“ உங்கள் காவல் தூதர்தான் காரை ஓட்டி வந்தார் “
ஃபாலோ நகரத்தைச் சேர்ந்த அட்டிலியோ த சாங்க்திஸ் என்னும் வழக்கறிஞர் பொலோஞ்ஞாவிலிருந்த தம் வீட்டிற்கு காரில் தன் மனைவி மக்களோடு திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் அவர் ஸ்டியரிங்கைப் பிடித்தபடியே உறங்கி விட்டார். தம் வீட்டிற்கு இன்னும் சில மைல் தூரம் இருந்தபோது விழித்துக் கொண்ட அவர், “ என் காரை யார் ஓட்டியது ? “ என்று கேட்டார். அதிர்ந்து போன அவரது மனைவி :
“ நீங்கள் அசையாமல் இருந்தீர்கள். நாங்கள் என்ன கேட்டாலும் பதில் சொல்லவில்லை. வழியில் கடைசி வினாடியில் பல மோதல்களை நீங்கள் தவிர்த்தீர்கள். இந்த முறை நீங்கள் கார் ஓட்டிய விதம் வழக்கத்தை விட வித்தியாசமாக இருந்தது “ என்றார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பாத்ரே பியோவை சந்திக்க அவர் சென்ற போது, பியோ தொலைவிலிருந்தே, நீங்கள் உறங்கி விட்டீர்கள். உங்கள் காவல்தூதர்தான் காரை ஓட்டி வந்தார் “ என்றார். மர்மம் விலகிவிட்டது.
அன்புக்குரிய கத்தோலிக்க விசுவாசிகளே ! நம் ஒவ்வொருவருக்கும் இதே போல ஒரு காவல் தூதரைக் கடவுள் தந்திருக்கிறார். என்பதை இன்று நாம் நினைத்துப் பார்ப்பது கூட இல்லை. உண்மையில் நமக்கு குறிக்கப்பட்ட மரண நேரம் வரும் வரை அவர் தொடர்ந்து நம் அருகில் இருந்து நம் ஆன்ம சரீர ஆபத்துக்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறார். நம் நட்புக்காகவும், அன்புக்காகவும் அவர் ஏங்குகிறார் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. எனவே, இது வரை நாம் எப்படி இருந்தாலும், இனி பரலோகமே நமக்குத் தந்திருக்கிற இந்த மாபெரும் கொடையை, எந்த சமையத்திலும் நம்மைக் கைவிடாத, உண்மையும், பிரமாணிக்கமும் உள்ள நண்பரை மதிக்கவும், அவரைப் பயன்படுத்திக் கொள்ளவும் இனியாவது நாம் முயற்சி செய்வோம்.
நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787
ஜெபம் : “ எனக்கு காவலாக இருக்கிற சர்வேசுவனுடைய பரிசுத்த சம்மனசானவரே ! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து நடத்தி ஆண்டருளும் ஆமென்“
இச்செபத்தை அடிக்கடி ஜெபிப்போம். அட்லீஸ்ட் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஜெபிப்போம்… உங்கள் அனைவருடைய காவல் சம்மனசுக்களுக்கும் வணக்கம்…
குறிப்பு : சென்ற பகுதியில் (பகுதி.6) இரண்டு புதுமைகளும் நடைபெற்ற வருடம் 1912-தான் தவறுதலாக 1972 என்று குறிப்பிட்டுள்ளேன். மன்னிக்கவும்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !