மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் -5 : கபடற்ற மனம் ஆண்டவர் வாழும் இல்லம்..
லூசியா தன் குழந்தைப் பருவத்தை நினைக்கையில் முதன்முதலில் அவள் நினைவுக்கு வருவது தன் தாய் அவளுக்கு அருள் நிறை மந்திரத்தை கற்றுக்கொடுத்த நிகழ்ச்சிதான்.
“ அருள் நிறைந்த மரியாயே வாழ்க ! “ என்று எந்த மொழியில் கூறினாலும் அதில் ஒரு தெய்வீக இனிமை உண்டு. போர்த்துக்கீசிய மொழியில் அது இன்னும் இனிமையுடன் ஒலிப்பதாக கூறப்படுகிறது.
முதல் பாடமாக லூசியா தேவ அன்னையை வாழ்த்தக்கற்றுக்கொண்டாள். எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பது அரிது. மரிய ரோசா அன்பும் கண்டிப்பும் உள்ள தாயாக இருந்தாள் என்பது லூசியாவின் கருத்து.
லூசியாவுக்கு வயது ஆறு. சிறுவர்களுக்கும் நற்கருணை வழங்கலாம் என்று அர்ச். பத்தாம் பத்தி நாதர் பாப்பரசர் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் அறிவித்திருந்தார்.
சங்.குரூஸ் சுவாமியிடமே லூசியா பாவசங்கீர்த்தனம் செய்தாள். கபடமே அறியாத அந்தக் குழந்தை கோவிலில் இருந்தவர்களுக்கெல்லம் கேட்கும்படியாக தன் பாவங்களைச் சொன்னாள். அது அவளுக்கே தெறியாது. அவளுக்குப் பாவப்பொறுத்தல் அளிக்கும் முன் அக்குரு,
“ மகளே, உன் ஆன்மா பரிசுத்த ஆவியானவரின் இல்லமாயிருக்கிறது. அதில் அவர் செயல்புரியுமாறு அதை எப்போதும் தூய்மையாக வைத்திரு “ என்றார். அப்படியே செய்வதாகக் கூறிவிட்டு லூசியா எழுந்து தேவதாயின் பீடத்தருகே சென்று,
“ அம்மா, என் எளிய இருதயத்தைக் கடவுளுக்காகவே காப்பாற்றி வையுங்கள் “ என்று மன்றாடினாள். இவள் இப்படிக் கேட்டபோது, அந்தச் சுரூபம் புண்ணகைத்து அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டது போலிருந்தது என்று பின்னாள் கூறியுள்ளாள்..
அன்று இரவு வெகு நேரம் வரை லூசியாவின் மூத்த சகோதரிகள் அவளுக்கு புது நன்மை தயாரிப்புகளை செய்தார்கள். லூசியாவிற்கு உறக்கமே வரவில்லை. அடிக்கடி எழுந்து மணி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை எழுப்ப வந்த மூத்த அக்காள் மரியா, லூசியாவிடம் அவள் எதையும் தின்னவோ பருகவோ கூடாது. சேசுவை வாங்கும் வரை உபவாசம் இருக்க வேண்டும் என்று ஞாபகமூட்டினாள். (அப்போது நடுச்சாமம் முதல் நன்மை வாங்கும் வரை தண்ணீர் முதலாய் பருகாமல் உபவாசமிருக்க வேண்டும் என்ற ஒழுங்கு இருந்தது.) அதன்பின் அவளுக்குப் புது நன்மை உடைகளை அணிவித்து பெற்றோரிடம் கூட்டி வந்து அவர்களிடம் தான் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பு கேட்டு அவர்கள் கரங்களை முத்தம் செய்து அவர்களிடம் ஆசீர் பெற்றுக்கொள்ளும்படி கூறினாள்.
லூசியா அவ்வாறே செய்து பெற்றோரிடம் அசீர் பெற்றாள். அப்போது மரிய ரோசா தன் மகளிடம், “ லூசியா தேவ அன்னை உன்னை அர்ச்சிஷ்ட்டவளாக்கும்படி கேட்க மறந்து விடாதே “ என்று கூறினாள். பூசை ஆரம்பிக்க இன்னும் நேரமிருந்தது. லூசியா ஜெபமாலைத் தாயின் பீடத்தடிக்கு மீண்டும் சென்று,
“ அம்மா, என்னை அர்ச்சிஷ்ட்டவளாக்குங்கள்; ஆண்டவரிடம் மன்றாடி என்னை அர்ச்சிஷ்ட்டவளாக்குங்கள் “ என்று கேட்டாள்.
அன்று சேசுவை முதலில் வாங்கியது லூசியாதான். அவள்தான் எல்லோரையும் விடச் சிறியவளாதலாள் முதல் வரிசையில் முதல் இடத்தில் இருந்து மற்றவர்களுக்கு முந்தி சேசுவைப் பெற்றுக் கொண்டாள். சேசு தன் நாவில் பட்டதும், “ நிரந்தரமான ஒரு அமைதியும், சமாதானமும் என்னிடம் ஏற்பட்டது “ என்று லூசியா கூறுகிறாள். பூசை முடியும் வரை,
“ சேசுவே என்னை அர்ச்சிஷ்ட்டவளாக்குங்கள், என் இருதயத்தை எப்போதும் தூய்மையாக உங்களுக்கென்று வைத்துக் கொள்ளுங்கள் சேசு “ என்று கூறிக்கொண்டிருந்தாள். அவள் உள்ளத்தில் சேசு,
“ இன்று நான் உனக்குத் தரும் வரப்பிரசாதம் நித்திய வாழ்வின் பலனைக் கொடுக்கும்படி உன் ஆன்மாவில் நிலைத்திருக்கும் “ என்று கூறிய மொழிகளை லூசியா தெளிவாகக் கேட்டாள். அன்று முதல் அவள் எங்கோ இழுக்கப்பட்டவளாகவும், எதிலோ ஈடுபட்டவளாகவும் இருந்தாள்.
நன்றி : நூல் “ பாத்திமா காட்சிகள் “, மாதா அப்போஸ்தலர்கள் சபை.
குறிப்பு : மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் என்ற தலைப்பிற்கு பதில், “ புனிதர்கள் வாழ்வில் மாதா பக்தியும் திவ்ய நற்கருணை ஆண்டவர் பக்தியும் “ என்று கூட வைக்கலாம்… “ மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் “ என்றே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்…
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !