போலந்து நாட்டு இளவரசர் ஒருவர் சில அரசியல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு பிரான்சு தேசத்தில் அழகிய கோட்டை உள்ளிட்ட சொத்துக்கள் வாங்கி வசித்து வந்தார்.
இச்சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் துரதிஷ்ட்டவசமாக, தனது இளமைக்கால விசுவாசத்தை இழந்து, கடவுளுக்கு விரோதமாகவும், இறப்பிற்குப் பின் வாழ்க்கை இல்லை எனவும் புத்தகம் எழுதிக்கொண்டிருந்தார்.
ஒரு நாள் மாலையில் தனது தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்த போது, மனமுடைந்து அழுதுகொண்டிருந்த ஒரு ஏழைப் பெண்மணியை கண்டு அவருடைய துக்கத்திற்காண காரணத்தை விசாரித்தார். அப்பெண், “ இளவரசரே, நான் இரண்டு நாட்களுக்கு முன் மரித்துப்போன உம்முடைய ஊழியரான ஜோன் மேரி என்பவரது மனைவி. அவர் எனக்கு நல்ல கணவராகவும், தங்களுக்கு உண்மையுள்ள ஊழியராகவும் இருந்தார். அவர் வெகுநாட்கள் உடல் நலமின்றி இருந்ததால் எங்களது சேமிப்பு முழுவதையும் அவரது சிகிச்சைக்காக செலவு செய்துவிட்டேன்.தற்போது அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலிகள் ஒப்புக்கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை “ என்றார்.
அவளது துயரத்தைக் கேட்டு மனமிரங்கிய இளவரசர் ஆறுதலாக சில வார்த்தைகள் கூறிவிட்டு, மறுவாழ்வு பற்றி நம்பிக்கையின்றி இருந்தாலும், அவளது கணவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலிகள் ஒப்புக்கொடுக்க சில தங்க நாணயங்களை வழங்கினார்.
சிலகாலம் கழித்து, மற்றுமொரு மாலை வேளையில் தமது வாசக அறையில், இளவரசர் ஆர்வமாக புத்தகம் எழுதிக்கொண்டிருந்த போது அறையின் கதவை அவசரமாக யாரோ தட்டும் நுண்ணிய சத்தம் கேட்டு, தலையை நிமிர்த்தாமலேயே. உள்ளே வரப்பணித்தார்.
அந்த நபர் மெல்ல கதவைத்திறந்து உள்ளே இளவரசரின் முன் நின்றார். நிமிர்ந்து பார்த்த இளவரசர், புன்முறுவலோடு தம்மை நோக்கிக் கொண்டிருந்த ஜோன் மேரியைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
அவர், “ இளவரசே, எனது ஆன்மாவிற்காக திருப்பலி ஒப்புக்கொடுக்கும் பொருட்டு என் மனைவிக்கு நீர் செய்த உதவிக்கு நன்றி சொல்லிட்டு போகவே வந்தேன். என்னை மீட்ட கிறிஸ்துவின் திருரத்தத்திற்கு நன்றி. நீர் செய்த தாராள உதவிக்கு நன்றி சொல்லிவிட்டு வர கடவுள் எனக்கு அனுமதி அளித்தார் “ என்றார். தொடர்ந்து உருக்கமாக, “ கடவுள் ஒருவர் உள்ளார். மறுவாழ்வு உண்டு, மோட்சம் உள்ளது, நரகமும் உள்ளது “
எனக்கூறிவிட்டு மறைந்தார். இளவரசர் முழங்காலில் விழுந்து கடவுளிடம் மனமுருக மன்றாட ஆரம்பித்தார்.
இது போன்று நிறைய புனிதர்களின் வாழ்வில் உத்தரிக்கும் ஆன்மாக்களைக் நேரிடையாகக் கண்டதுண்டு தந்தை பியோ உட்பட. இதோ புனித. தாமஸ் அக்வினாஸ் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி.
புனித தாமஸ் அக்வினாஸ்க்கு மாரோற்றா ( Marotta) என்ற சகோதரி உண்டு. அவள் 1253-ல் காப்புவா நகரில் சாந்தா மரியா என்ற கன்னியர் மடத்தில் தலைவியாக இருக்கும்போது மரணமடைந்தாள். அச்சமையத்தில் அவரது தமயனான அர்ச்.தாமஸ் பாரீஸ் நகரில் இருந்தார். ஒரு நாள் இரவில் அவருக்கு தன்னைக் காண்பித்த சகோதரி மாரோற்றோ, தாம் உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருப்பதாகவும், தாம் விடுவிக்கப்பட தமக்கு சில திவ்ய பலி பூசைகள் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமது சகோதரியின் ஆன்ம நிலையைக்கண்டு வருந்திய புனித தாமஸ் தமது மாணவர்களையும் தமது இறந்துபோன சகோதரிக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார். சில மாதங்களுக்குப்பின் அர்ச்.தாமஸ் ரோமையில் இருக்கும்போது அவரது சகோதரியின் ஆன்மா மீண்டும் காணப்பட்டு தாம் இப்போது மோட்சத்தில் இருப்பதாகவும், அவர் ஒப்புக்கொடுத்த திருப்பலி பூசைகளுக்காகவும், ஜெபங்களுக்காகவும் நன்றி கூறியது..
மிகுந்த மகிமை பிரகாசத்தோடு தோன்றிய சகோதரியைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அர்ச்.தாமஸ் கடவுள் முன்பாக தனது ஆன்ம நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு மாரோற்றோ, “ நீர் மிகுந்த மகிழ்ச்சியான நிலையில் இருக்கிறீர்கள்.நீங்கள் விரைவில் எங்களிடம் வந்து சேர்வீர். ஆனால் எங்களைவிட மிக உன்னத மகிமை உமக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது “ என்று கூறினாள்.
பின்னர் அர்ச். தாமஸ் இறந்து போன தமது இரண்டு சகோதரிகளின் நிலை என்ன என்று கேட்க, அதற்கு, “ லாண்டுல்ஃபோ (Landulfo) உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்கிறாள். ரெஜின்நால்டோ ( Reginaldo) மோட்சத்தில் இருக்கிறார் என்று கூறி மறைந்தாள்.
அன்பான நண்பர்களே ! மரித்த நம் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் யாரும் நினையாத ஆன்மாக்களை மறவாதீர்கள். அவர்களை நினைக்க அவர்களுக்காய் ஜெப தவங்கள் செய்ய நவம்பர் மாதம் மட்டுமல்ல வருடம் முழுவதும் அடிக்கடி ஜெபதவங்கள், ஜெபமாலைகள் ஒப்புக்கொடுத்தல் செய்து திருப்பலி நிறைவேற்றுங்கள்.
நன்றி உள்ள உத்தரிக்கும் ஆன்மாக்கள் நமக்காக மோட்சத்தில் எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடுவார்கள். அதனால் உங்களுக்கும் ஞான, ஆன்ம பலன் நிறைவாக கிடைக்கும்.
நூல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள, மரியாதைக்குரிய அம்மா பாத்திமா மேரி, கோவை 9994649553;
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !