நித்தியம்

நித்தியம் என்பது பயங்கரம்! பூமி, சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள் எல்லாம் ஒருநாள் அழிந்து போகும். காலச் சக்கரங்கள் ஒன்றையொன்று பின்பற்றி உருண்டோடும். நீர்ப் பரப்பில் விழுந்து ஒரு வட்டத்தை ஏற்படுத்திவிட்டு மறையும் நீர்த்துளி போல யுகங்கள் தோன்றி மறைந்து கொண்டிருக்கும்.

ஆனால் சபிக்கப்பட்ட ஆத்துமத்தின் நிர்ப்பாக்கிய நிலையில் எந்த மாறுதலும் இராது. இனி அன்பில்லை, ஆறுதல் இல்லை, இரக்கம் இல்லை, ஓய்வு, உறக்கம், நிம்மதி எதுவுமேயில்லை.

திரும்பும் பக்கமெல்லாம் பசாசுக்களும், கொடிய ஆத்துமங்களுந் தான்! என்றாவது ஒருநாள் இந்த வாதையெல்லாம் முடிந்து போகும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்திருந்தால், நரகவாதை சமாதானமாய் மாறிப் போகும்.

ஆனால் நரகத்தில் எஞ்சியிருப் பதெல்லாம் அவநம்பிக்கை மட்டுமே. கோடானு கோடி வருடங்கள் சென்ற பிறகு பசாசு பாவியின் காதருகில் வந்து : "உன் வேதனை இப்போதுதான் தொடங்குகிறது" என்று சொல்லி எக்களித்துச் சிரிக்கும்!

''அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பிக்கொண்டிருக்கும்" என்று காட்சியாகமம் 14:11 கூறுகிறது.

''பரிதாபத்திற்குரிய யூதாஸ்! அவன் நரகத்திற்குச் சென்று 1700 வருடங்கள் ஆகின்றன, ஆனால் அவனுடைய நரகம் இன்னும் தனது தொடக்கத்தில்தான் இருக்கிறது" என்று கூறி வியக்கிறார் அர்ச். அல்போன்ஸ் லிகோரியார்.

பல கோடி வருடங்களுக்குப் பிறகும் நரக வேதனை அதன் தொடக்க நிலையிலேயே இருக்கும்!!