சேசு சுவாமியின் முக்கிய மூன்று சீடர்களில் ஒருவர் அர்ச்.சந்தியாகப்பர் :
சேசு தன் முக்கியமான தருணங்களில் மிகவும் அருகில் இருக்க அனுமதிக்கப்பட்டவர்களில் அர்ச்.சந்தியாகப்பரும் ஒருவர். அதாவது சேசு சுவாமியின் முதல் வட்ட சீடர்களில் ஒருவர். சேசுவின் இருதயத்திற்கு நெருக்கமானவர்.
சேசு சுவாமி இவர்களை மிக அருகில் வைத்ததற்கு காரணம் முக்கியமான வேளைகளில் இவர்கள் அருகில் இருக்கும்போது இன்னும் கொஞ்சம் ஆறுதலாக, தோழமையாக, வசதியாக உணர்ந்திருக்க வேண்டும். மற்றும் தன்னுடைய ஒரு சில வெளிப்பாடுகளை இவர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் ஏதாவது காரணம் இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு சில சம்பவங்களை இப்போது பார்ப்போம்.
தொழுகைக் கூடத்தலைவனான யாயிரின் மகளை உயிருடன் எழுப்பியபோது உடனிருந்தவர்.
அந்த ஜெபக்கூட்டத்தலைவனின் வேண்டுகோளுக்கு இணங்கி சாகும் தருவாயில் இருந்த அவரின் மகளை குணப்படுத்த செல்லும் போது கூட்டம் அவரை நெருக்கி கொண்டு வந்ததாலும், 12 வருடங்கள் பெரும்பாடு நோயுள்ள பெண்ணை குணமாக்கியதாலும் கொஞ்சம் நேரமாகிவிட்டது அதற்குள் அவரின் மகள் இறந்துவிட்டாள் என்று செய்தி. ஜெபக்கூட்ட தலைவனின் விசுவாசத்தோடு இருக்க வேண்டும்.
அந்த ஜெபக்கூட்டத்தலைவனின் விசுவாசத்தை உறுதிசெய்துவிட்டு புதுமை செய்ய புறப்படும்போது, “அர்ச்.இராயப்பர் (பேதுரு), அர்ச்.சந்தியாகப்பர் (யாக்கோபு), அர்ச்.சந்தியாகப்பரின் சகோதரர் அர்ச்.அருளப்பரை (யோவான்) தவிர வேறு யாரையும் தம்முடன் வர விட வில்லை “ என்று சொல்கிறது நற்செய்தி (மாற்கு 5 : 36-38).
கண்டிபாக அதில் ஒரு காரணம் இருக்க வேண்டும். அந்த புதுமையை நம் ஆண்டவர் இயேசு மெசியா கண்டிப்பாக செய்வார் என்று துளி அளவு கூட சந்தேகமற்ற மனநிலையை இந்த முதல் வட்ட சீடர்கள் கொண்டிருந்திருந்துப்பார்கள் என்பது கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்..
சேசு சுவாமியின் உறுமாற்றத்தை கண்களால் காணும் பேறுபெற்றவர் :
“ சேசுகிறிஸ்து இராயப்பரையும், சந்தியாகப்பரையும், அவர் சகோதரர் அருளப்பரையும் அழைத்துக்கொண்டு ஓர் உயர்ந்த மலைக்கு தனிமையில் ஒதுக்கமாக கூட்டிக்கொண்டு போய் அவர்களுக்கு முன் உருமாற்றம் அடைந்தார் “ ( லூக்காஸ் 9:28-36, மத் 17: 1-13, மாற்கு 9; 2-13)
தன்னைக் கடவுளின் மகன் என்று வெளிப்படுத்தும் முக்கியமான தருணத்தில் நம் சந்தியாகப்பரும் உடன் இருந்திருக்கிறார். எப்பேற்பட்ட காட்சியை காணும் பேறு நம் புனிதருக்கு கிடைத்திருக்கிறது.
ஆண்டவரின் உறுமாற்றத்தோடு அர்ச்.மோயிசனையும், அர்ச்.எலியாசையும் காணும் பேறு பெற்றார். அதோடு கூட “ இவரே என் அன்பார்ந்த மகன்; இவருக்கு செவிசாயுங்கள் “ என்ற பிதாவின் குரலையும் கேட்கும் பேறு பெற்ற பாக்கியமான புனிதர் நமது படை மிரட்டியார்
கெத்சமனி தோட்டத்தில் இயேசுவின் வேதனையை கண்ணுற்றவர் :
பின்பு கெத்சமனி என்னும் தோட்டத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் சீடர்களிடம்
“ நான் ஜெபிக்குமளவும் இங்கே இருங்கள் என்று சொல்லி இராயப்பரையும், சந்தியாகப்பரையும், அருளப்பரையும் தம்மோடு அழைத்துச்சென்றார் ( மாற்கு 14: 32-35).
சேசு சுவாமியின் ஜெபமும், வேதனையும், இரத்த வியர்வையும் அதிக நேரம் நீடித்திருக்க வேண்டும். சந்தியாகப்பர் இராயப்பரோடும், தன் சகோதரர் அருளப்பரோடும் தூங்கியிருந்தாலும் கொஞ்ச நேரமாவது ஆண்டவர் படும் வேதனையை பார்த்திருப்பார். பெரிய வியாழன் அன்று ஆண்டவரை விட்டு விட்டு சென்ற பின்பும், ஆண்டவர் பாடு படும்போது தனியே மறைந்திருந்த போதும் அவர் மனிதில் நின்று அவரை வாட்டி எடுத்த ( குற்ற உணர்வுகளுக்கு மத்தியில்) காட்சி ஆண்டவரின் இரத்த வியர்வையாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
ஜெபம் : அன்பான சேசுவே ! உம்முடைய முக்கியமான தருணங்களில் உம்முடன் இருக்கும் பேற்றினை அர்ச்.சந்தியாகப்பருக்கு அளித்தீரே ! அதே போல் எங்கள் வாழ்வின் முக்கியமான தருணங்களில் உம் அன்புச்சீடரான அர்ச்.சந்தியாகப்பரை எங்களுடன் இருக்கச்செய்து, எங்களுக்கு எல்லா வித பாதுகாப்பையும், உடனிருப்பையும், திடத்தையும், ஆசீரையும் அவர் வழியாக எங்களுக்கு தாரும் –ஆமென்.
எழுவரிலும் ஒருவர்.. அது அடுத்த பகுதியில்.. மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு..
சேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !