சாத்தானின் பகைமை… மாதாவின் தோழமை…
அன்பான வாசகர்களே.. புனிதர்களுக்கு எப்போதும் வரமும், வரப்பிரசாதங்களும், புதுமை செய்யும் ஆற்றல் மட்டும் நம் ஆண்டவர் கொடுப்பதில்லை… அவர்களுக்கு சோதனைகளை சில நேரங்களில் அளவுக்கு அதிகமாகவே கொடுப்பார்.. அது எது மாதிரி சோதனை என்றால் நம் ஆண்டவருக்கு கல்வாரியில் மோட்சம் அடைக்கப்பட்டதே அது போன்ற சோதனை. என் அப்பா இருக்காரு அவரு எல்லாத்தையும் பார்த்திக்குவாரு.. என் அப்பா.. என் பிதானு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த வார்த்தையையும் சொன்னார்..
“ என் கடவுளே.. என் கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர் “ அப்படியானால் ஆண்டவருக்கும் மோட்சம் சிறிது நேரம் அடைக்கப்பட்டது.. நம் ஆண்டவர் பட்ட பாடுகளை விட எந்த புனிதர்களும் அதிகமாக பாடுகள் படவில்லை என்றாலும் அனைவரும் அவர் பாடுகளில் பங்கேற்றனர்..
இப்போது சொல்லவருவது என்னவென்றால் சோதனை என்றால் சாதாரன சோதனைகள் அல்ல.. ஆன்ம இருள்.. ஆன்மாவை இருள் கவ்விக்கொள்ளும் சர்வேசுவரன் நம் அருகில் இருக்கிறாரா இல்லையா என்று தோன்றும்.. அந்த அளவுக்கு கடுமையான சோதனையாக இருக்கும்.. அந்த நேரத்தில் எதிரியான பிசாசின் தாக்குதல் மிகக் கொடுமையாக இருக்கும்..
புனித பியோவுக்கு ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது.. சில நேரங்களில் அவர் நரகத்தில் இழுத்துக்கொண்டு செல்லப்படுவதைக் கூட உணர்ந்திருக்கிறார்.. புனித அன்னை தெரசாவும் ஆன்ம இருளை அனுபவித்திருக்கிறார்..
இதோ நம் புனிதைக்கு சோதனைக் காலம் ஐந்து ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது… பார்க்கலாமா?
சாத்தானின் பகைமை :
புனிதைக்கு ஆண்டவர் தந்த பாவப்பரிகார முயற்சிகள் போதாது என்பதுபோல் அவளைப் பாவப்பொறுத்தலுக்கான பலிப்பொருளாக்க அவர் திருவுளங்கொண்டார். மகிழ்ச்சியோடும், தாராள உள்ளத்தோடும் பலியாக விரும்பிய இந்த இளம் கன்னிகையின் வாயிலிருந்து எந்த ஒரு முறைப்பாடும் வரவில்லை. தேவ நீதியின் பாரம் அவளை அழுத்தியபோதும் அன்பின் பாடலைத் தொடர்ந்து பாடினாள்.
“ சாவை அல்ல.. துன்புறுவதையே விரும்புகிறேன்… “ என்ற அவள் மெல்லிய பாடல் அவதிப்படுவதைவிட சாவதே மேல் என்று அங்கலாய்க்கும் உலக மாந்தரை அதிர்ச்சியடையச் செய்தது,
நமது புனிதைக்கு ஒரு பயங்கரமான சோதனைக்காலத்தை அனுப்பப்போவதாகவும், அது ஐந்து ஆண்டுகள் நீடித்திருக்கும் என்று பன்முறை ஆண்டவர் தெறிவித்திருந்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் நரகக்கூலிகளுக்கு அவள் மீது அதிக வல்லமை தரப்படும் என்றும், அவை அவளை சூழ்ந்துகொண்டு ஏராளமான தந்திர சோதனைகளை அவள் மீது ஏவுமென்றும், அவைகளின் அருவருப்பான, பயங்கரமான உருவங்களை தன் ஊனக் கண்களால் பார்க்கக்கூடுமென்றும் அவைகள் அவளை நேரடியாக ( மன ரீதியாக மட்டுமின்றி, உடல் ரீதியாகவும்) தாக்கும் என்றும் ஆண்டவர் அறிவித்திருந்தார். சிங்கக்குகையில் போடப்பட்ட தானியேல் போல் அவளும் தேவ நீதியால் கைவிடப்பட்டது போல் நரக அரக்கர்கள் முன் வீசப்படுவாள் என்றும் பேய்களின் பயமுறுத்தலைக்கண்டு, ஐயோ அவைகள் என்னை விழுங்கப்பார்க்கின்றன என்று அனைவரும் கேட்கும் வண்ணம் அலறுவாள் என்றும் தெறிவித்திருந்தார். ஆனால்,
“ மகளே, நீ அஞ்ச வேண்டாம். அவை உன்னை விட வல்லமை வாய்ந்தவையாக இருந்தாலும், நீ உன்னுடைய பிரமானிக்கத்தை நிரூபிப்பாய். பயங்கரமான உருவில் அவைகள் வந்தாலும், படமெடுக்கும் பாம்பாக வந்தாலும் நீ அவற்றை வென்று விடுவாய் “ என்றார் பரம பிதா.
ஆயினும் இவ்வச்சத்திற்குரிய சோதனையை அனுப்புவதற்கு முன், அவளை இஸ்பிரீத்துசாந்துவானவரின் (பரிசுத்த ஆவி) கொடைகளால் பலப்படுத்த ஆண்டவர் சித்தங்கொண்டார். எட்டு நாட்கள் இரவும் பகலும் அவள் தொடர்ச்சியாக பரவசமாயிருந்தாள். கட்டளை ஜெபம் சொல்லவும், சிறிதளவு உணவு உட்க்கொள்ளவுமே அவள் தன்னிலைக்கு வந்தாள். இந்த பரவசத்தின் போது அவள் பரம பிதாவோடும், அவளது மணவாளரோடும் நெருக்கமாக உரையாடினாள். இந்த தயாரிப்பின் போது சேசு அவளிடம்,
“ நான் உன்னிடமிருந்து, எனது வரப்பிரசாத்தை அல்ல, மாறாக எனது வரப்பிரசாதத்தை நீ உணர்கிறாய் அல்லவா, அந்த உணர்வை எடுத்துவிடுவேன். இது பரம பிதாவுக்கும், சம்மனசுக்களுக்கும், புனிதர்களுக்கும் மகிழ்ச்சியையும், சாத்தானுக்கு குழப்பத்தையும், உனக்கு உதவியையும் தரும்” என்றார்.
இருப்பினும் ஒரு படை வீரனுக்கு பதவி உயர்வு அளிக்கும்முன் அவனை சோதிப்பதுபோல் இந்த ஐந்தாண்டு சோதனை இருக்கும் என்ற ஆண்டவர்,
“ நான் உன்னைவிட்டு அகன்றதுபோல் தோன்றினாலும், நான் இப்போது இருப்பதைவிட உனக்கு நெருக்கமாகவும், நீ எனக்கு நெருக்கமாகவும் இருப்பாய்” என்றார்.
“ ஓ பரிசுத்தரே, நான் இந்த கசப்பான சோதனைக்காக ஏங்குகிறேன் “ என்றாள் புனிதை.. மேலும் அர்ச். சின்னப்பரின் வார்த்தைகளில்,
“ உமது வரப்பிரசாதம் எனக்குப் போதும் “ ( 2 கொரி.12:9) என்று பதிலுரைத்தாள்.
1585-ம் ஆண்டு , ஜூன் மாதம் 15-ம் தேதி, சனிக்கிழமையன்று, பரவசத்தின் போது மிகுந்த சத்தத்துடன், “ மகிழ்ச்சியின் காலம் முடிந்தது; சோதனையின் காலம் துவங்கியது “ என்றாள். மறுநாள் பரிசுத்த தமத்திருத்துவத்தின் திருநாளன்று, பரவச நிலையிலிருந்த அவள், ஒரு பெருமூச்சுடன் சுய நினைவிற்கு வந்தாள். அப்போது அவளுக்கு பத்தொன்பது வயது. தனது சோதனைக்காலத்தைப் பற்றி கூறும்போது,
“ ஒரு துன்பத்தைப் பற்றி கேள்விப்படுவதற்கும், அத்துன்பத்தை அனுபவிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது “ என்றாள்.
நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479, சகோ. ஜேசுராஜ் 9894398144.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !