மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் -7 : திவ்ய நற்கருணை ஆண்டவரின் தரிசனம்..
1916- ஆண்டு செப்டம்பர் பிற்பகுதி அல்லது அக்டோபர் முற்பகுதியாக இருக்கலாம். அன்று பாத்திமா குழந்தைகள் லூசியா, பிரான்சில்ஸ், ஜெசிந்தா மூவரும் கபேசா மலைச்சரிவின் குகையில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆடுகள் அங்குமிங்கும் சிதறி மேய்ந்தன.
வழக்கம்போல் ஜெபமாலை சொல்லி முடிந்ததும் மூவரும் தலை தரையில் பட கவிழ்ந்து சேர்ந்த குரலில் வானதூதர் சொல்லிக்கொடுத்த ஜெபமான,
“ என் தேவனே, உம்மை விசுவசிக்கிறேன், உம்மை ஆராதிக்கிறேன், உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசியாதவர்களுக்காகவும், உம்மை ஆராதிக்காதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை நேசியாதவர்களுக்காகவும் உமது மன்னிப்பை கேட்கிறேன்.” என்று ஜெபித்தார்கள். இப்படி சில தடவைகள் சொல்வதற்குள் திடீரென ஓர் ஒளி அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அதே வானதூதர் அங்கு நின்றார் (இது வானதூதரின் மூன்றாம் வருகை).
அவரது இடது கரத்தில் பூசைப்பாத்திரத்தைப் பிடித்திருந்தார். அப்பாத்திரத்தின் மேலே திருஅப்பத்தை வலது கையில் ஏந்தியிருந்தார். திருஅப்பத்திலிருந்து இரத்தம் துளிர்த்து துளித்துளியாய் பாத்திரத்தினுள் வடிந்தது.
வானதூதர் அப்பாத்திரத்தையும், நற்கருணை அப்பத்தையும் அப்படியே ஆகாயத்தில் விட்டு விட்டு குழந்தைகளுடன் முழந்தாளிட்டு சாஷ்ட்டாங்கமாய் விழுந்து :
“ மகா பரிசுத்த தமத்திருத்துவமே, பிதாவே, சுதனே, இஸ்பிரீத்து சாந்துவே! உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகெங்குமுள்ள திவ்ய நற்கருணைப்பேழையில் இருக்கும் சேசுக்கிறிஸ்து நாதருடைய விலைமதிக்கப்படாத திருச்சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும், அவருக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத்திற்கு பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சேசுவின் திருஇருதயத்தினுடையவும், மரியாயின் மாசற்ற இருதயத்தினுடையவும் அளவற்ற பேறுபலன்களையும் பார்த்து நிர்ப்பாக்கிய பாவிகளை மனம் திரும்பும்படி மன்றாடுகிறேன் “ என்று மும்முறை கூறி ஜெபித்தார்.
பின் எழுந்து ஆகாயத்தில் நின்ற பாத்திரத்தையும், திவ்ய நற்கருணை அப்பத்தையும் கரங்களில் முன்போல் ஏந்திக்கொண்டு, தட்டையான பாறையில் முழந்தாழிட்டு :
“ நன்றியற்ற மனிதர்களால் சகிக்கக்கூடாத விதமாய் அவசங்கைப்படுத்தப்படுகிற சேசுக்கிறீஸ்து நாதருடைய திருச்சரீரத்தையும், திரு இரத்தத்தையும் அருந்தி பானம் செய்யுங்கள். அவர்களுடைய அக்கிரமங்களுக்காகப் பரிகாரம் செய்து உங்கள் கடவுளை ஆறுதல் படுத்துங்கள் “ என்றார்.
லூசியா, பிரான்சிஸ், ஜெசிந்தா மூவரும் திரு அப்பத்திலிருந்து துளிர்த்த இரத்தம் பாத்திரத்தில் விழுவதைப்பார்த்தார்கள். வானதூதர் திவ்ய நற்கருணையின் அப்பத்தை லூசியாவின் வாயில் வைக்க அவள் அதை உட்கொண்டாள். பிரான்சிஸ், ஜெசிந்தாவுக்கும் பாத்திரத்தில் இருந்த திரு இரத்தத்தைப் பானம் பண்ணக்கொடுத்தார். இவ்விருவருக்கும் இதுவே புது நன்மையாயிருந்தது.
பின்னர் மீண்டும் தூதன் சாஷ்ட்டாங்கமாக விழுந்து அதே ஜெபத்தை மும்முறை கூறிச் செபித்தார். இப்போது குழந்தைகளும் அவருடன் சேர்ந்து அச்ஜெபத்தை சொன்னார்கள். இதன் பின் வானவர் சூரிய ஒளியில் கலந்து மறைந்து விட்டார். வானவர் போனபின் குழந்தைகள் மூவரும் அவர் கற்றுக்கொடுத்த இரண்டு ஜெபங்களையும் சேர்த்து ஒன்றாக்கி அதைப் பல தடவைகள் சொன்னார்கள். இந்தக் காட்சியில் சர்வேசுவரன் அவர்களுடன் இருந்த உணர்வு எவ்வளவுக்கதிகமாக இருந்ததென்றால் தங்கள் உடலை உதறிவிட்டது போல் தோன்றியதாக லூசியா கூறியுள்ளாள்…
நன்றி : நூல் “ பாத்திமா காட்சிகள் “, மாதா அப்போஸ்தலர்கள் சபை.
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !