தேவ நற்கருணை :
கடும் பாவ சோதனைகள் உன்னைக் கலக்குகிறதா ? நித்தியத்தைப் பற்றிய அச்சத்தால் நீ உன் ஆத்துமத்தின் சமாதானத்த இழந்து போகிறாயா? நம் இரட்சகர் உனக்காகக் காத்திருக்கிற திருப்பந்திக்கு விரைந்து வந்து அவரைப் பெற்றுக்கொள். திவ்ய நற்கருணை உட்கொள்ளும் ஒரு வாய்ப்பைக் கூட இழக்காதபடி கவனமாயிரு. அப்போது நீ அவரால் பொதியப்பட்டு பத்திரமாயிருப்பாய். அவரே உன் சத்துருவோடு உன் சார்பாகப் போராடி வெல்லுவார். இதுவே அவரது மகிழ்ச்சி! ஏனெனில் உன் ஆத்தும மீட்பிற்காகவே அவர் மனிதனாய் அவதரித்தார். அதற்காகவே சிலுவை மரணத்திற்குத் தம்மை கையளித்ததோடு, அளவற்ற கொடிய வியாகுலத்திற்கு தம் தேவ மாதாவையும் உட்படுத்தினார். நம் இரட்சணியமே அவரது உன்னத சந்தோசம்.
ஜெபமாலை :
பூசைக்கு அடுத்து, ஜெபமாலை உத்தமமான ஆன்ம இரட்சண்ய வழியாக இருக்கிறது. குறிப்பாக, பாவம் மலிந்து, எங்கும் பெருக்கெடுத்து, பெரும் வெள்ளத்தைப் போல ஆத்துமங்களை நரகத்திற்கு அடித்துச் செல்லும் இக்காலத்தில், குற்றம் பெருகின இடத்தில் வரப்பிரசாதத்தை அதிகமாகய்ப் பெருகச் செய்யும் ( உரோ.5:20) தேவ வல்லமையின் கருவியாக ஜெபமாலை நம் இனிய அன்னையால் நமக்குத் தரப்பட்டுள்ளது. அநுதினமும் ஜெபமாலையைக்கொண்டு தங்கள் திவ்ய அன்னையை வாழ்த்துகிறவர்கள், அதன் அதிசய வல்லமையைக் கண்டு வியக்கிறார்கள். அதன் முன் பசாசின் ஆயுதங்கள் செயலற்று வீழ்கின்றன. நரகத்தின் அடித்தளம் வரையும் ஜெபமாலை நடுக்கத்தைப் பாய்ச்சுகிறது. பக்தியோடும், தியானத்தோடும் அனுதினமும் ஜெபமாலை ஜெபிக்கிற ஒருவனை சோதிக்க முதலாய் பசாசு துணிவதில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.
“ நரகத்திற்கு எதிரான வலிமையுள்ள கேடயமாக இருக்கும் என் ஜெபமாலை தீய பழக்கங்களை அழிக்கும். பாவத்திலிருந்து விடுவிக்கும். தப்பரைகளை ஒழிக்கும் “ என்பது ஜெபமாலை வாக்குறிகளில் வரும் ஒன்றாக இருக்கிறது. ஆத்துமம் பாதுகாப்பாக மோட்சத்திற்கு ஏறிச் செலவதற்கான ஏணி இந்த ஜெபமாலை.
எனவே முடிந்த வரை தினமும் சந்தோச, துக்க, மகிமை தேவ இரகசியங்கள் அடங்கிய முழு ஜெபமாலையையும் நாம் ஜெபிக்க வேண்டும்.
“ ஜெபிக்காத ஆத்துமம் உயிர்வாழ முடியாது “ என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார். “ஜெபிக்காமல் புண்ணிய வாழ்வு நடத்துவது இயலாத காரியம் “ அர்ச். கிறீசோஸ்தோம் அருளப்பர் கூறுகிறார். ஜெபம் ஆத்துமத்தை கடவுளை நோக்கி உயர்த்துகிறது. அவரோடு அதை ஒன்றாகப் பிணைக்கிறது. மாம்சம் பலமற்றது. ஆகவே சோதனைகளை ஜெயிப்பதற்கு விழிப்பாயிருந்து ஜெபிப்பது அவசியமாயிருக்கிறது ( மத். 26:41). ஆத்துமம் ஜெபத்தைக் கைவிடுவது அதன் நித்திய அழிவின் தப்பாத அடையாளமாயிருக்கிறது. ஆனால் ஜெபத்தில் நிலையாயிருக்கிற ஆத்துமத்தை நோக்கி சத்துருவால் எய்யப்படும் சோதனையின் அம்புகள் முனை மழுங்கி பலமிழந்து விழுகின்றன.
நன்றி : மாதா பரிகார மலர், மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. மாதா பரிகார மலர் இதழ் ( இருமாதங்களுக்கு ஒருமுறை) விரும்புவோர், தொடர்பு கொள்க சகோ.பால்ராஜ், Ph. 9487609983, பிரதர் கபரியேல், ph. 9487257479,
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !