வாழ்வில் தன் நித்திய இரட்சணியத்தைக் குறித்து அஞ்சி நடுங்குகிறவன், மரண நேரத்தில் முழுத் திடன் கொண்டு தேவ பிரசன்னத்தை எதிர்நோக்கி நிற்பான். "நீதிமான்களின் ஆத்துமங்கள் கர்த்தரின் கரங்களில் இருக்கின்றன. மரணத்தின் கொடுமை அவர்களைத் தொடாது என்று ஞானியானவர் கூறுகிறார் (ஞானாகமம் 3:1). "ஆத்துமமே புறப்படும்" என்னும் வார்த்தை உச்சரிக்கப்படும்போது உலகத்தன்மையான மனிதர் அஞ்சி நடுங்குவார்கள். புண்ணியவான்கள் பயப்பட மாட்டார்கள்.
இவ்வுலக செல்வங் களைவிட்டுப்போவது பற்றிப் புனிதர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏன்? அவர்கள் அவற்றின் மேல் பற்றுதல் வைக்காதிருந்தார்கள். அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் தமது சீடர்களை நோக்கி "கர்த்தராகிய சேசுக்கிறிஸ்துநாதரைக் குறித்து இப்பூமியில் சகல பொருட்களையும் இகழ்ந்து உரிந்தெரிந்து விட்ட நீங்கள் பாக்கியவான்கள்' என்றார். "உங்களுக்கு மறுவுலகத்தில் அதிக உத்தமமும், நிலை பெற்றதுமான செல்வம் இருப்பதை அறிந்து, இவ்வுலகத்தில் உங்கள் பொருட்களை மற்றவர்கள் கொள்ளையடிக்க சந்தோஷத்தோடு விட்டு விட்டீர்கள்'' என்கிறார் (எபிரே. 10:34).
அர்ச்சியசிஷ்டவர்கள் பூலோக மகிமைகளை விட்டுப் பிரிந்து போவதைக் குறித்தும் துக்கப் படுவதில்லை. ஏன்? அவையெல்லாம் அற்ப புகையென்றும், மாய்கை என்றும் மதித்து அவைகளை வெறுத்து வந்தார்கள். கர்த்தரைச் சிநேகிப்பதும், அவரால் சிநேகிக்கப்படுவதுமே உத்தம மகிமை என்று மதித்தார்கள். தங்கள் உற்றார், சுற்றத்தாரை விட்டுப் பிரிவது பற்றியும் அவர்கள் வருந்து வதில்லை . ஏன்? அவர்கள் ஆண்டவரையும், அவர் நிமித்தம் தங்கள் அயலாரையும் சிநேகித்து வந்தார்கள்.
தாங்கள் மரிக்கும் போது தங்களைவிட அவர்களை அதிகமாய் நேசிக்கும் பரம பிதாவின் பராமரிப்பின் கீழ் ஒப்படைத்து விட்டுப் போகிறார்கள். மேலும் இரட்சணியம் அடைவோமென நம்பியிருப்பதால் தாங்கள் உலகில் இருக்கும்போது செய்வதைவிட பரலோகத்திலிருந்து அதிக உதவி செய்ய முடியும் என்பதில் உறுதியாயிருக்கிறார்கள். கடைசியாய் அவர்கள் எப்போதும் வாழ்நாளில் சொல்லி வந்தது போல "என் ஆண்டவரே! என் சர்வமே" என்று மரண நேரத்திலும் இன்னும் அதிக உருக்கத்தோடும் ஆறுதலோடும் உச்சரிப்பார்கள். விசுவாசத்தினுடையவும், தேவசிநேகத்தினுடை யவும் பூரண உறுதிப்பாட்டுடன் தங்கள் நித்தியத்திற்குள் அடியெடுத்து வைப்பார்கள்.
நாம் புனிதர்களைக் கண்டுபாவிப்போம். உலகம் மோட்சத்தை நோக்கிய ஒரு பாதையே தவிர வேறல்ல. நாம் திருயாத்ரீகர்கள். வழியில் நாம் சத்திரங்களில் தங்கலாம். மனதிற்கினிய நீரோடைகளும், சோலைகளும் நமக்கு எதிர்ப்படலாம். சற்று நேரம் அவற்றில் தங்கி ஓய்வு கொள்ளலாமே தவிர, தொடர்ந்து அங்கேயே தங்கிவிட்டால், மோட்சம் சென்றடைய மாட்டோம்.
உலக இன்பங்களும், மகிமைகளும், அதில் நாம் பற்றுக் கொள்ளச் செய்து விடாதபடி, எப்போதும் நித்தியத்தையும், பரலோகத்தையும் கண்முன் கொண்டு வாழ வேண்டியது அவசியம். உண்மையான, நிரந்தரமான, நித்தியமான, மகிழ்ச்சி நிறைந்த இளைப்பாற்றியை மோட்சத்தில் மட்டுமே நாம் பெற்றுக்கொள்ள முடியும். கானல் நீரைத் துரத்துபவனோ ஒருபோதும் தன் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளமாட்டான்.