உரோமன் கத்தோலிக்க மரியாயியல்

மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் - 14 : 

உரோமன் கத்தோலிக்க மரியாயியல் என்பது கடவுளின் மீட்புத் திட்டத்தில் இயேசுவின் தாயான பரிசுத்த கன்னி மரியாயின் இடம் மற்றும் பங்கு பற்றிய கத்தோலிக்க திருச்சபையின் ஆய்வியல் கண்ணோட்டத்தை விளக்குகிறது. மாதாவைப் பற்றி தொடக்க காலத்தில் எழுந்த கருத்துருக்கள், திருத்தந்தையரின் விளக்கங்கள், புனிதர்கள் எழுதிய நூல்கள், வரலாற்றில் நிகழ்ந்த மாதாவின் காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

மரியாயை இறைவனின் தாய் என ஏற்றுக்கொள்ளும் கத்தோலிக்க மரியாயியல் அவரது அமல உற்பவம், முப்பொழுதும் கன்னிமை, விண்ணேற்பு ஆகியவற்றையும் விசுவாசக் கோட்பாடுகளாக அறிக்கையிடுகிறது. இறைத்திட்டத்தில் கன்னி மரியாயிக்கு உள்ள முக்கிய இடத்தின் அடிப்படையில் அவருக்கு மேலான வணக்கம் செலுத்துவது பற்றியும் இது போதிக்கிறது.

அமல உற்பவம்

மாதாவின் அமல உற்பவம் என்பது மாதாபிறப்பு நிலைப் பாவத்தின் கறை எதுவும் இன்றி, அவரது தாயின் வயிற்றில் உருவானார் என்று கூறும் கத்தோலிக்க கோட்பாடு ஆகும். இது தொடக்க காலம் முதலே, திருச்சபைத் தந்தையர் பறைசாற்றி வரும் நம்பிக்கை ஆகும். "மரியாள் இயேசுவின் தாயாகுமாறு, இறைவனின் அருளால் பாவக் கறைகளில் இருந்து பாதுகாக்கப்பட்டார்" என்று புனித அகஸ்டீன் குறிப்பிடுகிறார். "மாதா பாவம் இல்லாதவர்; அனைத்து புண்ணியங்களுக்கும் முன்மாதிரி" என்று புனித ஜெரோம் கூறியுள்ளார்.

திருச்சபையின் பல நூற்றாண்டு கால நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், 1854ஆம் ஆண்டு திருத்தந்தை 9ம் பயஸ், "தேவ மாதா, தான் உற்பவித்த நொடியில் இருந்தே, வல்லமை மிக்க இறைவனின் தனிப்பட்ட அருளினாலும், இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களினாலும் பிறப்புநிலைப் பாவத்தின் கரைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டார்" என்ற விசுவாசக் கோட்பாட்டை அறிக்கையிட்டார்.

இந்த உண்மையை மாதாவும் தம் காட்சிகளில் உறுதி செய்திருக்கிறார். 1830ஆம் ஆண்டு கத்தரீன் லபோரே என்ற புனித கன்னியருக்கு மாதா ஒளி வட்டத்தின் நடுவே காட்சி அளித்தார். அதில், "பாவமின்றி உற்பவித்த ஓ மரியாவே, உம்மைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்" என்று எழுதியிருந்தது. 1858ல் பெர்னதெத் சுபீருவுக்கு லூர்து நகரில் தோன்றிய மாதா, "நாமே அமல உற்பவம்" என்று மொழிந்தார்.

கடவுளின் தாய்

மாதாவுக்கு இயேசு பிறப்பின் முன்னறிவித்த வானதூதர் அவரிடம், இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் மேன்மை மிக்கவராயிருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார். " என்றார் (லூக் 1:31-32). தம்மை சந்திக்க வந்த மாதாவிடம் எலிசபெத், 

 "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே. என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி? என்றார். (லூக் 1 :42-43) இவ்வாறு மாதா இறைவனின் தாய் என்பதை நற்செய்தி பறைசாற்றுகிறது.

"வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால், மாதா கடவுளைக் கருத்தாங்கும் வல்லமை பெற்றார்" என்று புனித இரனேயு கூறுகிறார். இதனையே கி.பி.431ஆம் ஆண்டு நடைபெற்ற எபேசு பொதுச்சங்கம், "இயேசுவில் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் முழுமையாக குடிகொண்டிருக்கின்றன. எனவே, அன்னை கன்னி மரியாள் இறைவனின் தாயே!" என்று விசுவாசக் கோட்பாடாக அறிக்கையிட்டது.

முக்கால கன்னி

ஆறாம் மாதத்திலே, கபிரியேல் தூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னிகையிடம் அனுப்பினார். அவள் தாவீது குலத்தவராகிய சூசை என்பருக்கு மண ஒப்பந்தமானவள். அவள் பெயர் மரியாள்.என்றும், லூக். 1:26-27  'இயேசுவின் தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியாள் கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார் '[4] என்றும் நற்செய்திகள் கூறுகின்றன. மாதா, தம் கன்னிமை குன்றாமலே இயேசுவைப் பெற்றெடுத்தார் என்பதை இவற்றிலிருந்து அறிகிறோம்.

விவிலிய சான்றுகளின் அடிப்படையில், "இயேசு அற்புதமான விதத்தில், மரியாயின் கன்னிமை சிதைவுபடாமல் பிறந்தார்" என அலக்சாந்திரியா புனித கிளெமெந்து (150-215) குறிப்பிடுகிறார். "இயேசு பிறப்பதற்கு முன்பும், அவரை வயிற்றில் கருத்தாங்கிய பொழுதும், அவரைப் பெற்றெடுத்தப் பின்பும் மரியாவின் கன்னிமையில் எந்த பழுதும் ஏற்படவில்லை" என திருச்சபைத் தந்தையர் பறைசாற்றினர். "மரியாயின் கன்னிமை நிலைக்கும் கன்னிமை"[5] என கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியரான ஓரிஜன் கூறுகிறார்.

இவற்றின் அடிப்படையில் கி.பி.553 நடைபெற்ற இரண்டாம் கான்ஸ்தாந்திநோபுள் பொதுச்சங்கத்தில், "மரியாள் இறைவனின் தாய், எப்பொழுதும் கன்னி" என்று விசுவாச அறிக்கையிடப்பட்டது. 649ஆம் ஆண்டு கூடிய லாத்தரன் சங்கமும், "கன்னியான மரியாள் முக்காலத்து பெண்மணி" என்று பறைசாற்றியது. இவ்வாறு தேவ மாதா முக்காலத்திலும் கன்னியாக இருக்கிறார் என்ற நம்பிக்கை உறுதி செய்யப்பட்டது.

விண்ணேற்பு

மாதா இறந்த பிறகு உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தொடக்கத் திருச்சபையின் மரபு கூறுகிறது. இதன் அடிப்படையில், "மனித அவதாரம் எடுத்த இறைவன், தம் தாய் இவ்வுலகை விட்டு பிரிந்தபோது, அவரது உடலையும் அழியாமல் காத்துக்கொண்டார்; அவரை விண்ணகத்திற்கு எடுத்துச்சென்று பெருமைப்படுத்த இறைவன் திருவுளம் கொண்டார்" என்று தமாஸ்கஸ் புனித யோவான் (676–749) குறிப்பிடுகிறார்.

மரியாவின் விண்ணேற்பு பற்றிய கருத்தியல் 7ஆம் நூற்றாண்டு முதலே கிறிஸ்தவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மாதாவின் இறப்பு மற்றும் விண்ணேற்பு குறித்த விழாக் கொண்டாட்டங்களும் மக்களிடையே பரவலாக காணப்பட்டன. மக்களிடையே மரபு வழியாக தொடர்ந்த இந்த நம்பிக்கை 1950ஆம் ஆண்டு விசுவாசக் கோட்பாடு என உறுதி செய்யப்பட்டது. திருத்தந்தை 12ம் பயஸ், "என்றும் கன்னியும் இறைவனின் அமலோற்பவ அன்னையுமாகிய மரியாள், தன் உலக வாழ்வினை நிறைவு செய்தபின் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மகிமைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்"[6]என்று அறிக்கையிட்டார்.

மேலான வணக்கம்

"கன்னி மரியாள், 'இறைவனின் தாய்' என்னும் கொடையாலும் அலுவலாலும் மீட்பரான தம் மகனோடு ஒன்றித்து இருக்கிறார்; தமக்குரிய தனிப்பட்ட அருள்கொடைகளாலும் அலுவல்களாலும் இவர் திருச்சபையோடும் நெருங்கிய முறையிலே இணைக்கப்பட்டிருக்கிறார்.[7] எனவே, நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் தாயும், என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாயிக்கு நம்பிக்கை கொண்டோர் முதற்கண் வணக்கம் செலுத்த வேண்டும்"[8] என கத்தோலிக்க திருச்சபை கற்பிக்கிறது.

"திருச்சபை மாதாவைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால் தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. ஏனெனில், தம் மகனுக்குப் பிறகு, எல்லா வானதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் மேலாகக் கடவுளின் அருளால் உயர்த்தப்பட்டவரும், கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவருமாகிய இவர் கடவுளின் தூய்மைமிகு தாய் ஆவார். தூய கன்னியை தொடக்க முதலே, நம்பிக்கை கொண்டோர் கடவுளின் தாய் என்றழைத்து வணங்கினர். தங்கள் துன்பங்கள், தேவைகள் அனைத்திலும் அவரை மன்றாடி, அவரது அடைக்கலத்தில் பாதுகாப்பு பெற்றிருக்கின்றனர்"[9] என்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் எடுத்துரைக்கிறது.

நன்றி : Google..

ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !