அன்பான கத்தோலிக்க சொந்தங்களே. நாம் இன்று நல்ல கத்தோலிக்கர்களாக இருப்பதற்கு நமது பெற்றோரும் அவர்களது பெற்றோருமே காரணம். அவர்கள் நமக்கு தந்துவிட்டு சென்ற பாரம்பரியங்கள் நம்மை இன்றளவும் நமது கத்தோலிக்க விசுவாசத்தில் காப்பாற்றி வருகிறது. பழையகாலத்தில் இருந்த அருமையான கத்தோலிக்க நூல்கள், செப புத்தகங்கள், பக்தி இலக்கியங்கள், தியான உரைகள், ஞான நூல்கள், பாடல்கள், போன்றவற்றை பத்திரமாக பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் அருமையான சேவையை தேவமாதா வழியாக தேர்ந்து கொள்ளப்பட்ட போர் அணிகளாகிய சகோதரங்கள் இணைந்து பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை என்ற இணையதளத்தை உண்டாக்கி செய்து வருகிறோம்.
நமது இணையதளத்தில் முன்னூறு ஆண்டுகள் பழமையான நூல்கள் கூட வரி வடிவமாக மாற்றப்பட்டு அடுத்த தலைமுறை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுபோல் முதன்முதல் தமிழில் வெளியான பைபிள் உட்பட மூன்று வகையான மிகப்பழைய தமிழ் பைபிள் நமது பாரம்பரிய கத்தோலிக்த் திருச்சபை இணையதளத்தில் உள்ளது. இதுபோன்ற மிக மிக பழமையான நூல்கள் நமது இணையதளத்தில் அடுத்த தலைமுறையினரின் பயன்பாட்டுக்காக பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுபோல அழிந்து போகும் நிலையிலுள்ள மிகப் பழைய பல கத்தோலிக்க நூல்கள் நமது சீரிய முயற்சியால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இன்னும் இது போல் உலகம் அறியாத பல அழிந்துவிடும் நிலையிலுள்ள மிகப் பழைய கத்தோலிக்க தமிழ் நூல்களை நாம் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரியங்கள் அடுத்த தலைமுறையால் அறிந்து கொள்ளப்பட முடியும்.
இது சார்பாக உங்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்... உங்கள் வீடுகளில் பழமையாலும் மிகப்பழைய தமிழ் நடையினால் பயன்படுத்தப்படாமலும் விட்டுவிட்ட மிகப் பழைய கத்தோலிக்க நூல்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை எங்களுக்கு பெரிய மனது வைத்து அனுப்பி வைத்தால் அவற்றை ஸ்கேன் செய்துவிட்டு மீண்டும் உங்களுக்கே அனுப்பி வைக்கிறோம். குறிப்பாக 1960க்கு முன்பாக அச்சிடப்பட்ட எந்த அளவுக்கு பழமையான கத்தோலிக்க புத்தகங்கள் இருந்தாலும் அவற்றை அனுப்பி வைக்கலாம். வீடுகளில் பயன்படுத்தப்படாமல் மூட்டைக்குள் கட்டப்பட்டு உயிரற்று இருக்கும் அந்த கத்தோலிக்க நூல்களை எங்களுக்கு அனுப்பி வைத்தால் நமது இணையதளம் மூலம் உலகிற்கு அந்த நூல்களுக்கு உயிர் தரும் அருமையான சேவையை நீங்கள் செய்து அந்த நூல்களால் அடுத்த தலைமுறையினருக்கு ஞான பயன்களை தரலாம். ஒன்றேகால் கோடி பார்வையாளர்களைக் கொண்டுள்ள நமது பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை என்ற இணையதளத்தில் அந்த நூல்கள் கொண்டு வரப்பட்டு காலம்காலமாக இருந்து அழியாத நிலை ஏற்பட்டு அடுத்த தலைமுறையால் அவை படித்து பயன் தரும். எனவே உங்களிடமும் உங்கள் கத்தோலிக்க நண்பர்கள், உறவினர்களிடமும் உள்ள மிக மிக பழமையான கத்தோலிக்க நூல்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
மேலும் உங்கள் பங்குத்தளத்தில் குருவானவரிடமும் பங்கு நூல் நிலையம் இருந்தால் அவற்றிலும், பங்கில் உள்ள அருட்சகோதரிகளின் கான்வென்ட் நூல் நிலையத்திலும் இவ்வாறு பயன்படுத்தாமல் உள்ள மிகப்பழமையான நூல்களை கேட்டுப் பெற்று அனுப்பி வைக்கவும் முயற்சி செய்யலாம். அவை ஸ்கேன் செய்யப்பட்டு மீண்டும் உங்களுக்கே அனுப்பப்படும். எனவே இந்த மிகப்பெரிய கத்தோலிக்க சேவையை செய்து நமது அடுத்த தலைமுறைக்கு நமது கத்தோலிக்க பாரம்பரியங்களையுய் வரலாற்றையும் கொண்டு சேர்க்கும் மிக அரிய பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுகிறோம். மிகவும் முக்கியமான அறிவிப்பு நாங்கள் செய்யும் இந்த பணி அழிந்து வரும் பாரம்பரியம் பாதுகாக்கப்படவும், கத்தோலிக்க உறவுகள் பாரம்பரிய சத்தியங்களை அறிந்து கொள்வதற்காக மட்டுமே இந்த இறைப்பணி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள்... திரு சேசுராஜ் : 9894398144 , திரு பிரான்ஸிஸ் சேவியர்: 9944358435 , திரு மகிபன் : 9940527787