ஆண்டவருடைய பரிசுத்ததனம்
“ ஆண்டவர் எந்தப் புண்ணியத்தை எந்த அளவுக்கு எனக்குத் தர விரும்புகிறாரோ, அந்த புண்ணியத்தை அந்த அளவுக்குப் பெற்றுக் கொள்வதில் நான் திருப்தியடைகிறேன். ஆனால் பரிசுத்ததனத்தைப் பொறுத்தமட்டில் எந்த அளவுக்கு அதிகமாகப் பெற்றுக்கொள்ள இயலுமோ அந்த அளவுக்கு அதிகமாகப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதனை ஆண்டவரிடம் கெஞ்சிக்கேட்பேன் “ என்று புனிதை அடிக்கடி கூறுவாள்.
உண்மையில் ஒரு மனிதப் பிறவி எந்த அளவுக்கு பரிசுத்த தனத்தை அடைய முடியுமோ, அந்த அளவுக்கு பரிசுத்ததனத்தை அடைந்தாள் நமது புனிதை. இக்கொடை புனிதை வார்த்தைப்பாடு கொடுத்த பின்பு வந்த வரப்பிரசாத ஆண்டான 1585 ஜூன் மாதம் மன்றாடியதாகத் தெறிகிறது.
“ ஓ பரம பிதாவே, தேவரீர் பரிசுத்ததனத்தைப் பற்றி ஏராளமாகப் பேசுகிறீர்ர். ஆனால், எதையும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. சிறிதேனும் அதைப்பற்றி புரிந்துகொள்ள விரும்புகிறேன், தந்தையே.” அதற்கு பிதாவானவர்,
“ எனது வார்த்தையானவரின் மணவாட்டியே, நீ கேட்பது மிக மிக உயரமானது. இதனை நீ ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. இந்த பரிசுத்ததனம் என்பது என் உடைமை. இது எனது தெய்வீகம். இதனை எந்த மனிதனாலும் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. இந்த நிலையில்தான், இந்த மாசற்ற நிலையில்தான், நான் எனது சாயலாக உங்களைப் படைத்தேன். எனது பரிசுத்ததனத்தில் பங்குபெறுவதினால் நீங்கள் இன்னொரு நானாகவே இருந்தீர்கள். இதனைப் படைத்தவரான என்னால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இதில் நிலைத்து நிற்பதற்கு மனிதனுக்கு ஞானமிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
இந்த பரிசுத்ததனம் இழக்கப்பட்டுவிட்டதால் மனுவுருவெடுத்த எனது வார்த்தையானவரின் இரத்தத்தில், அதாவது ஞானஸ்நானம், பாவசங்கீர்த்தனம் என்ற தேவ திரவிய அனுமானங்களின் வழியாக கழுவினால் மீண்டும் இந்தப் பரிசுத்ததனத்தை அடையலாம். இந்த இரத்தத்தின் வழியாக ஒரு படைப்பு என்னோடு ஐக்கியமாகலாம். நினைவாலோ, வார்த்தையாலோ, செயலாலோ அல்லது கண்களை என்னிடமிருந்து திருப்புவதாலோ இந்த ஐக்கியத்தை குலைக்காத வகையில் இந்தப் பரிசுத்ததனத்தை எனது வார்த்தையானவரின் இரத்தம் ஒரு ஆன்மாவில் உண்டாக்க முடியும் “ என்று புனிதையிடம் கூறினார்.
அதற்கு புனிதை, “ ஓ நித்திய பிதாவே, இந்த பரிசுத்ததனத்தை எனக்கு அருள்வீரானால் நான் அதனை எனக்கென்று வைத்துக்கொள்ளாமல் உமது படைப்புகளுக்கெல்லாம் அதனைத் தருவேன்” என்று பிதாவிடம் கூறினாள். புனிதையின் ஏக்கத்தைக் கண்ட ஆண்டவர் இத்திரவியத்தை அவளுக்கு அருள மிகவும் ஆசை கொண்டார்.
“ அப்படியானால் மகளே, ஒரு ஆன்மா சிறிய அளவு பரிசுத்ததனத்தைப் பெற்றுக்கொண்டு, அந்த ஆன்மா சாத்தானை நான் மன்னிக்குமாறு என்னிடம் கெஞ்சுமானால், சாத்தானும் மனம்திரும்ப விரும்பி தனது பிடிவாதத்தை விடுமானால், இந்த ஆன்மாவின் மீது நான் கொண்டுள்ள அன்பின் காரணமாக நான் சாத்தானை மன்னித்துவிட தயாராக இருக்கிறேன். அந்த அளவுக்கு நான் அந்த ஆன்மாவில் மகிழ்ச்சிகொள்வேன். இந்த பரிசுத்ததனத்தை ஆன்மாக்கள் விரும்ப வேண்டும், கேட்க வேண்டும், இதற்கு தன்னைத் தகுதியாக்கவேண்டும் என்று கெஞ்சுகிறேன்” என்று பிதாவானவர் புனிதையிடம் கூறினார். ( கடவுளின் ஆசையை, வல்லமை மிக்க அவரது எளிமையை, இரக்கத்தை, அன்பை சிறிது தியானித்தால் நாம் உறைந்து போவோம்.) ஆண்டவரின் பரிசுத்ததனம் எவ்வளவு வல்லமைமிக்கது என்றால், அதனை விரும்புவது கூட பரிசுத்ததனத்தின் வாசனையை கொண்டுவர வல்லது.
நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479, சகோ. ஜேசுராஜ் 9894398144.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !