மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் -8 பாத்திமாச் சிறுமிகளின் நற்கருணை சேசு மற்றும் ஜெபமாலை ஆர்வம்..
சிறுவர் மூவரும் சில நாட்கள் கோவா தா ஈரியாவில் ஆடுகளை மேய்ப்பார்கள். சில நாட்களில் வாலினோஸ் என்னுமிடத்திற்கு செல்வார்கள். அவர்கள் மிக விரும்பிய இடம். கபேசா என்ற கற்பாறை நிறைந்த நிலப்பரப்புதான். அது உயரமான இடம் அங்கிருந்து பார்த்தால் அழகிய தூரக்காட்சிகள் தெறியும்.
கபேசாவில் இன்னொரு கவர்ச்சியும் அவர்களுக்கு இருந்தது. கபேசா குன்றுகளில் எதிரொலி கேட்கும். குழந்தைகள் மூவரும் இந்த எதிரொலியைக் கண்டுபிடித்த பின் நெடுநேரம் வரை சத்தமிட்டு தங்கள் குரல் எதிரொலிப்பதைக் கேட்டு மகிழ்வார்கள்.
“ மரியே “ என்ற சொல் எதிரொலிப்பதைக் கேட்க ஜெசிந்தாவுக்கு ரொம்பப் பிடிக்கும். சில சமையங்களில் “ அருள்- நிறைந்த-மரியாயே-வாழ்க “ என்ற மங்கள வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்வாள். எதிரொலியும் அதே போல் பேசுவதைக் கேட்டு மூவருமே மகிழ்ச்சியாள் துள்ளுவார்கள். சில சமையங்களில் மூவரும் சேர்ந்து அதே மங்கள வார்த்தையை உரத்துச் சொல்வார்கள். “ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்- நீரே…. “ ஒவ்வொரு வார்த்தையும் எதிரொலித்து வரும்போது அவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டார்கள்.
பகல் உணவை முடித்ததும் மூவரும் எந்த இடத்தினாலும் சரி, அமர்ந்து ஜெபமாலை சொல்வது வழக்கம். லூசியாவின் தாய் மரிய ரோசா ஞாபகப்படுத்தி விடுவாள்.
இப்போது சிறுமி ஜெசிந்தாவின் நற்கருணை ஆண்டவர் பக்தியைப்பாருங்கள்…
ஜஸிந்தாவின் முதல் ஆசை அவளும் லூசியாவோடு ஆடு மேய்க்க செல்ல வேண்டும். அவளின் இன்னொரு பெரிய ஆசை, புது நன்மையில் சேசுவை வாங்க வேண்டும் என்பது. லூசியா ஆறு வயதிலே சேசுவை வாங்கினாள் நானும் ஏன் சேசுவை வாங்கக்கூடாது என்பது அவளது நினைப்பு. சேசு பவனியில் சிறுமிகள் சம்மனசுக்கள் போல் உடை அணிவகுத்து சேசுவுக்கு பூ தூவும் காட்சி அவளைக் கவர்ந்தது. ஒரு நாள் லூசியா சேசுவை வாங்கி வந்த பின், ஜஸிந்தா சில பூக்களை மாலை போல் தொடுத்து லூசியாவின் தலையில் சூட்டினாள். “ இப்படி ஏன் செய்கிறாய் ? “ என்றாள் லூசியா. “ சம்மனசுக்கள் செய்வது போல் நான் உனக்குச் செய்கிறேன். உனக்கு பூக்கள் தருகிறேன் “ என்று பதிலளித்தாள் ஜஸிந்தா.
அடுத்த சேசு பவனிக்கு ஜஸிந்தாவும், பூ தூவும் சிறுமியர் குளுவில் சேர்க்கப்பட்டாள். மற்ற சிறுமியர் நற்கருணை சேசுவை நோக்கி மலர்களை அள்ளி தூவினர். ஆனால் ஜஸிந்தா மலர் அள்ளித் தூவாமல் கதிர்பாத்திரத்தை ஏந்தி வந்த குருவை உற்றுப்பார்த்துக் கொண்டே நின்று விட்டாள். “ நீ ஏன் சேசுவை நோக்கிப் பூ தூவ வில்லை?” என்று லூசியாவின் சகோதரி மரியா கேட்ட போது, “ ஏனென்றால் நான் அவரைக் காணவில்லையே “ என்றாள், ஜஸிந்தா. “ ஆயினும் லூசியா செய்ததுபோல் நீயும் செய்திருக்க வேண்டும்” என்றாள் மரியா.
இதன்பின் ஜஸிந்தா லூசியாவிடம், “ அப்போ நீ சின்ன சேசுவை பார்த்திருக்கிறாயோ? ” என்று கேட்டாள்.
“ இல்லை. திருஅப்பத்தில் உள்ள சின்ன சேசுவை நாம் ஒரு போதும் பார்ப்பதில்லை. அவர் மறைந்திருக்கிறார். நன்மை வாங்கும்போது அவரையேதான் வாங்குகிறோம் என்பது உனக்குத் தெறியாதா?”
“அப்போ, நீ நன்மை வாங்கும்போது சேசுவிடம் பேசுவாயா?”
“ ஆம் “
“ அப்போ, அவரை ஏன் நீ பார்க்கிறதில்லை”
“ ஏனென்றால் அவர் மறைந்திருக்கிறார் “
“ நானும் சேசுவை வாங்க உத்தரவு தரும்படி என் அம்மாவிடம் கேட்கப்போகிறேன் “
“ உனக்கு பத்து வயது ஆகும்வரை நன்மை வாங்க நம் பங்குத்தந்தை விட மாட்டார் “
“ நீ மட்டும் வாங்குகிறாயே, உனக்கு பத்து வயது ஆகவில்லையே “
“ எனக்கு ஞானப்பாடம் தெறியும். உனக்குத் தெறியாதே “
இந்த உரையாடலுக்குப்பின் ஜஸிந்தா லூசியாவின் மாணவியாகிவிட்டாள். ஞானோபதேசத்தை மனப்பாடம் மட்டும் செய்யாமல் அதன் பொருளையும், காரணத்தையும் துளைத்து துளைத்து கேட்டுப்படித்தாள்.
“ மறைந்த சேசுவை இத்தனை பேர் எப்படி ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்கிறார்கள்?. இத்தனை பேருக்கும் ஒவ்வொரு பாகம் எப்படிக்கிடைக்கும்?”
“ திருஅப்பங்கள் நிறைய இருக்கின்றன அல்லவா? அதில் ஒவ்வொன்றிலும் சேசு முழுமையாக இருக்கிறார்.” இப்படிக் கேள்வியும் பதிலுமாக ஞான உபதேச வகுப்பு நடந்தது. ஆனால் சீக்கிரத்தில் லூசியா முன்பு சொன்னதையே திருப்பிச் சொல்ல ஆரம்பித்தாள்.
“ இதெல்லாம் படித்ததுதானே, வேறு புதியது சொல் “ என்றாள் ஜஸிந்தா. எப்படியோ பாடம் முடிந்தது.
ஜஸிந்தா தன் தாயிடம் சேசுவை வாங்க தேவையான பாடம் எல்லாம் படித்து விட்டதாக கூறினாள். ஒரு நாள் ஒலிம்பியா தன் மகளை பங்குத்தந்தையிடம் அழைத்துச்சென்றாள்.
சங்.பெனா சுவாமி ஜஸிந்தாவைப் பல கேள்விகள் கேட்டுவிட்டு, ஒலிம்பியாவிடம், ஜஸிந்தா மிகவும் சிறு பிள்ளை, மேலும் அவளுக்கு இன்னும் ஞான அறிவு பற்றாது என்று கூறி அனுப்பி விட்டார்.
(இதன்பின் ஜெசிந்தா திவ்ய நற்கருணை ஆண்டவரை எப்படிப்பெற்றாள் என்று நேற்று பார்த்தோம்)
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !