிதாகக் கட்டிக்கொள்கிறோம். ஆபத்தில் நாம் எப்போதுமே இருக்கிறோம். பாவத்திற்கு தண்டணையான நித்திய நரகத்திலிருந்து நம்மைக் காப்பாற்றி, நம்மை மோட்சத்திற்கு அழைத்துச் செல்லவதற்காகவே நமதாண்டவராகிய சேசுகிறிஸ்துநாதர் உலகிற்கு வந்தார்.
எனவே மோட்சம் செல்ல வேண்டும் என்னும் ஆசை நம்மில் இருக்க வேண்டும். அதுவே நமது நிரந்தர வாஸஸ்தலம். அதுவே நித்திய பேரின்பம். அதை நோக்கி நம்மை நம்மை வழி நடத்திச் செல்லவே கத்தோலிக்கத் திருச்சபையை ஆண்டவர் ஏற்படுத்தினார்.
எனவே நாம் நரகத்தைப் பற்றி ஆழ்ந்து தியானிக்கவும், மோட்சத்தை ஏக்கத்தோடு தேடவும், அர்ச். அவிலா தெர்சம்மாள் கூறியபடி, இறுதி வரை தேவ சிநேகத்திடனும், தெய்வபயத்துடனும் ( மிக முக்கியம்) வாழவும் வேண்டும்.
கத்தோலிக்கத் திருச்சபை போதித்து வரும் விசுவாச சத்தியங்களில் ஒரு மிக முக்கியமான சத்தியம் இன்று மறுக்கப்படுவதைக் காணமுடிகிறது. அது மறுக்கப்படுவது மட்டுமல்ல மறைக்கவும்படுகிறது.
நரகம் என்ற ஒன்று இருக்கிறது, இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவனும் தன் பாவத்திற்கு தண்டனையாக அங்கு செல்லக் கூடிய ஆபத்து இருக்கிறது என்ற சத்தியம்தான் அது.
1908-ல் பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதரால் வெளியிடப்பட்ட “ ஞான உபதேசம், நரகத்தை பின்வருமாறு வரையறுத்தது:
“ நரகம் என்பது தீயவர்கள் தண்டிக்கப்படும் ஓர் இடமாகும். அங்கு அவர்களுக்கு நித்தியத்திற்கும் கடவுளின் காட்சி மறுக்கப்படுகிறது. அங்கு அவர்கள் பயங்கரமான வாதைகளுக்கு உள்ளாகிறார்கள் “ ( lesson 37th: on the Four Last Things, Question 1379).
எனவே, நரகம் என்ற ஒன்று உண்மையாகவே இருக்கிறது என்பதை நிரூபிப்பதும், அதைப்பற்றி மக்களை எச்சரிப்பதும் இவ்வெளியீட்டின் நோக்கமாக இருக்கிறது.
நரகத்தைப் பற்றிய தியானம் எப்படிப்பட்ட அச்சம் தருகிற, பயங்கரமான தியானமாக இருக்கிறது! ஆன்மாக்களுக்கு இந்த சத்தியத்தைப் பற்றி மேலிருந்து ஞான வெளிச்சம் தரப்பட வேண்டும், அவர்களது மனங்களில் இந்த சத்தியம் உறுதிப்பட வேண்டும், என்ற ஏக்கம் திருச்சபைக்கு உண்டு. இது பாவத்தையும், நரகத்தையும் பற்றி மேலோட்டமாகப் பேசுபவர்களின் கற்பனையான கனவுகளிலிருந்து இருதயத்தையும், மனதையும் விடுவிக்கிறது.
அர்ச். தொன்போஸ்கோவின் நரகக் கனவில் வரும் வழிகாட்டி ஓர் எல்லைக் கோட்டை சுட்டிக்காட்டுகிறார்.
“ இந்த கோட்டிற்கு அப்பால், இனி அன்பு இல்லை, நண்பர்கள் இல்லை, எந்த விதமான ஆறுதலும், தேறுதலும் இல்லை, சுகமும் இல்லை. ஒழுக்கங்க்கெட்ட உலகத்தைப் பின்செல்பவர்களுக்காக அங்கே கடும் அச்சமும், நம்பிக்கையின்மையும் மட்டுமே காத்திருக்கிறது “
நரகத்தைப் பற்றி பேசி மக்களை அச்சுறுத்த வேண்டியதில்லை என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் உண்மை நிலை இதற்கு நேர் எதிராக இருக்கிறது. இவர்கள் முதலில் ஒரு காரியத்தை ஆழமாக சிந்திக்க வேண்டும்.
தேவ சுதனானவர் எதற்காக மனிதரானார்? “ அவர் தேவரூபமாயிருக்கையில்.. தம்மை தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனிதரின் சாயலாகி, மனித ரூபமாகக் காணப்பட்டார், தம்மைத் தாழ்த்தி, மரணமட்டும் கீழ்ப்படிதலுள்ளவரானார்” ( பிலிப்.2 6-8) என்றால் அதற்கு காரணம் என்ன? மனிதனைப் பாவத்தின் அடிமைத்தனத்தினின்றும், அதன் பயங்கர விளைவாகிய நரகத்திலிருந்தும் இரட்சிப்பதற்காகவே அவர் மனிதனானார். கிறிஸ்துவின் மனித அவதாரத்தின் முக்கிய நோக்கம் இது.
நன்றி : மாதா பரிகார மலர், மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. மாதா பரிகார மலர் இதழ் ( இருமாதங்களுக்கு ஒருமுறை) விரும்புவோர், தொடர்பு கொள்க சகோ.பால்ராஜ், Ph. 9487609983, பிரதர் கபரியேல், ph. 9487257479,
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !