மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் - 18 : “ நாமே அமல உற்பவம் “ – மாதா -3
அந்த நாளிலிருந்து 15 நாட்கள் அன்னை பெர்னதத்திற்கு காட்சி கொடுத்து பேசினார். பிப்ரவரி 20- தேதி புனித பெர்னதெத் பயன்படுத்துவதற்காக ஒரு ஜெபத்தை ஒவ்வொரு வார்த்தைகளாக கற்றுக்கொடுத்தார் ( எங்கள் ஆசிரியை நீயம்மா ! ) அதை வெளியிட பங்குக்குரு கேட்டபோது, “ அது எனக்கு மட்டும் தந்தையே “ என்று பதிலளித்தாள்.
மறுநாள் பெருங்கூட்டம் பெர்னதத்துடன் குகைக்கு சென்றது. லூர்து நகர் மருத்துவரும் அங்கு சென்றபோது பெர்னதத பரவச நிலையில் இருப்பதை பார்த்துவிட்டு காட்சிகள் எல்லாம் உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று விளம்பரப்படுத்தினார்.
ஒரு நாள் அன்னை, “ பாவிகளுக்காக் ஜெபி “ என்றவுடன் சிறுமி அழத்தொடங்கிவிட்டாள். இரண்டு நாட்களுக்குப்பின் மூன்று இரகசியங்களை ஒப்படைத்தாள். அவளும் சாகும்வரை அந்த இரகசியங்களை காப்பாற்றினாள். மறுநாள் அன்னை கெஞ்சும் குரலில் “ தவம்…தவம்…தவம் என்று அறிவிக்கச் சொன்னாள். மாதாவின் லூர்து காட்சியின் சிறப்பு அம்சம் யாதெனில் மாதா மூன்று தேவ இரகசியங்களை எப்படித் தியானித்து ஜெபமாலை ஜெபிக்க வேண்டும் என்று புனித பெர்னதத்திற்கு சொல்லிக்கொடுத்ததே ஆகும். (ஏற்கனவே சொல்லியது போல மாதா நமக்கு ஆசிரியையாக கிடைத்தால் அது எவ்வளவு பெரிய பாக்கியம். இயேசு சுவாமியின் சீடர்களின் ஒருவரான சின்ன யாகப்பருக்கு ஆசிரியை மாதாவே.. அவர் சிறியவராய் இருக்கும்போது பைபிளையும், கடவுளையும் கற்றுக்கொடுத்த ஆசிரியர் மாதாவே. ஏனென்றால் சிறிய யாகப்பர் மாதாவுக்கு நெருங்கிய உறவினர்)
பிப்ரவரி 25-ம் தேதி வியாழக்கிழமை “ அந்த நீரூற்றுற்கு சென்று குடித்துவிட்டு உன்னையே கழுவிக்கொள் “ என்றார். குகைக்கு இடப்புறத்தில் ஓர் இடத்தைக் காட்டி அங்கு தோண்டச் சொன்னார்கள். தோண்டியவுடன் சேற்றில் கலந்திருந்த தண்ணீர் வெளிப்படுத்தப்பட்டது. அதைக் குடித்துவிட்டு அந்த சேற்றை அள்ளி முகத்தில் பூசினாள். அதிலிருந்த புல்லைத் தின்றாள். எல்லாம் அன்னையின் ஆனையின்படியே. (அந்த நீரூற்றுதான் மருத்துவத்துரையும், அதிலும் நாத்தீக மருத்துவரும் புரியாமல் மிரண்டு நிற்கும் புதுமைகள் அங்கு நடக்கிறது, அவர்களால் குணப்படுத்தவே முடியாது என்று கைவிடப்பட்ட அனைத்து நோய்களும் தீரும் அற்புத நீரூற்றாக அது இன்றுவரை திகழ்கிறது.)
பிப்ரவரி 27-ம் நாள், “ நீ சென்று இவ்விடத்தில் ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்று சொல் “ என்றார்.
மார்ச் 25-ம் தேதி மீண்டும் தோன்றி , “ நாமே அமல உற்பபம் “ என்றார். இப்படியாக புனித பெர்னதத்திற்கு 18 தடவை தேவ அன்னை காட்சி கொடுத்தார்கள். திருத்தந்தை 9-ம் பத்திநாதர் தேவமாதா ஜென்மப்பாவம் இல்லாதவர் என்று பிரகடனம் செய்ததை உறுதிப்படுத்தும் வகையில் அன்னை தோன்றி தன்னை வெளிப்படுத்தினார்.
1865-ம் ஆண்டு ஜூலை பெர்னதத கன்னியராவதற்கு நவதுறவறத்தில் சேர்ந்தாள். அவள் அடிக்கடி தன்னைப்பற்றி இப்படிக்கூறுவாள்,
“ நான் ஆண்டவர் கையில் இருக்கும் விளக்குமாறு ( துடைப்பம் ). அவர் என்னை ஒரு வேலைக்காகப் பயன்படுத்தினார் அவ்வளவுதான். துடைப்பம் மூலையில்தானே இருக்க வேண்டும் “ இப்போது நான் மூலையில் இருக்கிறேன் “ என்பார் தாழ்ச்சியாக..
மிகவும் பிணியுற்ற நிலையில் அதுவும் படுக்கையாய் இருந்தபோது, குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே வார்த்தைப்பாடு கொடுத்து கன்னியரானார். ஆனால் சடங்கு முடிந்த பின் உடல் நிலை தேறி 12 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். ஒன்றுக்கும் உதவாதவள் என்ற நிலையில் ஒப்படைக்கப்பட்ட மருத்துவ நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பை மிகச் சரியாக செய்தார்.
“ பரிசுத்த தந்தையே பல ஆண்டுகளாய் நான் உம் இயக்கத்தில் சிறிய வீராங்கனையாக இருந்து வருகிறேன். ( நற்கருணை வீர சபையை ஒத்த ஒன்று ). அவற்றை நான் சாகும் வரையில் கடைப்பிடிப்பேன். ஒறுத்தல் ஆயுதம் முடிந்து விடும். ஜெப ஆயுதமோ என்னோடு விண்ணகத்திற்கு வரும் ” என்பாள் புனித மரிய பெர்னதத்.
சிறு வயதிலுள்ள ஆஸ்துமா நோயும், இளமைக்கால வறுமையும், அவளுடைய உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று 1879-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் ஆண்டு உயிர் நீத்தாள். 1909- ம் ஆண்டு திறந்து பார்த்தபோதும் உடல் அழியவில்லை. அவள் தாம் கண்ட மாதாவினைக் காண சிரித்த முகத்துடன் கண்ணை மூடின அவரது உடல் இன்று வரை அழியாமல் நெவேர் மடத்துக் கோவிலில் உள்ளது.
புனித பெர்னதத்தே ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..
நன்றி : நூல் - தேவனின் திருச்சபை மலர்கள், எழுதியவர்கள் அருட்தந்தை பால் பீட்டர், அருட்தந்தை M. டொமினிக்.
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !