மாதா வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தியாக இருக்கிறார்கள்; அவர்களது கன்னிமைக் கரங்கள் வழியாக அன்றி எந்த வரப்பிரசாதமும் மனிதர்களுக்கு வருவதில்லை. தன் ஜெபங்களால் நமக்குத் தேவையான சகல வரப்பிரசாதங்களையும் பெற்றுத் தரும் ஒரு மத்தியஸ்தியை நமக்குத் தந்தருளினதற்காக, தேவ இரக்கத்திற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர் களாய் இருக்க வேண்டும்!
மரியாயின் பாதுகாவல் ஏன் இவ்வளவு வல்லமையுள்ளதாக இருக்கிறது? ஏனெனில் அவர்கள் தேவ தாயாராக இருக்கிறார்கள். "தேவ தாயாரின் ஜெபம் ஒரு கட்டளை போல் பாவிக்கப்படுகிறது, ஆகவே அவர்களது ஜெபம் கேட்கப்படாதிருக்க சாத்தியமேயில்லை' என்கிறார் அர்ச். அந்தோனினுஸ். ஏனெனில் மரியாயின் ஜெபங்கள் ஒரு தாயின் ஜெபங்கள். இதன் காரணமாக, அவர்களது மன்றாட்டுக்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பே இல்லை.
நிக்கோமேதியாவின் அர்ச். ஜார்ஜ் சொல்வதாவது: "நம் இரட்சகர், தமக்கு மனித சுபாவத்தைத் தந்த தம் தாயாருக்குத் தாம் பட்டுள்ள கடனைத் தீர்ப்பது போல, அவர்களது எல்லா ஜெபங்களையும் கேட்டருளுகிறார்!'' இதனாலேயே அலெக்ஸாந்திரியா மேற்றிராணியாரான அர்ச். தியோபிலஸ் இப்படி எழுதினார்: "தம் தாய் தம்மிடம் ஜெபிக்க வேண்டும் என்று சேசு ஏங்குகிறார், ஏனெனில் அவர்களிடமிருந்து தாம் மனித சரீரத்தைப் பெற்றுக்கொண்டதற்குப் பிரதிபலனாக அவர்கள் கேட்பதையெல்லாம் தர அவர் விரும்புகிறார்.'' அதனால்தான் அர்ச். மெத்தோடியஸ் அதிசயித்தபடி, ''அக்களியுங்கள், மரியாயே! நாங்கள் உங்கள் திரு மகனுக்குக் கடன்பட்டிருக்கிறோம். அவரோ உங்களுக்கு மட்டுமே கடன்பட்டிருக்கிறார்" என்கிறார்.
"இதோ உன் தாய்!'' என்னும் சேசுவின் மரண சாசனம் நமக்கு எப்பேர்ப்பட்ட பாக்கியம்! இவ்வார்த்தைகளின் மூலம் கிறீஸ்துநாதர் நம் ஆன்மாக்களை மாதாவின் கரங்களில் ஒப்புக்கொடுத் தார். ஆதிமுதல் மனித இரட்சணியத்தின் பகைவனான சாத்தானை நடுநடுங்கச் செய்பவர்களாகிய இந்த மகா பரிசுத்த ஸ்திரீ என் பாதுகாவலியாக இருக்கிறார்கள்! உலகமும், பசாசும், சரீரமும் என்னை என்ன செய்து விட முடியும்? ஆயினும் சேசுவைப் போலவே மாமரியின் உத்தம் சிநேகத்திற்கும் நான் கடன்பட்டவனாக, அவர்களுக்கு பதில் சிநேகம் காண்பிக்க வேண்டியவனாக இருக்கிறேன்! இதை எப்படிச் செய்வது? மாதாவே நமக்கு வழிகாட்டுகிறார்கள். தனது பாத்திமா செய்திகளின் வழியாக!
தனக்கு எதிரான ஐந்து வகை நிந்தைகளுக்குப் பரிகாரம் செய்ய மாதா நம்மிடம் கேட்கிறார்கள். மாதா பரிகார மலர் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான காரியம்தான் இது என்றாலும், அவர்கள் மனதில் எப்போதும் கொண்டிருக்க வேண்டுமென்று நாம் வற்புறுத்துவது இதுதான்: மாதா பரிகார பக்தியாகிய முதல் சனி பக்தியைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மாதா மோட்சத்தை வாக்களித்தார்கள் . என்பதற்காகவோ, சுய திருப்திக்காகவோ, தான் கேட்கிற நன்மையான காரியங்கள் மாதா வழியாக அனுகூலமாக வேண்டும் என்பதற்காகவோ முதல் சனி பக்தியைக் கடைப்பிடிப்பதற்கு மேலாக, பின்வரும் கருத்துக்களை அவர்கள் எப்போதும் மனதில் கொள்வார்களாக: மாமரி நம் தாயாக இருக் கிறார்கள்; நம் இரட்சணியம் நம் ஆண்டவரால் மாதாவிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
தன் ஏக பேறான திருக்குமாரன் நம் இரட்சணியத்திற்காகத் தந்த விலையைக் கண்டு மாதா நம்மை அளவு கடந்த விதமாக நேசிக்கிறார்கள். ஆனால் அதற்குப் பதிலாக, இன்று பதிதர், பெந்தேகோஸ்தே சபைக்குச் சென்று விட்ட கத்தோலிக்கர் ஆகியோர் (1) அமலோற்பவம், (2) நித்திய கன்னிமை, (3) தெய்வீகத் தாய்மை என்னும் மாதா பற்றிய சத்தியங்களை வெறுத்துப் பகைத்து, (4) குழந்தைகளின் மனங்களில் தேவ அன்னை மீதான பக்தியை அழித்து. (5) அவர்களது பக்திப் பொருட்களை அகற்றுவதன் மூலம் நித்திய நரகத்திற்குத் தங்களை விற்று விடுகிறார்கள். தன்னை எதிர்ப்பவர்களாகிய இத்தனை ஆன்மாக்கள் அதே காரணத்திற்காக நித்தியத்திற்கும் அழிந்து போவதைக் காண்பது மாதாவுக்குக் கொடிய வேதனையை வருவிக்கிறது.
இந்த வேதனையில் தனக்கு ஆறுதல் தரும்படி மாதா தன் பிள்ளைகளும், முதல் சனி பக்தியை அனுசரிப்பவர்களுமாகிய நம்மிடம் திரும்பி, "நீயாவது எனக்கு ஆறுதல் கொடுக்க முயற்சி எடு" என்று கெஞ்சுகிறார்கள். இதை ஆழ்ந்து பார்ப்போம் என்றால், தன்னை எதிர்ப்போரின் இரட்சணியத் திற்காக முதல் சனி பக்தியை அனுசரிப்பதன் மூலம் தன் மாசற்ற இருதயத் திற்கு ஆறுதல் தரும்படி மாதா கேட்கிறார்கள். மாதா நமக்குக் காட்டும் நேசத்துக்குத் தகுதியான முறையில் பிரதிநேசம் காட்ட பரலோகமே நமக்குத் தரும் அற்புதமான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம் மாக. இதன் மூலம் நம் அன்னைக்குப் பிரியமான குழந்தைகளாகவும், கடவுளின் சிங்காசனத்தை அலங்கரிக்க மாதா பயன்படுத்தும் மலர்களாக வும் நாம் இருப்பதோடு, மாதா வழியாக ஏராளமான ஆன்மாக்களைக் கடவுளிடம் சேர்க்கும் கருவிகளாகவும், "சிறிய இரட்சகர்களாகவும் இருப் போம். இந்தக் கருத்தோடு முதல் சனி பக்தியைக் கடைப்பிடிப்போமாக.
இதன் மூலம் கிறிஸ்துவுக்கும் நாம் ஆறுதலளிக்கிறோம். அன்னை சிந்தும் கண்ணீர், அதன் உப்பு சிறிதளவு மகனின் திரு இருதயத்தில் படியாமல் சிந்தப்பட்டதில்லை. தாயின் ஒவ்வொரு உணர்வும் அவர்களை அளவற்ற விதமாக நேசிக்கும் தேவ சுதனில் பிரதிபலிக்கிறது. இவ்வாறு அன்னையின் மகிழ்ச்சி மகனை மகிழ்விக்கிறது. அன்னையின் துயரம் மகனை அழச் செய்கிறது. ஏனெனில் நம் சேசு மாமரியின் உத்தமமான மகனாக இருக்கிறார். அன்பர்களே, இதற்கு எதிரான எந்த ஒரு போதனையையும் எதிர்த்து நில்லுங்கள். ஏனெனில் மாமரிக்கு எதிரான எந்தப் போதனையும், அவர்களது எதிரியிடமிருந்தே வருகின்றன.
மேலும் ஜென்மப் பாவ தோஷத்தாலும், கர்மப் பாவங்களாலும், உலக நாட்டங்களாலும் கறைபட்டுள்ள நம் ஜெபங்கள் சேசுவுக்கு உகந்தவையாக இல்லை என்றாலும், மாமரியின் கரங்களின் வழியாக அவை ஒப்புக்கொடுக்கப்படும்போது, அவர் மகிழ்வோடு நம் ஜெபங்களை ஏற்றுக் கொள்கிறார். மேலும் சேசுவின் திருப்பாடுகளோடும், மரியாயின் வியாகுலங்களோடும் சேர்த்து ஒப்புக் கொடுக்கப்படுகிற , தேவசிநேகத்தால் நிரம்பிய நம் ஒவ்வொரு பரித்தியாக முயற்சியும், ஆன்மாக் களை மனந்திருப்பும் வல்லமையைப் பெறுகிறது. ஆம், நம் பரிகார முயற்சிகள் தேவ சிநேகத்தால் நிரம்பியிருக்க வேண்டும். அப்போது, அர்ச். குழந்தை சேசுவின் தெரேசம்மாள் கூறுவது போல, "தேவ சிநேகத்தின் நிமித்தமாகத் தரைமீது கிடக்கும் ஒரு குண்டூசியைக் குனிந்து எடுப்பதும் கூட ஆன்மாவை மனந்திருப்பவல்லதாக இருக்கிறது!
இறுதியாக, மரியாயின் மாசற்ற இருதயத்திற்குச் செய்யப்படும் பரிகாரத்தின் வழியாகவே கத்தோ லிக்கப் பாரம்பரியம் திரும்பி வர வேண்டுமென்பது தேவ சித்தமாக இருக்கிறது. இந்தப் பரிகாரம் எவ்வளவுக்கு அன்போடும், ஆர்வத்தோடும், அதிகமான அளவிலும் செய்யப்படுமோ, அவ்வளவு விரைவில் பாரம்பரியம் திரும்பி வரும், சத்தியத் திருச்சபை தனது முந்தின மகிமையையெல்லாம் விட மேலானதொரு மகிமையைப் பெற்றுக்கொள்ளும்.
எனவே மாதாவுக்கு எதிரான பாவங்களுக்குப் பரிகாரம் செய்வோம்; அதன் மூலம் மாதா வோடு இணைந்து நமது ஆன்மாக்களையும், பிறருடைய ஆன்மாக்களையும் நரகத்திலிருந்து மீட்போம்; உலகத்தின் மீது கிறீஸ்து தரும் சமாதானத்தைக் கொண்டு வருவோம். திருச்சபை அதன் முந்தின பாரம்பரிய மகிமைக்குத் திரும்பி வர நாமும் ஒரு சிறு காரணமாக இருப்போம்!
மரியாயே வாழ்க!