திவ்ய பலி பூசை
(இன்று திவ்ய நற்கருணையும், திவ்ய பலி பூசையும் ஏற்படுத்தப்பட்ட நாள்)
இவ்வுலகத்தை விட்டு நாம் புறப்பட்டதும், நம் ஆன்மாக்களுக்காக திவ்ய பலி பூசை நிறைவேற்றப்படுவதை விட அதிகமாக நாம் வேறொன்றையும் ஆசிக்க மாட்டோம். பீடத்தின் திவ்ய பலி பூசையே அனைத்திலும் அதிக வல்லமையுள்ள மத்தியஸ்த ஜெபமாக இருக்கிறது. ஏனெனில் அது ஒவ்வொரு ஜெபத்திற்கும், தவ முயற்சிக்கும், நற்செயலுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. பூசை என்பது சிலுவையில் நமதாண்டவர் ஒப்புக்கொடுத்த அதே பலிதான் என்பதையும், இப்போது அப்பலியை அவர் அதன் அளவற்ற பரிகார மதிப்புடன் ஒப்புக்கொடுக்கிறார் என்பதையும் நாம் நினைவு கூர்வோம் என்றால், மேற்கூறிய காரியத்தைப் புரிந்து கொள்வது நமக்கு கடினமாயிராது. பலியிடப்பட்ட சேசு “ நம் பாவங்களுக்குரிய பரிகார பலியாக இருக்கிறார் ( 1அரு.2:2). அவருடைய திவ்ய இரத்தம் “ பாவ மன்னிப்புக்காக் “ சிந்தப்படுகிறது ( மத்.26:28).
இந்தப் பயன்மிக்க திவ்ய பலியில் நாள்தோறும் அன்போடும், தாழ்ச்சியோடும், அர்ப்பண உணர்வோடும் பங்குபெற நாம் உண்மையாகவே முன்வருவோம் என்றால், நரகத்தை மட்டுமல்ல, மாறாக உத்தரிக்கிற ஸ்தலத்தின் சுத்திகரிக்கிற நெருப்பையும் கூட தவிர்த்து விடுவோம் என்பதில் நாம் உறுதியாயிருக்கலாம்.
நம் அனுதின வாழ்வில், திவ்ய பலி பூசையை மற்ற எந்த நன்மைக்கும் மேலான நன்மையாக நாம் கொள்ளவேண்டும். ஏனென்றால் அர்ச். பெர்னார்ட் கூறுவது போல, “ ஒருவன் தன் உடமையெல்லாம் ஏழைகளுக்கு வழங்கி, உலக முழுவதும் திருயாத்திரை சென்று சம்பாதிக்கக் கூடிய ஒட்டு மொத்த பேறுபலனைவிட, ஒரே ஒரு பூசையில் பக்தியோடு பங்கு பெறுவதன் மூலம் அதிகம் சம்பாதிக்கிறான்”. இது வேறு எப்படியும் இருக்க முடியாது. எனெனில் பூசையின் அளவற்ற மதிப்பை உலகிலுள்ள வேறு எதுவும் கொண்டிருக்க முடியாது. மனிதன் உன்னதமான முறையில் கடவுளை மகிமைப்படுத்தவும், சந்தேகத்திற்கு இடமின்றி தன் ஆத்துமத்தை காத்துக் கொள்ளவும் திவ்ய பலி பூசையை விட அதிக உன்னதமான சாதனம் வேறெதுமில்லை.
தேவத் திரவிய அநுமானங்கள் :
பாவசங்கீர்த்தனம், தேவ நற்கருணை ஆகிய தேவத்திரவிய அநுமானங்களை அடிக்கடியும், அவஸ்தைப்பூசுதலை அவசர நேரத்திலும் தவறாமல் பெறுவது ஆத்துமத்தை எப்போதும் உயிருடன் வைத்திருக்கும் உபாயமாக இருக்கிறது. அர்ச்சிஷ்ட்டவர்களில் சிலர் தினமும் பாவசங்கீர்த்தனம் செய்தார்கள். சாவான பாவங்களின் மன்னிப்புக்காக அல்ல. எப்போதாவது தங்கள் ஆத்துமங்களில் அற்பப்பாவம் என்னும் தூசி படிந்தால், அதை சுத்திகரித்துக்கொள்ளும்படி அப்படிச் செய்தார்கள். பாவசங்கீர்த்தனம் அவர்களுக்கு பரிசுத்தத்தனத்தின் கருவியாகவும், தேவ வரப்பிரசாதத்தின் அற்புத வாய்க்காலாகவும் இருந்தது.
ஆனால் இன்று, கத்தோலிக்கர்களில் பெரும்பாலானோர் இந்த அற்புத அனுமானத்தை, தேவ திரு இரத்தம் நிறைந்த, செந்தூரம் போன்ற பாவத்தால் சிவந்திருக்கும் ஆத்துமத்தை வெண்பனி போல சுத்தமுள்ளதாக்கும் அதிசய தடாகத்தை, ஒருபோதும் நினையாமல் பாவத்திலேயே நிரந்தரமாக ஜீவிக்கும் அவலநிலையே எங்கும் காணப்படுகிறது. இந்த உத்தம சாதனத்தை முக்கியமானவர்கள் முதலாய் பரிகசிக்கும் பரிதாப நிலை கூட இன்று எங்கும் நிலவுக்கிறது.
இதற்கு மாறாக, இந்தக் கொடிய நரகத்திலிருந்து மெய்யாகவே உன்னைக் காத்துக்கொள்ள விரும்புவாயானால், உடனே பாவசங்கீர்த்தன தொட்டிக்கு வா. வந்து, உன் திவ்ய கர்த்தர் தமது திருஇரத்தத்தால் உன் ஆத்துமத்தைக் கழுவும்படி அதை அவரிடம் கையளிப்பாயாக. முடிந்தவரை சாவான பாவத்தை விலக்குவதில் விழிப்பாயிருந்து போராடு. ஒருவேளை அதில் விழும் நிர்ப்பாக்கியம் நேரிடுமானால், தாமதமின்றி உத்தம மனஸ்தாபத்தோடும், இனி பாவம் செய்வதில்லை என்ற உறுதியான பிரதிக்கினையோடும் குருவிடம் வந்து உன்னை தூய்மையாக்கிக் கொள். அப்போது நீ பத்திரமாயிருப்பாய். மரணம் எப்போது நேரிட்டாலும் அது உன் நித்திய பேரின்பத்தின் தொடக்கமாயிருக்கும்.
நன்றி : மாதா பரிகார மலர், மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. மாதா பரிகார மலர் இதழ் ( இருமாதங்களுக்கு ஒருமுறை) விரும்புவோர், தொடர்பு கொள்க சகோ.பால்ராஜ், Ph. 9487609983, பிரதர் கபரியேல், ph. 9487257479,
சிந்தனை : எவ்வளவு ஆசீர்வாத்தையும், வரப்பிரசாத்தையும், வரங்களையும், கொடைகளையும் அள்ளித்தரும் தெய்வீக திருப்பலியில் நாம் பங்கேற்ற விதத்தை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும்.. அலட்சியம், அசட்டைத்தனம், கடமைக்கு, பலர் பாதியில்.. அகத்தில் தூய்மையில்லாமல்.. புறத்தில் ஆடம்பரம்.. ஆடையில் ஒழுக்கமில்லை… செருப்புக்காலோடு ஆலயத்தில்.. அலட்டிக்கொள்ளாமல் அலைபேசி ஒலித்தவுடன் வெளியே செல்வதும்.. உள்ளே வருவதும், ஆண்டவரை வாங்கியவுடன் நன்றி வழிபாட்டுக்குக் கூட நேரம் ஒதுக்காமல். அறிக்கை.. ஆரவாரம்.. கைதட்டல்கள்.. பரிசு வழங்குதல்.. அவரோ அம்போவென்று ஒரு மூலையில்.. நம் இதய ஒரத்தில்.. ஒண்டியாக.. ஓட்டாண்டியாக… வா என்று கேட்கக்கூட வார்த்தை இல்லை.. ( இப்போது கிறிஸ்துவின் ஆத்துமமே ஜெபத்தை சேர்த்திருப்பது ஆறுதல் ஆனாலும் காணாது..)
அறிக்கை வாசிக்கக் கூடாது என்றில்லை.. எல்லாவற்றிற்கும் ஒரு ஒழுங்கு இருக்கிறது.. திருச்சபையின் ஒழுங்கு. அதை அனுசரித்தாலே போதும்..
முக்கியமானவர் முக்கியமில்லாமல் போய்.. முக்கியமில்லாதவைகள் முக்கியம் ஆனதால் முக்கியமானது தொலை தூரத்தில்..
என்று அருகில் வருமோ..??
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !