பாவம் அளவற்றவராகிய சர்வேசுரனுக்கு எதிராக மனிதரால் கட்டிக்கொள்ளப்படுகிறது என்பதாலேயே அதுவும் அளவற்ற கொடிய தன்மையுள்ளதாக இருக்கிறது. ஆகவே அளவற்றதா யிருக்கிற ஒரு தண்டனையைக் கொண்டு அது தண்டிக்கப்படுவது முற்றிலும் அறிவுக்கு உகந்ததே.
''சர்வேசுரன் அன்பும், இரக்கமுமே உருவானவர். தாமே படைத்த ஆன்மாக்களைத் தண்டிப் பதற்காக இவ்வளவு பயங்கரமான நரகத்தை நல்ல சர்வேசுரன் ஏற்படுத்தியிருக்க வாய்ப்பே யில்லை " என்று சிலர் கூறுகிறார்கள். இவர்கள் ஒரு முக்கியமான சத்தியத்தை மறந்து போகிறார்கள். "அவர் எந்த அளவுக்கு இரக்கமுள்ளவராக இருக்கிறாரோ, அதே அளவுக்கு நீதியுள்ள வராகவும் இருக்கிறார் என்பதுதான் அது!
தன் நாட்டில் கொலை, கொள்ளை, வன்முறைகள், பயங்கரவாதத்தில் ஈடுபடும் கொடியவர்களை ஓர் அரசன் இரக்கம் என்ற பெயரில் எந்த விதத்திலும் தண்டிக்காமல் தன் நாட்டில் சுதந்திரமாகத் திரிய அனுமதிப்பான் என்றால், அவன் தான் நல்ல அரசன் என்று இவர்கள் கூறுவார்களா? தீயவர்களை அடக்கி ஒடுக்கி, அவர்களைத் தண்டித்துக் கீழ்ப்படுத்தி, அதன் மூலம் நல்லவர்களைக் காப்பவன்தானே நல்ல அரசனாக இருக்க முடியும்? சர்வேசுரன் பூலோக அரசர்களுக் கெல்லாம் அரசர்!
நல்லவர்களுக்கு இரக்கம் காட்டுவதும், தீயவர்களைத் தண்டிப்பதும் அவருடைய சுபாவ இலட்சணங்களில் ஒன்றாக இருக் கிறது. ஆகவே, தீயவர்களைத் தண்டிக்க நரகத்தை அவர் உண்டாக்கி யிருப்பதில் இவர்கள் ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை. ஒருநாள் பரிசுத்தவதியான ஒரு பெண் நரகத்தைப் பற்றி தியானித்துக் கொண்டிருந்தாள். நரக வேதனையின் நித்தியத்தைப் பற்றியும், அந்த பயங்கரமான 'எப்போதும் ..... ஒரு போதுமில்லை' என்ற வார்த்தைகளைப் பற்றியும் தியானித்தபோது, ஒரு முழுக் குழப்ப நிலைக்குள் அவள் தள்ளப் பட்டாள். ஏனெனில் இவ்வளவு உத்தமமான நன்மைத்தனமும், சகல தெய்வீக இலட்சணங்களும் உடையவரான சர்வேசுரனால் இந்த அளவிட முடியாத பயங்கர முள்ள நரகம் படைக்கப்பட்டது என்ற சத்தியத்தை ஜீரணிக்க அவளால் முடியவில்லை . இந்த அளவுக்கு சகல நன்மைச் சுரூபியாயிருக்கிற கடவுளிடமிருந்து இவ்வளவு பயங்கரமான தண்டனை எப்படி வரமுடியும்?
ஆகவே அவள் ஆண்டவரிடம் : ''சேசுவே, உமது தீர்ப்புக்கு என்னை நான் கையளிக்கிறேன். ஆயினும் உம் நீதியை இவ்வளவு அகோரமானதாக ஆக்காதிரும்" என்று மன்றாடினாள். கடவுள் அவளுக்கு இப்படிப் பதில் கூறினார்:
''பாவம் என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? பாவம் செய்வது என்பது, என்னிடம், ''உமக்கு நான் ஊழியம் செய்ய மாட்டேன்; உமது கட்டளைகளை நான் வெறுக்கிறேன்; உம் அச்சுறுத்தல்கள் எனக்கு வேடிக்கையாக இருக்கின்றன, அவற்றை நான் பரிகசித்து நகைக்கிறேன்!'' என்று சொல்வதற்கு ஒப்பானது.''
''பாவம் செய்வது உம் மகத்துவத்தை நிந்திப்பது என்பது எனக்குப் புரிகிறது, ஆண்டவரே.'' ''நல்லது, உன்னால் முடிந்தால், இந்தத் தேவ நிந்தையின் பிரமாண்டத்தை அளந்து பார்!'' "ஆண்டவரே, இந்த தேவநிந்தை, உமது அளவற்ற தேவ மகத்துவத்தையே தாக்குவதால், அதுவும் அளவற்றதாகவே இருக்கிறது."
''அப்படியானால் ஓர் அளவற்ற தண்டனையைக் கொண்டு அதைத் தண்டிப்பது அவசியம் அல்லவா? அந்தத் தண்டனை தனது கடுமையில் அளவற்றதாக இருக்க முடியாது என்பதால், குறைந்த பட்சம் அதன் கால அளவிலாவது அளவற்றதாக இருக்க வேண்டுமென்று தேவநீதி வற்புறுத்துகிறது. இவ்வாறு, வேதனைகளின் நித்தியத்தை, பயங்கரமான 'எப்போதும்' என்ற நிலையை, விரும்புவது தேவ நீதிதான். சபிக்கப்பட்டவர்களும் கூட அதற்கு மரியாதை செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தங்கள் வாதைகளின் மத்தியில் இருந்து அவர்கள், "ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர், உமது தீர்ப்புகள் நேர்மையானவை'' என்று கூக்குரலிடுகிறார்கள் (சங். 118:137) என்கிறார் சங்கீத ஆசிரியரான தாவீதரசர்." (Quoted from "Hell" by Rev. Fr. E.X.Schouppe).
பரிகசிக்கப்படக் கூடாதவரான சர்வேசுரனைப் பரிகசித்து நிந்திக்கும் பாவங்களுக்கு நரகம் ஒரு குறைவான தண்டனையே! தாங்கள் இரட்சிக்கப்படுவதை விரும்பாத பாவிகளுக்கு நரகம் உண்மையில் மிகக் குறைவான தண்டனையே! சில உலக இன்பங்களின் நிமித்தம் சர்வேசுர னுடைய அளவற்ற அன்பையும் இரக்கத்தையும் மதித்துப் போற்றத் தவறியவர்களுக்கு நரகம் மிகக் குறைவான தண்டனையே!