அர்ச்சியசிஷ்டவர்களின் வாழ்வில்...!
1927-ல் போலந்தின் வார்ஸாவில் தங்கியிருந்த சங். மாக்ஸிமிலியன் கோல்ப் அந்நாட்டின் சாத்தானின் இரகசிய சபை க்ராண்ட் மாஸ்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டெம்போவ்ஸ்கி என்பவரைச் சந்திக்கச் சென்றார். "நான் தந்தை மாக்ஸிமிலியன் கோல்ப், பிரான்சிஸ்கன் துறவி!'' என்று கூறி தம் கையைப் பற்றிக் குலுக்கியவரைக் கண்டு திகைத்துப்போன அவர் ஆச்சரியத்தோடு, அவர் வந்த காரணத்தைக் கேட்டார். ''நான் உங்களோடு மிக முக்கியமான ஒரு காரியம் பேசவும், ஒரு கேள்வி கேட்கவும் விரும்புகிறேன்'' என்றார் குரு. தம் ஆச்சரியம் இன்னும் அதிகமாக, ''சரி, என்ன கேட்கப் போகிறீர்கள்?" என்று கேட்டார் கிராண்ட் மாஸ்டர். ''நீங்கள் எப்போதாவது ஜெபிப்பீர்களா?" இது குருவின் கேள்வி. ''இல்லை, நான் ஜெபிப்பதே இல்லை" என்று பதில் வந்தது.
இப்போது மாக்ஸிமிலியன் சுவாமி தம் பாக்கெட்டிலிருந்து ஓர் அற்புதச் சுரூபத்தை எடுத்து, "தயவு செய்து இதை வாங்கிக்கொள்ளுங்கள்" என்று நீட்ட "என் வீட்டில் நிறைய பொருட்கள் இருக்கின்றன'' என்று கூறி மறுக்க முயன்றவரை இடைமறித்து, ''அவற்றோடு இந்தச் சுரூபத்தையும்தான் வைத்துக்கொள்ளுங்களேன்" என்று கூறிய குருவானவர் அவரைக் கூர்ந்து பார்த்தார்.
அவரது கூரிய பார்வையின் தாக்குதலை எதிர்கொள்ள இயலாமல், கிராண்ட் மாஸ்டர், அந்த அற்புதச் சுரூபத்தை வாங்கிக் கொண்டார். இப்போது குருவானவர்: "மேன்மை மிக்கவரே! உங்களிடம் ஒன்று கேட்கப் போகிறேன், நீங்கள் ஜெபிக்க வேண்டாம்; அதனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்தச் சுரூபத்தை மட்டும் உங்களோடு எப்போதும் வைத்திருக்கும்படி மட்டுமே கேட்கிறேன். இதை மட்டும் நீங்கள் செய்தால் போதும், அமலோற்பவி தனது பாகத்தைச் செய்வார்கள். செய்வீர்களா?' என்று சற்று இரக்கத்தோடு கேட்ட அந்தப் பரிசுத்த குருவின் பேச்சைத் தட்ட முடியாமல் சரியென்று தலையசைத்தார் கிராண்ட் மாஸ்டர். அவரிடமிருந்து குருவானவர் விடை பெற்றுச் சென்றார். உண்மையிலேயே அந்த இரகசிய சபையின் தலைவர் அந்த அற்புதச்சுரூபம் எப்போதும் தமது சட்டைப்பையில் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.
... ஆண்டுகள் கடந்தன. இரண்டாம் உலகப் போரும் வந்தது. போலந்து நாடு ஆக்கிரமிக்கப் பட்டது. மரணக் கிடங்கில் சாவுகள், வார்ஸா புரட்சி என என்னவெல்லாமோ அந்நாட்டில் நடந்து விட்டன. 1946-ல் போலந்து விடுதலை பெற்றது.
இந்தக் கடினமான நாட்களில் தந்தை மாக்ஸிமிலியன் கோல்பின் புனிதம் பிரபலமடைந்தது. சிறைப்பிடிக்கப்பட்டு, பாதாளமரணக்கிடங்கில் மரணத் தீர்ப்புப் பெற்ற ஒரு குடும்பத் தலைவனை விடுவித்து, அவனுக்குப் பதிலாகத்தாம் வேதசாட்சியமடைந்த அவரது புகழ் நாடு முழுவதும் பரவியது. கிராண்ட் மாஸ்டரும் தம்மை வந்து சந்தித்த புனிதத் துறவியை நினைவுபடுத்திக் கொண்டார்.
மூன்று மாதங்கள் கடந்தன. வார்ஸாவில் ஒரு சவ ஊர்வலம் நடைபெற்றது. அது ஒரு கத்தோலிக்க அடக்கச் சடங்கு. ஆம்! கிராண்ட் மாஸ்டராக இருந்த ஸ்டெம்போவ்ஸ்கியின் உடல் கத்தோலிக்கக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. போலந்தின் சாத்தானின் இரகசிய சபையின் உயரிய அதிகாரி தமது மரணப்படுக்கையில் மனந்திரும்பியிருந்தார்! ஒரு கத்தோலிக்கராக மரித்திருந்தார்!! இறுதியில் துப்பாக்கித் தோட்டா தன் இலக்கை எட்டியிருந்தது.
அர்ச். மாக்ஸிமிலியன் கோல்ப் தமது ''அமலோற்பவியின் வீரர்கள்'' ஆன்மாக்களை மனந் திருப்ப தேவதாயின் அற்புதச் சுரூபத்தைப் பயன்படுத்தும்படி தூண்டி வந்தார். அதனை இராணுவ மொழியில் 'துப்பாக்கித் தோட்டா!" என்று அழைத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: "Ave Maria" Oct. 2004 இதழ்.
மரியாயே வாழ்க!