இவ்வளவு நல்லவரும், கருணையே உருவானவருமாகிய சர்வேசுரன், இவ்வளவு பயங்கர முள்ள நரகத்தைக் கொண்டு ஆன்மாக்களைத் தண்டிப்பாரா? இதெல்லாம் கட்டுக்கதை என்று விசுவாசிகள், குருக்கள், கன்னியர்கள் பலர் சொல்கிறார்கள். இவர்கள், இந்த நரகத்திலிருந்து ஆத்துமங்களைக் காப்பாற்ற சர்வேசுரன் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
சர்வேசுரன் யார்? சகலத்தையும் படைத்தவர்; சகலத்தையும் காண்கிறவர்; சகலத்தையும் அறிகிறவர்; சர்வ நன்மைச் சுரூபியானவர்; ஆதியும் அந்தமுமானவர்; ஆதியும் அந்தமும் இல்லாதவர்; சர்வ வல்லபர்; மகா பரிசுத்த அரூபியானவர்; எங்கும் வியாபித்திருக்கிறவர்.
கடவுள் சம்பூரணமானவர். சகலத்திலும் உத்தமமானவர்; அவரில் குறைவின் நிழல் முதலாய் இல்லை. மாறாதவர், ஏனெனில் மாற்றம் என்பது வளர்ச்சியடைதல், அல்லது தேய்வடைதல் ஆகும். சர்வேசுரனோ, இனி எதிலும் அதிகரிக்க முடியாத அளவுக்கு சகலத்திலும் சம்பூரணத் தன்மையுள்ளவர், எதுவும் தம்மில் குறைவுபடாத அளவுக்கு, சகல நன்மைகளும் சம்பூரணமாய் நிறைந்திருக்கிறவர் அவர். மாறக்கூடியவராக இருந்தால், அவர் சர்வேசுரனாக இருக்கமுடியாது.
தமது திரித்துவக் குடும்பத்தின் அந்தரங்கத்தில் பரிபூரணப் பேரின்பத்தால் நிறைந்திருப்பவர் சர்வேசுரன். அவர் மகிழ்ச்சியாயிருப்பதற்கு படைப்புகள் அவருக்குத் தேவையில்லை. எந்தத் துணையும், தேவையுமின்றி, அவர்தம்மில்தாமே பூரண மகிழ்ச்சியாயிருக்கிறார்.
அப்படிப்பட்டவர் தமது புறவெளிப்பாட்டில், தாம் கொண்ட அளவற்ற சிநேகத்தினால் மனிதர்களைப் படைக்கிறார். மனிதன் பாவத்தைச் செய்து, கடவுளை விட்டுப் பிரிந்து போன போது, அவர் அவனைக் கைவிட்டிருந்தார் என்றால், அதனால் அவருக்கு வந்திருக்கக் கூடிய பாதிப்பு ஏதுமில்லை. பாவம் கட்டிக்கொண்ட கணமே சம்மனசுக்களில் மூன்றில் ஒரு பகுதி யினரை அவர் தண்டித்து, நரகத்தில் தள்ளினார். இதனால் அவரது பேரின்பப் பெருங்கடலில் ஒரு துளி முதலாய்க் குறையவில்லை. மனிதனை அவனது பாவத்திலிருந்து மீட்டு இரட்சிப்பது அவர் பூரண மகிழ்ச்சியாயிருப்பதற்கு எந்த விதத்திலும் அவசியமேயில்லை .
ஆனால் தமது அளவற்ற நேசத்தால் மனிதனைப் படைத்தவர், அதே நேசத்தின் தூண்டு தலால் அவனை இரட்சிக்கவும் திருவுளம் கொண்டார். பாவத்தால் தமக்கு எதிராக மனிதன் கலகம் செய்யத் தொடங்கிவிட்ட போதிலும், அவனை இரட்சிக்க, தம் ஏகபேறான திருச்சுதனையே உலகிற்கு அனுப்பும் அளவுக்கு சர்வேசுரன் உலகத்தை நேசித்தார் என்கிறார் அர்ச். சின்னப்பர்.
இப்படி பாவத்திலிருந்து மனுக்குலத்தை மீட்கும்படி மனிதனாக வரவிருந்த தேவன் ஒரு செல்வந்தராக அல்ல, மாறாக, சகலராலும் கைவிடப்பட்டவராக, உலகின் கண்களுக்கு ஓர் ஏழைச் சிறுமியாகத் தோன்றிய , ஒருக்காலும் கன்னிமை கெடாத அமல உற்பவப் பரிசுத்த தனத்தின் திருவுதரத்தில் கர்ப்பமாய் உற்பவித்து, மாட்டுத் தொழுவத்தில் வந்து பிறந்தார்.
அந்தத் தீவனத் தொட்டியின் மேலே வைக்கோலின் மீது படுத்திருக்கும் குழந்தையைப் பார்! இன்னும் கண்களைத் திறக்க முடியாதிருக்கிறார்! குளிரில் வருந்தி அழுகிறார்! தம் தாயின் திரு அமுதிலும், அர்ச். சூசையப்பரின் அரவணைப்பிலும் அமைதி கொள்கிறார்; ஓர் அரசனின் கோபத்திற்குத் தப்பி அந்நிய தேசத்திற்கு ஓடிப்போகிறார்! அங்கே அகதியாகக் காலம் கழிக் கிறார்! பசியும் பட்டினியுமாகத் தம் நாட்களைக் கழிக்கிறார். ஆயினும் அவர் சர்வேசுரன்! உலக மெல்லாம் அவருடையது ! காண்பவையும், காணாதவையுமான ஒவ்வொன்றும் அவருடையது !
''உன் 33- ஆம் வயதில் நீ ஒரு சாலை விபத்தில் இறந்து போவாய்'' என்று கடவுள் ஒருவனுக்கு அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள். இனி அவன் ஒரு வினாடியாவது அமைதியாய் இருக்கமுடியும் என்று நினைக்கிறாயா? அவன் பெரிய கோடீஸ்வரனாக இருக்கலாம். உலகமே அவனைச் சுற்றி நின்று துதி பாடலாம். விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைக்கலாம். பட்டும், பொன்னும், வைர வைடூரியமும் அணிந்து நாள்தோறும் விருந்தாடலாம். ஆனால் அவன் மகிழ்ச்சியாயிருப்பானா? தனது அவல மரணத்தைப் பற்றிய நினைவு அவனை அரித்துத் தின்று கொண்டேயிருக்காதா?
ஆ. நமக்காக மனிதனாய் வந்து பிறந்த சர்வேசுரன் இதே நிலையில் தானே இருந்தார்! எதிர் காலத்தையும், அது நமக்கென வைத்திருக்கும் துன்பங்களையும் அறியாதிருக்க நமக்கெல்லாம் இருக்கிற பாக்கியம் முதலாய் நம் சேசுவுக்கு இல்லையே! சர்வேசுரனாய் இருந்ததால், தம் கொடிய மரணத்தின் ஒவ்வொரு வேதனையையும், துன்பத்தையும் என் ஆண்டவர் உணர்ந்திருந்தாரே! அவர் வளர வளர, இந்தக் கொடிய துன்பமும் அவரோடு சேர்ந்து வளர்ந்து கொண்டே வந்ததே!
பரிசுத்த இடைவிடா சகாயமாதாவின் திருச்சித்திரம் மேற்கூறிய காரியத்தைத் துல்லியமாக விவரிக்கிறது. அதில் தமது திவ்விய அன்னையின் திருக்கரத்தில் இருக்கும் சேசு பாலனிடம் அர்ச். மிக்கேல் அதிதூதரும், அர்ச். கபிரியேல் தூதரும் தோன்றி, அவருடைய சிலுவைப்பாடுகளின் கருவிகளைக் காண்பிக்கிறார்கள். ஆண்டவர் அவற்றைக் கண்டு மிரண்டு தம் தாயை அச்சத் தோடு ஒண்டிவர, மாதா வேதனையோடு அவரை ஆதரவாக அணைத்துக்கொள்ளும் அதே வேளையில், அந்தப் பரபரப்பினால் சேசுபாலனின் ஒரு காலணி கழன்று கீழே விழுகிறது!
ஆம், தம் பிறப்பு முதலே தம் திருப்பாடுகளை எந்நேரமும் தம் கண்முன்பாகக் கொண்டு வாழ்ந்தார் நம் ஆண்டவர். உண்மையில் இதை விடக் கொடூரமானதும், பரிதாபமானதுமான வாழ்வு இருக்கவே முடியாது. முப்பது வயது வரை, தம் தாய் தந்தையருக்குக் கீழ்ப்படிந்து, தச்சனின் மகனாக, தாமே ஒரு கூலி வேலை செய்து வாழ்வு நடத்திய தேவ சுதன், காலம் நிறைவுற்ற போது, தமது பொது வாழ்வைத் தொடங்கி, பாலஸ்தீனமெங்கும் கால்நடையாகவே சுற்றித் திரிந்து, பரலோக இராச்சியம் நெருங்கி விட்டது என்னும் சுவிசேஷத்தை எங்கும் போதித்து, தமது புதுமைகளால் தமது தெய்வீகத்தை எண்பித்து வந்தார். கிடைத்ததை உண்டார், வெயிலிலும், மழையிலும், குளிரிலும் நடந்து சோர்ந்தார், வானத்தையே கூரையாகக் கொண்டு படுத்துறங்கினார், பகலெல் லாம் நற்செய்தி அறிவித்தபின் இரவு முழுவதும் விழித்திருந்து ஜெபம் செய்து கொண்டிருந்தார்.
தமது நேரம் வந்தபோது, கொடிய மரணத்திற்குத் தம்மைக் கையளித்தார். ஒலிவத் தோப்பில், தமது திருப்பாடுகளை இன்னும் தீர்க்கமாகக் கண்டு துடித்தார். இவ்வளவு பாடுகளுக்குப் பின்னும், மனந்திரும்பாமல் நரகத்தில் விழும் கோடிக்கணக்கான ஆன்மாக்களுக்குத் தம் திரு இரத்தம் பயனற்றுப் போவதைக் கண்டு, கூடுமானால் இந்தப் பாத்திரம் தம்மை விட்டு அகலும் படி ஜெபிக்குமளவுக்கு கொடூர வேதனைக்குள்ளாகி, இரத்த வியர்வை சிந்தினார். மனிதர் அனைவரின் சகல பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட, தமது பிதாவால் கைவிடப்பட்டு, தமது நித்திய வாழ்வில் முதல் முறையாக, அவரைப் பிரிந்து " நரக வேதனையை அனுபவித்தார்!
இறுதியாக நண்பனாயிருந்த ஒரு துரோகியால் காட்டிக் கொடுக்கப்பட்டு, கற்றூணில் கட்டுண்டு, உள்ளுறுப்புகளும் கன்றிப்போகும் அளவுக்கு ஐயாயிரத்துக்கும் அதிகம் அடிபட்டு, முள்முடி சூட்டப்பட்டு, மரணத் தீர்வை பெற்று, இசையாஸ் கூறுவது போல, மனித சாயலையே இழந்து, திருச்சிலுவைப் பாதையில், பதினைந்தடி நீள சிலுவையைச் சுமந்து தொய்வோடு நடந்து, மழுங்கிய ஆணிகளால் சிலுவையில் அறையப்பட்டு, ஏறக்குறைய நிர்வாணியாக இரு
கள்வர்களுக்கிடையே மூன்று மணி நேரம் தொங்கி, மகா கொடிய வாதைகளை அனுபவித்து, தமது இறுதித் துளி இரத்தத்தையும் சிந்தி, மரித்தார். தமக்குச் சொந்தமில்லாத ஒரு புதுக்கல்லறையில் அடக்கம் செய்யப்படும் அளவுக்கு பூரண ஏழையாக தம் வாழ்வை முடித்தார்.
ஆயினும் தாம் முன்னறிவித்தது போலவே மூன்றாம் நாள் உயிர்த் தெழுந்து, தம் அப்போஸ்தலர்கள் வழியாய்த் திருச்சபையை ஏற்படுத் தினார். தாம் ஏற்படுத்திய தேவத்திரவிய அநுமானங்களை (அருட்சாத் னங்களை அத்திருச்சபையிடம் ஒப்படைத்து, அவற்றின் வழியாகவும், இன்னும் வேறு வரப்பிரசாத வாய்க்கால்களின் வழியாகவும் நமக்குத் தமது வரப்பிரசாதங்களையும், பேறுபலன்களையும் வழங்கி வருகிறார். நம் கரத்தைப் பிடித்து, நம்மைப் பாதுகாப்பாக மோட்சத்திற்கு அழைத்து வருவதற்காகவும், மோட்சம் செல்ல நமக்குத் தேவையான சகல வரப் பிரசாதங்களையும் நமக்குக் பகிர்ந்தளிப்பதற்காகவும் தம் திருமாதா வையே நமக்கும் தாயாகத் தந்தார்.
நமக்கு வரும் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்க ஒரு காவல் சம்மனசானவரை நமக்குத் தந்திருக்கிறார். ஏழு முறை எழுபது முறை பாவம் செய்தாலும், மனஸ்தாபத்தோடு அவரை நெருங்கிப் போகும்போதெல்லாம், பாவசங்கீர்த்தனத்தின் வழியாக நம்மை மன்னிப்பதோடு, இந்தக் கண்ணீர்க் கணவாயாகிய பரதேச வாழ்வில் நமக்குத் திடனாகவும், போஜனமாகவும், வழித்துணையாகவும் தம்மையே நமக்குத் திவ்விய நற்கருணை மூலமாகத் தந்தும் வருகிறார்.
பரலோக , பூலோக, பாதாள லோகமென்னும் மூன்று லோகங்களிலும் அடங்காத தேவாதி தேவன் நமக்காக மனிதனாகி, நம் இரட்சணியத்திற்காக இவ்வளவையும் செய்து முடித்த பின்பும், "எனக்கு நீர் தேவையில்லை! நீர் எனக்கு வாக்களிக்கிற அந்த எதிர்கால நித்திய வாழ்வில் எனக்கு நம்பிக்கையில்லை. அது எனக்குத் தேவையுமில்லை! நரகத்தைப் பற்றி எனக்கு பயமும் இல்லை. நான் நேசிக்கிற இந்த உலக இன்பங்களையும், அந்தப் பெண்ணையும், இந்த செல்வங்களையும் விட நீர் அதிக அழகுள்ளவராய்த் தோன்றவில்லை" என்று சொல்லி, அவரது அளவில்லாத நேசத்தை நிந்தித்துப் பரிகாசம் செய்கிற ஒருவனுக்கு நரகம் கூட குறைவான தண்டனைதான் அல்லவா?