மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் - 12 : கடவுளின் மேல் விசுவாசமும், மாதாவின் மேல் உள்ள பக்தியும் நம் இரு கண்களாகட்டும்..
புனிதர் பிறந்த வட்டாரத்திற்கு ப்ரெட்டன் (பிரான்ஸ் நாட்டில் உள்ள ஊர்) என்று பெயர்.. விசுவாசத்தில் மிக உறுதியான மக்கள் வாழ்ந்த பகுதி அது. அவர்கள் விசுவாசம் தகர்க்க முடியாத கற்பாறை போன்றது என்பார்கள். நம் புனிதரின் குடும்பமும் அத்தகைய விசுவாசம் கொண்டதே. திருமறை பற்றிய அறிவு அதிகமில்லாவிடினும் விசுவாச உணர்வு எவ்விதத்திலும் தளர்ச்சியடையவில்லை. இத்தகைய ஆழ்ந்த விசுவாச உணர்விலும் பற்றுதலிலும் சிறந்து விளங்கினார்.
சிறுவன் லூயி மாதாவின் மீது கொண்டிருந்த பக்தி வெறும் உணர்ச்சி வசப்பட்டதொன்றாக தோன்றலாம் ( நேற்றைய பகுதியின் தொடர்ச்சி ) சிறு வயதில் இத்தகைய மன நிலை ஏற்படுவதுண்டு. மெய்தான் ஆனால் லூயி மரி விசயத்தில் அது வெறும் உணர்ச்சியின் மீது அமைந்தன்று என்பதை அவருடைய சரிதை காட்டுகிறது. உணர்ச்சி வசப்பட்டது எதுவும் வெகு நாட்கள் நீடிப்பதில்லை. ஆனால் நம் புனிதர் விசயத்தில் அது நீடித்தது மட்டுமல்ல, நாளுக்கு நாள் அதிகரித்து, அவர் மேற்கொண்ட அப்போஸ்தலப் பணிக்கெல்லாம் ஆதாரமானதைக் காண்கின்றோம்.
மரியன்னையே சிறுவனை தனிப்பட்ட விதத்தில் தேர்ந்து கொண்டு அவனுடைய ஆன்மாவை பல அரிய வரங்களால் அலங்கரித்து, தாம் திட்டமிட்டிருந்த பணிகளுக்கு ஏற்ற கருவியாக ஆக்கினார்கள் என்பது புனிதர் பிற்காலத்தில் சாதித்த பல அரும் பெரும் சாதனைகளிலிருந்தே புலப்படுகிறது. மாதா மீது புனிதர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியை நீக்கினால் அவருடைய சரிதையை நன்றாக புரிந்து கொள்ள இயலாது எனலாம்.
பக்தி :
மாதா மீது அல்லது குறிப்பிட்ட புனிதர்கள் மீது விசேச நம்பிக்கை வைத்து, தமக்கு ஏற்படக் கூடிய தேவைகளில் தொல்லைகளில் அவர்களுடைய உதவியை நாடி நவ நாட்கள் போன்ற முயற்சிகள் செய்வது, அவர்கள் திரு உருவங்கள் முன்பு முழந்தால் படியிட்டு ஜெபிப்பது, திரி ஏற்றுவது, பூமாலை அணிவிப்பது – இது போன்ற நற்செயல்களுக்கு நம் மக்கள் பொதுவாகப் பக்தி என்ற சொல்லைப் பயன்படுத்துவதை காண்கின்றோம். இங்கனம் செய்வதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை என்றாலும், பக்தி என்னும் சொல்லுக்கு வெறும் சாதாரணப் பக்தி முயற்சிகள் என்று பொருள் கூறுவது சரியல்ல.
‘Devotio’ என்ற லத்தீன் சொல்லைத்தான் தமிழில் பக்தி என்று குறிப்பிடுகிறோம். இந்த லத்தீன் சொல்லின் பொருள் என்னவென்றால்:தன்னை முழுவதும் அர்ப்பணித்து வாழ்வது, “ நீயே என் வாழ்வில்லாம், உனக்காகவே நான் வாழ்கிறேன், உம்மையன்றி எனக்கு வேறு நன்மை இல்லை ( சங். 15.2)- இத்தகைய உணர்வோடு என்னாளும் நான் வாழ நீதான் அருள் தர வேண்டும். “ என்ற கருத்தில் இறைவனிடம் நடந்து கொள்வதே உண்மையான பக்தியாகும்.
இத்தகைய மன நிலை இறைவன் பால் மட்டுமே காட்ட முடியும். ஏனெனில் அவர் ஒருவருக்கே நாம் முழுச்சொந்தம். அவர் ஒருவருக்கே நம்மீது நிறைவான அதிகாரமும், சுதந்திரமும் உண்டு. நம் வாழ்வெல்லாம் அவர் கையில்தான் உள்ளது. அவருக்காகவே நாம் வாழ்தல் வேண்டும். அவரிடம் அன்றி நமக்கு நன்மை வேறெங்குமில்லை.
இந்தப் பொருளில் ‘ பக்தி ‘ என்ற சொல்லைக் கொள்வோமானல், இறைவன் ஒருவருக்கே உண்மையான பக்தி உரித்தாகும். மற்றவர்களுக்கு அதாவது இறைவனின் அன்னை கன்னி மரியாயிக்குக்கூட இச்சொல் முற்றிலும் பொருந்தாது என்பது தெளிவு. ஆகவே இச்சொல்லை மாதாவுக்கோ அல்லது வேறு புனிதர்களுக்கோ பயன்படுத்தினால்,
‘ இறைவனுக்கு நம்மை முழுவதும் அர்ப்பணித்து வாழ அந்த மாதா, மற்றும் புனிதர்கள் உதவியை நாடுதல் என்ற கருத்தில்தான் பயன்படுத்த வேண்டும். ஆகவேதான், எந்நேரமும் , ஏதாவது ( உலகைச் சார்ந்த ) தேவைக்காக மட்டும் வேண்டுதல் உண்மையான பக்தியாகாது. ஆனால் அதை நம்பிக்கை முயற்சி அல்லது அதை ஏதோ ஒரு வித பக்தி முயற்சி எனலாம். ( இதன் தொடர்ச்சி நாளை காணலாம்).
“கடவுளி ஒருவரே போதும்” (Dieu Seul) என்பது ஒரு கொள்கை. இக்கொள்கையை முழுக்க முழுக்க கடைபிடிக்க வேண்டுமானால் கடவுள் அல்லாத எதுவும் தேவையில்லை என்று வாழ வேண்டும். அப்படித்தான் வாழ்ந்தவர் நம் புனிதர் லூயிஸ் மரிய மோன்போர்ட்.
இறைவனுக்குரியதை மாதாவுக்கு தந்துவிட நம் புனிதர் நினைக்கவில்லை. ஆனால் இறைவனுக்குரியதை அவரது அன்னையின் துணை கொண்டு முழுவதும் செலுத்துவதே அவரது நோக்கமாயிருந்தது. இந்தப்பொருளில்தான் இப்புனிதரின் மாதா பக்தியை புரிந்துகொள்ள வேண்டும். அவரது வாழ்க்கை முழுவதும் அப்படித்தான் இருந்தது. இளமைப்பருவத்திலேயே புனிதர் மாதா சபையில் சேர்ந்ததை அடுத்த பகுதியில் பார்ப்போம்..
நன்றி : ஜெபமாலை ஜெப வெற்றி வீரர் “ புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் “ வாழ்க்கை வரலாறு. ஆசிரியர் முன்னாள் சென்னை மயிலை பேராயர் அருட்தந்தை இரா. அருளப்பா.
விசுவாசம் இன்றைய நிலை :
ஆயினும் மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ ?" என்றார். லூக்காஸ் 18 : 8
இன்றைய மாதா பக்தியின் நிலை :
வேளாங்கன்னிக்கு நடந்து செல்வதும், காவி உடுத்துவதும், மாதா சுரூபத்திற்கு சேலைகட்டுதல், கழுத்தில் ஜெபமாலை அணிதல், மாதா சுரூபத்திற்கு முன் மண்டியிடுதல், மெழுகு திரு பொருத்துதலில், சொந்த தேவைகளுக்காக மட்டும் அன்னையை அனுகுதல் என்று மாதாவின் பக்தி மாறிவிட்டது. மேலே உள்ள அனைத்தும் நல்லதுதான் ஆனால் ஜெபமாலை சொல்லாத மாதா பக்தியில் எந்த பலனும் இல்லை. ஆனால் அன்னை உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை…
ஆனால் அன்னையின் தேவையை யார் பூர்த்தி செய்வார்கள். அதுதானே மாதாவின் பிள்ளைகளின் வேலை..
“ அம்மா ! எனக்கு அதைக் கொடு…இதைக் கொடு என்று கேட்பதில் தவறில்லை.. ஒரு தாயாக தன் பிள்ளைகளின் குறைகளைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்..
ஆனால், “ அம்மா ! நன்றாக இருக்கிறீர்களா? உனக்கு என்னம்மா வேண்டும்..உனக்கு என்னம்மா நான் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்,” என்று கேட்டால்.
இப்போது உலகெங்கும் இரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் அந்த தெய்வீகத்தாய் சொல்வார்கள்,
“ நன்றி மகனே ! எனக்கு தினமும் ஒரே ஒரு ஜெபமாலையாவது தருவாயா? உன் ஜெபமாலையை வைத்து உன்னையும், மற்ற பாவிகளையும் நான் மீட்டு விடுவேனே ! உன் ஜெபமாலையை வைத்து பாவிகள் நரகம் செல்வதை தடுத்து நிறுத்துவேனே ! அதோடு உன்னால் முடிந்த தவங்களையும், பரித்தியாகத்தையும் உனக்கு வரும் துன்பங்களையும் நீ ஒப்புக்கொடுத்தால் போதும் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.. உன்னை கஷ்ட்டபடக் கேட்கவில்லை. உனக்கு வரும் கஷ்ட்டங்களை தந்தால் போதும்.
“ உனக்கும் உன்னைச் சார்ந்தவர்களுக்கும் நிலையான விண்ணகச்செல்வமான மோட்சத்தை இப்போதே தயார் செய்து விடுவேன்..
உனக்கு உலகத் தேவைகளை மட்டும் செய்து தரும் தாயாக நான் இருக்க விரும்பவில்லை… விண்ணகச் செல்வங்களையும் வாரி வழங்கும் ஆன்மீகத்தாயாகவும் இருக்க இருக்க விரும்புகிறேன்… தருவாயா மகனே ! தினமும் ஒரு ஜெபமாலையாவது?
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !