“ நரகத்தில் விழும் ஆன்மாக்களின் எண்ணிக்கை “
நமது ஆண்டவர் மூன்றாம் நாள் உயிர்தெழுந்து, தம் அப்போஸ்தலர் மேல் திருச்சபையை நிறுவினார். தாம் ஏற்படுத்திய தேவ திரவிய அனுமானங்களை அத்திருச்சபையிடம் ஒப்படைத்து, அவற்றின் வழியாகவும், திவ்ய பலி பூசை, செபமாலைகள், பக்தி முயற்சிகள் வழியாகவும் நமக்குத் தமது வரப்பிரசாதங்களை வழங்கி வருகிறார். நம் கரத்தைப் பிடித்து, நம்மைப் பாதுகாப்பாக மோட்சத்திற்கு அழைத்து வருவதற்காகவும், சகல வரப்பிரசாதங்களையும் நமக்கு பகிர்ந்தளிப்பதற்காகவும் தம் மாதாவையே நமக்குத் தாயாகத் தந்தார். நமக்கு வரும் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்க ஒரு காவல் சம்மனசானவரை நமக்குத் தந்திருக்கிறார். எத்தனை பாவம் செய்தாலும், மனஸ்தாபத்தோடு அவரை நெருங்கிப் போகும்போதெல்லாம், பாவசங்கீர்த்தனத்தின் வழியாக நம்மை மன்னிப்பதோடு இந்தக் கண்ணீர்க் கணவாயாகிய பரதேச வாழ்வில் நமக்குத் திடனாகவும், போஜனமாகவும், வழித்துணையாகவும் தம்மையே நமக்குத் திவ்ய நற்கருணையில் மூலமாக தந்தும் வருகிறார்.
சர்வேசுவரன் தம் இரட்சணியத்திற்காக இவ்வளவையும் செய்து முடித்த பின்பு, “ எனக்கு நீர் தேவையில்லை! நீர் எனக்கு வாக்களிக்கிற அந்த எதிர்கால நித்திய வாழ்வில் எனக்கு நம்பிக்கையில்லை. அது எனக்குத் தேவையுமில்லை! நரகத்தைப் பற்றி எனக்குப் பயமும் இல்லை. நான் நேசிக்கிற இந்த உலக இன்பங்களையும், அந்த பெண்ணையும், இந்த செல்வங்களையும் விட நீர் அதிக அழகுள்ளவராகத் தெறியவில்லை” என்று சொல்லி, பாவத்தைத் தொடர்ந்து செய்து அவரை நிந்தித்துப் பரிகாசம் செய்கிற ஒருவனுக்கு நரகம் கூட குறைவான தண்டனைதான் அல்லவா?
கடவுளை நிந்தித்தால், பரிகசித்தால், நித்திய தண்டனை உண்டு. கடவுள் நம்மைப் போல மூடர் அல்ல. அவரை ஏமாற்ற முடியாது.
புதிய பகுதிக்கு வருவோம் :
கடவுள் இரக்கமுள்ளவர், எப்படியும் கடைசி நேரத்தில் அவரது மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற “மிதப்பான” எண்ணம் கொண்டவர்கள்தான் இன்று ஏராளம் பேர் இருக்கிறார்கள். ஆனால் நரகத்திற்கு தப்பித்து மோட்சம் செல்வோரின் எண்ணிக்கை பற்றி புனிதர்கள் நமக்கு கூறும் உண்மைகள் நம்மை அச்சத்தால் மிரள வைப்பனவாக இருக்கின்றன..
பிரான்சிஸ்கன் சபைத் துறவியாகிய போர்ட் மவுரீஸின் அர்ச். லியோனோர்ட் கூறுவதாவது:
“ எங்கள் சகோதரர்களில் தமது போதகங்களுக்காகவும், பரிசுத்தத்தனத்திற்காகவும் புகழ் பெற்ற ஒரு துறவி ஒரு முறை ஜெர்மனியில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இந்தப் பிரசங்கத்தில் அவர் எந்த அளவுக்கு சரீர அசுத்த பாவங்களின் அருவருப்பான தன்மையைத் தத்ரூபமாக விவரித்துக் காட்டினார் என்றால், ஒரு பெண்மணி மிகுந்த துயரத்திற்குள்ளாகி, எல்லோர் முன்பாகவும் இறந்து விழுந்தாள். அதன்பின் மீண்டும் உயிர் பெற்ற அவள்,
“ நான் கடவுளின் நீதியாசனத்திற்கு முன்பாக நின்ற அதே சமையத்தில் உலகின் எல்லாப் பாகங்களிலிருந்தும் அறுபதாயிரம் மனிதர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள்; அவர்களில் மூவர் மட்டுமே உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு தீர்ப்பிடப்பட்டு மீட்படைந்தார்கள். மற்றவர்கள் எல்லோரும் நரகத்திற்கு தீர்ப்பிடப்பட்டார்கள்” என்று அறிவித்து அனைவரையும் நடுங்க வைத்தாள்.”
திருச்சபைத் தந்தையும், பரிசுத்த வேதபாரகருமான அர்ச். க்றீசோஸ்தோம் அருளப்பர் ஒரு பட்டணத்தில் பிரசங்கம் செய்துகொண்டிருந்தபோது கூடியிருந்த மக்களை நோக்கி,
“ நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இவ்வூரில் எத்தனை பேர் மீட்படைவார்கள்? நான் சொல்லப்போவது மிகப் பயங்கரமானது, ஆனாலும் இதை நான் உங்களிடமிருந்து மறைக்க விரும்பவில்லை. ஆயிரக்கணக்கான மக்களைக் கொண்டுள்ள இந்தப்பட்டனத்தில் நூறு பேர் கூட இரட்சிக்கப்பட மாட்டீர்கள். நான் கூறும் எண்ணிக்கை சற்று அதிகம்தான்” என்று கூறி அவர்களை மிரள வைத்தார்.
அர்ச். வியான்னி அருளப்பர், “ நாம் அனைவரும் இரட்சிக்கப்படுவோமா? நாம் மோட்சத்திற்கு போவாமா? ஐயோ என் பிள்ளைகளே, நமக்கு அதுபற்றி எதுவும் தெறியாது. ஆயினும் இன்றைய நாட்களில் இழக்கப்படுகிற பெருந்திரளான ஆன்மாக்களைக் கண்டு நான் நடுங்குகிறேன். இதோ, குளிர்காலம் நெருங்கி வருகையில் மரங்களிலிருந்து விழும் இலைகளைப் போல அவர்கள் நரகத்தில் விழுந்து கொண்டிருக்கிறார்கள் “ என்று கண்ணீரோடு கூறினார்.
அர்ச். வின்சென்ட் ஃபெரர் விவரித்துள்ள மற்றொரு சம்பவம் :
லயோன்ஸ் துணை ஆயர் ஒருவர் தமது பதவியைத் துறந்து, வனாந்தரமான ஓரிடத்திற்கு சென்று தவ வாழ்க்கையில் ஈடுபட்டார். அர்ச்.பெர்நார்து இறந்த அதே நாளில் இவரும் இறந்தார். தமது மரணத்திற்கு பிறகு, அவர் தமது ஆயருக்குக் காணப்பட்டு, “ ஆயரவர்களே, நான் மரித்த அதே நேரத்தில், உலகில் முப்பத்து மூவாயிரம் பேர் இறந்தார்கள். இவர்களில் பெர்நார்தும் (இவர் ஒரு மாதா பக்தர்) நானும் மட்டுமே எவ்வித தாமதமுமின்றி மோட்சத்திற்கு சென்றோம். மூவர் உத்தரிக்கும் ஸ்தலம் சென்றார்கள். மற்றவர்கள் அனைவரும் நரகத்தில் விழுந்தார்கள்.
நன்றி : மாதா பரிகார மலர், மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. மாதா பரிகார மலர் இதழ் ( இருமாதங்களுக்கு ஒருமுறை) விரும்புவோர், தொடர்பு கொள்க சகோ.பால்ராஜ், Ph. 9487609983, பிரதர் கபரியேல், ph. 9487257479,
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !