தந்தை பியோவின் அனுபவங்கள் : ஒர் நாத்திகர் மனந்திரும்புதல்.
பிட்டிக்ரில்லி என்பவர் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த புகழ்ப்பெற்ற நாத்திகராக இருந்தார். நாடக ஆசிரியரான அண்டோனெல்லி என்பவரின் வற்புறுத்தலால் அவர் ரோட்டோண்டோவுக்கு வந்து, பாத்ரே பியோவின் பூசையின்போது கோவிலின் பின்பகுதியில் இருந்த நிழலில் அமைதியாக அமர்ந்திருந்தார்.
பாத்ரே பியோ பூசை முடிந்ததும் பீடத்தை விட்டுப் போகும்முன், மக்களைப் பார்த்து :
“ ஜெபம் அதிகமாகத் தேவைப்படும் ஓர் ஆன்மாவுக்காக நாம் பக்தியார்வத்தோடு ஜெபிப்போம். ஒரு நாள் அவர் நற்கருணைப் பக்தியை அனுகி வருவார். தம்மைப்போலவே தப்பரையில் இருக்கும் இன்னும் பலரையும் தம்மோடு அழைத்து வருவார்” என்றார். பிட்டிக்ரில்லி இந்த வார்த்தைகள் தமக்காக சொல்லப்பட்டதாக எடுத்துக் கொண்டார். அவரையும் அறியாமல் அவர் ஏராளமாக கண்ணீர் சிந்தத் தொடங்கினார். அந்தக் கண்ணீர் வெள்ளத்தில் அவரது இறுகிப்போயிருந்த இருதயம் கரைந்து போனது.
சில நாட்களுக்குப் பின் அவர் பாத்ரே பியோவைச் சந்தித்த போது, அவர் அவரிடம் :
“ மனிதன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆத்துமத்தை இழந்து போவான் என்றால், அவனுக்கு என்ன பயன்? உண்மையாகவே கடவுள் உம்மிடம் நல்லவராக இருக்கிறார்” என்றார். பிட்டிக்ரில்லி ஓர் ஆழ்ந்த, நிலையான, மனந்திரும்புதல் தம்மில் நிகழ்வதை உணர்ந்தார். அதன்பின் முப்பது வருடங்களுக்கு மேலாக, அவர் எப்போதும் ஒரு கிறிஸ்தவச் செய்தியோடு ஏராளமான நாடகங்களையும், கட்டுரைகளையும், நூல்களையும் எழுதினார்.
தந்தை பியோவின் அனுபவங்கள் : மேலும் ஒரு நாத்திகர் மனந்திரும்புதலும், குணம் பெறுதலும்
பிரபல நாத்திகராயிருந்த டாக்டர் பிரான்சிஸ்கோ ரிக்ஸியால்டி என்பவர் பல ஆண்டுகளாக பாத்ரே பியோவின் மீதான காக்லியார்ட்டின் தாக்குதல்களை ஆதரித்து வந்தார். 1928-ல் ஐந்து மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து, அவர் வயிற்றுப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இனி பிழைக்க வாய்ப்பேயில்லை என்றும் கூறிவிட்டனர்.
டிசம்பரில் அவர் இறக்கும் தருவாயில் இருந்தார். எனவே கடைசி நிமிடத்தில் அவரை மனந்திருப்பும் நோக்கத்துடன் அவரது நண்பர் ப்ரென்சிப்பே அவரைக் காணச் சென்றார். ஆனால் தமது செருப்பைக் கழற்றி அவரது தலையை நோக்கி வீசிய அந்த நாத்திகர், “ போய்விடு ! நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படியே சாகவும் விரும்புகிறேன் “ என்று கத்தினார்.
அவருக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் மெர்லா விரைந்து சென்று தந்தை பியோவை சந்தித்து நடந்ததைக் கூறினார். பாத்ரே பியோ மிகவும் சிரமப்பட்டு, அப்போதைய மடத்துத் அதிபர் ரஃபேலின் அனுமதி பெற்று டாக்டர் ரிக்ஸியால்டின் வீட்டிற்கு சென்றார். பாத்ரே ரஃபேலும் அவரோடு சென்றார். பியோ தனியாக நோயாளியின் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்.
அதன் பின் உள்ளே என்ன நடந்தது என்பது யாருக்கும் தெறியாது. ஆனால் ரிக்ஸியால்டி பாவசங்கீர்த்தனம் செய்து, திவ்ய நன்மை உட்கொண்டார். அவரது குடும்பம் மீண்டும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டபோது, ரிக்ஸியால்டி தன் புனித குருவை அணைத்தபடி அழுதுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் பியோவிடம்: “ சுவாமி இன்னும் ஒரு முறை என்னை ஆசீர்வதியுங்கள், இனி எனக்கு உயிர் பிழைக்கும் நம்பிக்கை இல்லை. ஆகவே உங்கள் மன்னிப்போடும், ஆசீர்வாதத்தோடும் உலகை விட்டு செல்ல நான் விரும்புகிறேன்” என்றார்.
கடைந்தெடுத்த அந்த நாத்திகரின் அந்த விசுவாச அறிக்கையைக் கேட்டு பிரமித்துப் போன குடும்பத்தினர், அடுத்து பியோ கூறியதைக் கேட்டு மேலும் மலைத்துப் போனார்கள்:
“ உங்கள் ஆன்மா குணமாக்கப்பட்டு விட்டது. விரைவில் உங்கள் உடலும் குணமாகும் ! என் சந்திப்புக்கு நன்றி செலுத்துவதற்காக, மடத்திற்கு வருவீர்கள் “ என்றார் பியோ !.
மூன்று நாட்களில் புற்று நோயின் எல்லா அறிகுறிகளும் மறைந்து விட, ரிக்ஸியால்டி பாத்ரே பியோவுக்கு நன்றி கூறுவதற்காக மடத்திற்கும், கடவுளுக்கு நன்றி கூறுவதற்காக ஆலயத்திற்கும் சென்றார்.
நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787
கடவுளின் மேல் விசுவாசமும் நம்பிக்கையும் எப்போதும் கொண்டிருப்போம். “ஏனெனில் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை” –லூக்காஸ் 1:37
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !