யூதேயர்களைப் போலிருக்கிற நான்கு வலுவுள்ள முரடர்கள் ஒரு பாதையினின்று கொலைக்களத்திற்கு குதித்து வருகிறார்கள். அவர்கள் குட்டையான கையில்லாத அங்கி அணிந்திருக்கிறார்கள். கைகளில் ஆணிகளையும், சுத்தியல்களையும், கயிறுகளையும் வைத்திருக்கிறார்கள்.
செந்தூரியன் பருகுகலத்திலுள்ள, உணர்வை மழுக்கும் மீறை கலந்த பானத்தைப் பருகும்படி சேசுவிடம் கொடுக்கிறான். அவரோ அதை மறுக்கிறார். இரு கள்வர்களும் அதிலே நிறைய குடித்துக் கொள்கிறார்கள். அகன்ற வாயுள்ள அந்தப் பருகுகலம் ஒரு பெரிய கல்லின் அருகே உச்சியின் ஓரமாக வைக்கப்படுகிறது.
தீர்ப்பிடப்பட்டவர்கள் உடைகளைக் கழற்றும்படி உத்தரவிடப் படுகிறார்கள். கள்வரிருவரும் வெட்கமற்றவர்களாய் அப்படிச் செய் கிறார்கள். அவர்கள் ஜனக் கும்பலை நோக்கி அசுத்த அபிநயம் காட்டு கிறார்கள். குறிப்பாக வெள்ளைச் சணலாடை அணிந்து நிற்கும் ஒரு குருக்கள் கூட்டத்தைப் பார்த்து அப்படிச் செய்கிறார்கள்.
கொலைஞர்கள், தீர்ப்பிடப்பட்டவர்கள் தங்கள் இடையில் கட்டிக் கொள்ளும்படி மூன்று கிழிந்த பழந்துணிகளைக் கொடுக்கிறார்கள். கொடிய சாபங்களைச் சொல்லிக்கொண்டே கள்வர்கள் அவைகளை எடுத்துக்கொள்கிறார்கள். தன் காயங்களால் ஏற்படும் கொடூரமான வேதனைகளின் காரணமாக சேசு மெதுவாகவே உடைகளைக் கழற்று கிறார். கந்தல் பழந்துணியை மறுத்துவிடுகிறார். அவர் தாம் கசையடி பட்டபோது அணிந்திருந்த குறுகிய உட்காற் சட்டையை அப்படியே வைத்துக் கொள்ளலாம் என எண்ணியிருப்பார். ஆனால் அதையும் கழற்றி விடும்படி கூறப்பட்டபோது, அவர் கொலைஞர்கள் கொடுத்த அந்த கந்தைத் துணிக்குக் கை நீட்டிக் கேட்கிறார். உண்மையாகவே அவர் நிர்மூலமாக்கப்பட்டு விட்டார். குற்றவாளிகளின் கந்தைக்கு கைநீட்ட வேண்டிய அளவிற்கு வந்து விட்டார்.
ஆனால் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த மாதா தன் இருண்ட முக்காட்டிற்கடியில் தலையை மூடியிருந்ததும் தன் கண்ணீ ரால் நனைத்திருந்ததுமாகிய வெள்ளைத் துகிலை தன் முக்காடு கீழே விழாமலே எடுத்து அருளப்பரிடம் கொடுத்து தன் மகனிடம் சேர்க்கும்படி லோஞ்ஜினுஸிடம் தரகச் செய்கிறார்கள். செந்தூரியன் எந்த மறுப்பும் சொல்லாமல் அதை வாங்குகிறான். சேசு ஆளில்லாத பக்கமாகத் திரும்பி நின்று தம் உட்காற்சட்டையையும் கழற்றப் போகையில் லோஞ்ஜினுஸ் அதை அவரிடம் கொடுக்கிறான். சேசு அது தம் தாயுடையது என அடையாளம் கண்டுகொண்டு, அதைத் தம் இடையைச் சுற்றி அவிழ்ந்து விடாதபடி கவனமாக இறுக்கிக் கொள்கிறார்..... இதுவரை மாதாவின் கண்ணீரால் மட்டும் நனைந்த அந்தத் துகிலின் மேல் அவருடைய இரத்தம் படத் துவங்குகிறது. ஏனென்றால் காய்ந்த இரத்தத்தால் மூடப்பட்டிருந்த பல காயங்கள் அவர் தம் காலணிகளைக் கழற்றவும் ஆடைகளை அகற்றிக் கீழே வைக்கவும் குனிந்தபோது திறக்கப்பட்டு, இரத்தம் பாயத் தொடங்கு கிறது. சேசுவின் முதுகுப்புறம் இப்படி ஜனங்கள் பக்கமாய்த் திரும்பி யிருந்தபோது அவர் முதுகில் சால் போல் நெடும் பள்ளங்களால் ஏற்பட்டிருந்த காயங்களும், கிழிவுகளும் வெடித்த கொப்புளங் களும், புண்களும் காய்ந்த பொருக்குகளும் மீண்டும் இரத்தம் வடிக்கத் தொடங்குகின்றன.
இப்போது சேசு ஜனங்கள் பக்கம் திரும்புகிறார். அவருடைய மார் பிலும் கால்களிலும் கைகளிலும் எல்லா இடத்திலும் சாட்டையடி களின் தாக்குதல்களைக் காண முடிகிறது. ஈரலுக்கு நேராக உள்ள இடத்திலே அவரது மார்பில் பெரிய கிழிசல் காயம் ஏற்பட்டிருக் கிறது. மேலும் அவரது இடது விலா எலும்புக் கூட்டிற்கு சற்று கீழாக ஏழு சாட்டையடி காயங்கள் ஏழு சிறு வெட்டுகளுடன் செந்நீல வட்டத்தில் இரத்தம் வடித்துக் கொண்டிருக்கின்றன..... உந்து சவ்வுப் பகுதியில், அதிகமான உணர்வுள்ள அந்த இடத்தில் சாட்டைகளால் அடிபடுவது எவ்வளவு குரூரமானது! அவர் கைது செய்யப்பட்டதி லிருந்தே கல்வாரியில் சேருமட்டும் மறுபடியும் மறுபடியும் கீழே விழுந்ததால் காயப்பட்டுக் கிழிந்த அவருடைய முழங்கால்கள் இரத்த உறைவால் கறுத்துக் காணப்படுகின்றன. முட்டுச் சில்லுகள் கிழிக்கப்பட்டுள்ளன. விசேஷமாக வலது முட்டுச் சில்லில் இரத்தம் வடிகிற ஒரு பெரிய காயம் உள்ளது.
கள்வர்கள் இருவரும் தங்கள் சிலுவையில் கட்டப்பட்டு, சேசுவுக்கு வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் ஒவ்வொருவனாகத் தூக்கிச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் ஓலமிட்டு ஆணையிட்டு சபிக்கிறார்கள். விசேஷமாக சிலுவையின் குழிகளில் அவை நாட்டப் படும்போது கயிறுகள் அவர்களுடைய மணிக்கட்டுகளை இறுக்கி உள்ளே அறுத்துக்கொண்டு போகும் போது ஏற்பட்ட வேதனையால் அவர்கள் கடவுளைப் பழித்தும் சட்டத்தையும் உரோமையரையும் யூதேயரையும் பழித்தும் நரகக் கூச்சலிடுகிறார்கள்.
இனி சேசு சிலுவையில் அறையப்பட வேண்டும். அவர் சாந்தமாக சிலுவையில் படுக்கிறார். இரு கள்வர்களும் சிலுவைகளில் கட்டப்பட்டபோது கொலைஞர்களை அவர்கள் உதைத்துத் தள்ளி விடாமல் தடுப்பதற்காக நான்கு பேர் போதாமல் சில போர்ச் சேவகரும் தலையிட வேண்டியிருந்தது. சேசு விஷயத்தில் யாருமே தேவைப் படவில்லை. அவரே படுத்துக்கொள்கிறார். தலையை வைக்கச் சொன்ன இடத்தில் வைக்கிறார். சொன்னபடியே தம் கரங்களையும் கால்களையும் நீட்டுகிறார். தம் இடையில் சுற்றிய துகில் சரியாயிருக்கும்படி மட்டும் பார்த்துக் கொள்கிறார்.
அவரை அமுக்கிக்கொள்ளும்படி இரு கொலைஞர்கள் அவருடைய நெஞ்சில் உட்கார்ந்து கொள்கின்றனர். அப்போது அந்தப் பாரத்தால் அவர் இறுக்கத்தையும் வேதனையையும் அனுபவிக்கிறார். மூன்றாம் கொலைஞன் அவருடைய வலது கரத்தை எடுக்கிறான். ஒரு கையால் சேசுவின் முழங்கைக்குக் கீழாகவும் மற்றொரு கையால் அவருடைய விரல் நுனிகளையும் பிடித்திருக்கிறான். நான்காம் கொலைஞன் கையில் நீண்ட, கூர்மையான, நான்கு பட்டமும் உருட்டைத் தலையுமுள்ள ஆணியை வைத்திருக்கிறான். அவர் சிலுவை மரத்தில் ஏற்கெனவே இடப்பட்டிருக்கிற துளை சேசுவின் முன் கை எலும்புகளின் மணிக் கட்டுப் பொருத்தில் சேர்கிறதா என்று பார்க்கிறான். அது சேருகிறது. அவன் ஆணியில் நுனியை சேசுவின் மணிக்கட்டுப் பொருத்தில் ஊன்றுகிறான். சுத்தியலை உயர்த்தி முதல் அடியை அடிக்கிறான்.
தம் கண்களை மூடியிருந்த சேசு ஒரு சத்தம் கொடுக்கிறார். கூரிய வேதனையால் அவர் உடல் நடுங்கி சுருங்குகிறது. கண்களைத் திறக்கிறார். கண்ணீ ர் நிறைந்து வழிகிறது. அவர் படும் வேதனை மிகப் பயங்கரமாயிருக்க வேண்டும்.... ஆணி இறங்குகிறது. தசைநார்களையும், இரத்தத் தாரைகளையும், நரம்புகளையும் கிழித்துக்கொண்டு எலும்புகளைச் சிதைத்துக்கொண்டு இறங்குகிறது.
வாதைப்படும் தன் குமாரனின் குரலுக்கு மாதா தேம்பும் முனகல் ஒலியால் பதிலளிக்கிறார்கள். அது வெட்டப்படும் ஆட்டுக் குட்டி யின் குரல் போலிருக்கிறது. தன் தலையைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டு, மிதிக்கப்படுவது போல் கவிழ்கிறார்கள். சேசு தம் தாய்க்கு வேதனை கொடுக்கக்கூடாதென்று, அதற்குப்பின், எந்தக் குரல் ஒலியும் எழுப்பவில்லை. ஆனால் சுத்தியல் அடிகள் தொடருகின்றன - முறை யாக. கடினமாக இரும்பால் இரும்பை அடிக்கிறார்கள்... ஒரு உயிருள்ள உடலின் அங்கம் அதைப் பெறுகிறது!
வலது கையை அறைந்தாயிற்று. இடது கைக்கு வருகிறார்கள். மரத்தில் இடப்பட்ட துளைக்கு மணிக்கட்டு எட்டவில்லை. அதனால் அவர்கள் ஒரு கயிற்றை எடுத்து அவருடைய இடது மணிக்கட்டில் கட்டி தோளின் மூட்டு விடுகிற வரை இழுக்கிறார்கள். தசை நாண்கள் அறுகின்றன. அவரைக் கைது செய்யும் போது கட்டிய கயிறுகள் முன்பே அறுத்திருந்த தோல், மேலும் அறுபட்டுக் கிழிகிறது. இதனால் வலது கையிலும் வேதனை. அதுவும் இழுக்கப்படுகிறது. அதன் காரண மாக மணிக்கட்டின் காயம் ஆணியைச் சுற்றி விரிகிறது. இவ்வாறாக இடது கையின் பெருவிரல் பக்கமான உள்ளங்கை கஷ்டத்துடன் துளையை எட்டுகிறது. அவ்வளவு போதும் என்று எண்ணிய அவர்கள், எங்கே முடிகிறதோ அங்கே ஆணியைச் செலுத்துகிறார்கள். அதாவது பெருவிரலுக்கும், மற்ற விரல்களுக்கும் மத்தியில் - பெருவிரலுக்குச் சமீபமாக உள்ளங்கையில். அங்கே ஆணி எளிதாக இறங்கி விட்டது. ஆனால் கூடுதலான வேதனையுடன். ஏனென்றால் முக்கிய நரம்புகள் வெட்டப்படுகின்றன. இதனால் விரல்கள் அசைவிழந்து விட்டன. வலது கரத்தின் விரல்கள் சுருங்கி நடுங்குகின்றன. காரணம் அவற்றின் உயிர் மூலம் மடியவில்லை. சேசுவோ எந்த வேதனைக் குரலும் எழுப்ப வில்லை. ஆழ்ந்த கரகரத்த குரலில் முனக மட்டும் செய்கிறார். உதடுகள் இறுக மூடியிருக்கின்றன. அவருடைய வேதனையால் கண்ணீர் பெருகி சிலுவை மரத்தில் விழுந்து தரையில் வடிகிறது.
இனி கால்கள். சிலுவையின் அடி முனையிலிருந்து இரண்டு மீட்டர் சற்றுக் கூடுதலான இடத்தில் ஒரு சிறிய ஆப்பு உள்ளது. ஒரு பாதத்திற்குக்கூட அது பற்றாது. இரண்டு பாதங்களையும் அதில் வைத்து அது சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்று பார்க் கிறார்கள். அது சற்றுக் கீழே இறங்கியிருப்பதால் பாதங்கள் அதற்கு எட்டவில்லை. அதனால் அவர்கள் அவரது குதிங்கால்களைப் பிடித்துக் கீழே இழுக்கின்றனர். அப்போது சிலுவையின் கரடுமுரடாயிருக்கிற மரத்தில் அவரது காயங்கள் உராய்கின்றன. அப்படி இழுத்தது அவரது சிரசில் இருந்த முள்முடியைப் பெயர்த்து விட்டது. முள்முடி கழன்று விழப் போகிறது. அப்போது ஒரு கொலைஞன் அவர் முகத்தில் அடித்து மறுபடியும் அதை அவர் தலையில் அழுத்தி வைக்கிறான்...
சேசுவின் நெஞ்சில் உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து அவருடைய முழங்கால்களை நீட்ட வருகிறார்கள். ஏனென்றால் கால்களில் அறையப் போகிற பெரிய ஆணியைக் கண்டு விட்ட சேசு தம்மையறியாமலே கால்களை மேலே இழுத்துக் கொள்கிறார். அந்த ஆணி, கரங்களை அறைந்த ஆணிகளைவிட இரட்டை நீளமும், தடிப்பும் உள்ளது. சூரிய ஒளியில் அது மின்னுகிறது. அவர்கள் தோலுரித்த அவருடைய முட்டுக்களை அமுக்கி காயப்பட்டிருக்கிற முழங்கால் தண்டுகளை அழுத்துகிறார்கள். அவர்கள் அவ்வாறு பிடித்திருக்க, மற்ற இரு கொலைஞரும் இரண்டு பாதங்களையும் ஒன்றாக அறையும் அதிக கடினமான வேலையைச் செய்கிறார்கள். அவர்கள் ஒரு பாதத்தை மற்ற பாதத்தின் மேலே வைத்து கணைக்கால் மூட்டுகள் இரண்டையும் ஒன்றாய்ச் சேர்க்க முயல்கிறார்கள்.
சேசுவின் இரு பாதங்களையும், அவற்றின் குதிங்கால்களையும் விரல்களையும் அமுக்கிப் பிடித்து அசையாமல் இருக்கும்படி செய்ய அவர்கள் முயலுகிறார்கள். ஆனால் அடியில் வைக்கப்பட்டிருக்கிற இடது பாதம் அதற்கு மேலே வைக்கப்பட்ட வலது பாதத்தில் ஆணி அடிக்கப்படுவதால் அதிர்ந்து இடம்பெயருகிறது. வலது பாதத்தைத் துளைத்து மழுங்கியுள்ள ஆணியை, இடது பாதத்தில் அது இறங்கி யுள்ளதிலிருந்து பிடுங்கி, சற்றுத் தள்ளியிருக்கிற நடு இடத்திற்குக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. அப்படிக் கொண்டு வந்து அவர்கள் அதில் அடிக்கிறார்கள் - அடிக்கிறார்கள் - மேலும் மேலும் அடிக்கிறார்கள்... அந்த ஆணி அறையும் சத்தம் மட்டுமே கல்வாரியெங்கும் ஒலிக்கிறது.
சுத்தியலின் கடினமான ஓசையோடு தொடர்ந்து கேட்கிறது ஒரு புறாவின் மெல்லிய இரக்க அழுகுரல் - அது மாதாவின் சிதைந்து குரலின் முனகல். ஒவ்வொரு அடிச் சத்தத்திலும் அவர்கள் மேலும் மேலும் கூனிப் போகிறார்கள். ஒவ்வொரு அடியும் அவர்களையே தாக்குவது போல் அவதிப்படுகிறார்கள். வேதசாட்சியான தாய்! அந்தக் கொடிய வாதையில் அவர்கள் நசுங்குண்டு போகிறார்கள் என்பதை யாரும் கண்டுகொள்ள முடிகிறது. சிலுவையில் அறையப்படுவது மகா பயங்கரமானது. அதன் வேதனையில் அது கசையடிக்கு ஒப்பாகும். ஆனால் கசையடியையும் விட காண அதிக குரூரமானது. சதைக்குள் ஆணி மறைவதைக் காணக் கூடியதாயிருக்கிறது. அறையப்படுவது கசையடியை விட குறுகிய காலத்தில் முடிகிறது.
சேசு அறையப்பட்டிருக்கிற சிலுவையை இப்பொழுது அதன் குழிக்கு இழுத்துச் செல்கிறார்கள். நிரப்பில்லாத தரையில் சிலுவை மோதி அதிர்வதால் சேசுவும் குலுக்கப்படுகிறார். அவர்கள் சிலுவை யைத் தூக்கி உயர்த்தும் போது இரண்டு தடவை அது தவறி விழுகிறது. முதல் தடவை தடாரென்று அப்படியே விழுகிறது. இரண்டாம் தடவை சிலுவையின் வலது கரத்தில் குத்தி விழுகிறது. சேசுவின் புண்பட்ட கை, கால், தலை அனைத்தும் வெகுவாய்க் குலுங்கி தாக்கப்பட்டு அவர் அகோர கொடிய வேதனைப்படுகிறார்.
சிலுவையை அவர்கள் குழிக்குள் விழ விடும் போதும், அது கற்களாலும் மண்ணாலும் இறுக்கப்படுமுன்னும், அது எல்லாப் பக்க மும் ஆடி அசைகிறது. மூன்று ஆணிகளில் தொங்கிக் கொண்டிருக் கிற அந்தப் பரிதாபமான சேசுவின் சரீரம் எப்படி அசைக்கப்பட்டு எத்தகைய நிஷ்டூரமான கொடிய ஆக்கினையை அவர் அனுபவிக் கிறார்! அவருடைய சரீரத்தின் முழுப் பாரமும் முன் பக்கமாகவும் கீழ்நோக்கியும் இழுக்கப்பட்டு காயங்களின் துவாரங்கள் பெரிதா கின்றன. குறிப்பாக இடது கரத்தின் காயமும் கால்களின் காயங்களும் விரிகின்றன. இரத்தம் அதிகமாகக் கொட்டுகிறது. திருப்பாதங்களின் காயங்களிலிருந்து இரத்தம் சொரிந்து விரல்களின் மேல் பாய்ந்து சிலுவையின் மரத்தில் வடிந்து தரையை நனைக்கிறது. திருக்கரங் களின் காயங்களிலிருந்து வடியும் இரத்தம் முன்னங்கை வழியாகப் பாய்கிறது. தோளைவிட கரங்கள் உயரமாக அறையப்பட்டிருப்பதால் இரத்தம் தோளின் அடிக்கு வந்து அதிலிருந்து இடுப்பை நோக்கிப் பாய்கிறது. சிலுவை இறுக்கப்படுமுன் அது சாய்ந்து ஆடுகிறபோது சேசுவின் சிரசு பின்புறமாய் சிலுவையுடன் மோது கிறது. முள்முடியின் பின்புறத்தில் கொத்தாக இருக்கிற முட்களை பிடரியுடன் சேர்த்து நெருக்குகிறது. முன் நெற்றியில் இருக்கிற முட்கள் இரக்கமில்லாமல் அதைக் கீறிக் காயப்படுத்துகின்றன. கடைசியாக சிலுவை மரம் நடப்பட்டு இறுக்கப்பட்டு விட்டது. சேசு அதிலே தொங்கும் கொடூரத்தை அனுபவிக்கிறார்.
கள்வர்களின் சிலுவைகள் குழிகளுக்குள் நிறுத்தப்படுகின்றன. நேர் நிலைக்கு வந்ததும் அவர்கள் உயிருடன் தோலுரிக்கப்படுவது போல் கத்துகின்றனர். கயிறுகள் மணிக்கட்டின் சதைக்குள் அறுத்துக் கொண்டு போவதால் அந்த வேதனை.
இப்பொழுது கல்வாரியின் உச்சியில் சேசுவின் சிலுவை நிற்கிறது. பக்கங்களில் மற்ற இரண்டு சிலுவைகளும், அரை நூற்றுச் சேவகர்கள் போர்ச் சீருடையில் உச்சியைச் சுற்றிலும் அணிவகுக்கின்றனர். அந்த வட்டத்திற்குள் வாகனம் விட்டிறங்கிய பத்து குதிரை வீரர்கள் உள்ளனர். தீர்ப்பிடப்பட்டவர்களின் ஆடைகளின் மேல் அவர்கள் பகடைக்காய் போடுகின்றனர். சேசுவின் சிலுவைக்கும் வலது பக்கச் சிலுவைக்கும் நடுவே லோஞ்ஜினுஸ் நேராக நின்று கொண்டிருக் கிறான். அது வேதசாட்சியான அரசருக்கு உபசார மெய்க்காவல் காப்பது போலிருக்கிறது. லோஞ்ஜினுஸின் துணை ஆணையனின் பொறுப்பில் மற்ற அரை நூற்றுச் சேவகர்கள் கல்வாரியின் உச்சிக்குக் கீழேயுள்ள இடது பக்க மேட்டிலும் பாதையிலும் ஓய்வில் இருக் கிறார்கள். அவசியம் ஏற்பட்டால் உதவ இருக்கிறார்கள்.
சூரியன் வினோதமாக உள்ளது. அது நெருப்புப் போல் மஞ்சட் சிவப்பாயிருக்கிறது. பின் திடீரென அது அணைந்துவிடுவது போலிருக் கிறது. காரணம் யூதேய மலைத் தொடர்களுக்குப் பின்னாலிருந்து கருமேகப் படலம் கிளம்பி வந்து ஆகாயத்தின் குறுக்காகக் கடந்து சென்று மற்ற மலைகளுக்குப் பின்னால் மறைந்துவிடுகிறது. மேக மூட்டம் கடந்த பின் சூரியன் தோன்றும்போது, கண்களுக்கு அதைத் தாங்குவது கடினமாயிருக்கிறது.
லோஞ்ஜினுஸ், குன்று சரிந்து இறங்கும் பக்கத்தின் கீழ் உள்ள சம தளத்தில் மாதாவைக் காண்கிறான். மாதாவின் சித்திரவதைப்படுகிற முகம் தன் மகனை நோக்கி உயர்த்தப்பட்டிருக்கிறது. அவன் பகடை ஆடும் ஒரு சேவகனைக் கூப்பிட்டு : "இவருடைய தாய், தன்னோ டிருக்கிற மகனுடன் இங்கே வர விரும்பினால் வரட்டும். அவர் களுக்கு உதவி செய்து இங்கு கொண்டு வா' என்கிறான்.
மாதாவும் அவர்களுடைய "மகன்" எனக் கருதப்பட்ட அருளப் பரும் இறுகிய சரல் மண்ணில் வெட்டப்பட்டதாக எனக்குத் தெரிகிற படிகளில் ஏறி, போர்ச் சேவகரின் அணி வரிசையைக் கடந்து சிலுவையின் அடிக்குப் போகிறார்கள். சேசுவைப் பார்க்கவும், அவர் அவர்களைப் பார்க்கவும் ஏதுவாக சற்று எட்ட நிற்கிறார்கள்.
தாய் வெளிறிப்போய், நடுங்குகிற உதடுகளால் தன் மகனை ஆறுதல் படுத்த மட்டுமே முயல்கிறார்கள். எந்தத் திட மனதாலும் தடுக்க முடியாத கண்ணீரைத் துடைக்கிற தன் வேதனையான முறுவலால் அதைச் செய்யப் பார்க்கிறார்கள்.
ஜனங்களும், குருக்களும் வேதபாரகரும் பரிசேயர்களும் சதுசேயர்களும் ஏரோதியர்களும் அப்படிப்பட்ட மற்றவர்களும் அங்கும் இங்குமாக சுற்றி நடந்து தங்களையே களிப்புறச் செய்து கொண்டிருக்கிறார்கள். கல்வாரி உச்சிக்குக் கீழுள்ள மேட்டைக் கடந்து செல்லும் போது, மரிக்கிற பலிப் பொருளுக்குத் தங்கள் தேவ நிந்தையான மொழிகளைக் கூற அவர்கள் தவறவில்லை. மனிதர்கள் தங்கள் நாவால் வெளிப்படுத்த முடிந்த அத்தனை கீழ்த்தரமும் குரூரமும், பகையும் வெறியும், சில நரக வாய்களால் சொல்லப்படுகின்றன. இதிலே மகா மூர்க்கமாயிருப்பது தேவாலயத்தைச் சேர்ந்தவர்களே. பரிசேயர்கள் அவர்களுக்குப் பக்க பலமாயிருக்கிறார்கள்.
''நல்லது! மனுக்குலத்தின் இரட்சகனே, உன்னையே நீ ஏன் இரட் சிக்கக் கூடாது? உன் அரசனாகிய பெயல்செபூப் உன்னைக் கைவிட்டு விட்டானா? அவன் உன்னை அங்கீகரிக்க மறுத்து விட்டானா?" என்று கத்துகிறார்கள் யூத குருக்கள். ஒரு கும்பலாக நிற்கிற யூதேயர்கள் சத்தமிட்டு : "நீ, ஐந்து நாளைக்கு முன்புதானே சாத்தானின் உதவியைக் கொண்டு, பிதா உன்னை மகிமைப்படுத்துவார் என்று சொல்லவைத்தாய்! ஹஹ் ஹா!! அவர் தம் வாக்கைக் காப்பாற்றும்படி நீ அவருக்கு ஞாபகமூட்டாததேன்?" என்கிறார்கள்.
மூன்று பரிசேயர்கள் சொல்கிறார்கள்: "தேவதூஷணி! இவன் கடவுளின் உதவியைக் கொண்டு மற்றவர்களைக் காப்பாற்றியதாகச் சொன்னான். தன்னையே காப்பாற்றக் கூடாமலிருக்கிறான். உன்னை நாங்கள் விசுவாசிக்க வேண்டுமா? அந்தப் புதுமையைச் செய். ஓ! இப்பொழுது உன்னால் கூடவில்லையோ? இதோ உன் கரங்கள் அறையப் பட்டிருக்கின்றன! நீ வஸ்திரமில்லாமல் இருக்கிறாய்!" என்கிறார்கள்.
சில சதுசேயர்களும், ஏரோதியர்களும் போர்ச் சேவகரிடம்: "இவனுடைய ஆடைகளை எடுத்துள்ள நீங்கள் இவனுடைய மந்திர மாயத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். பாதாளத்தின் அடையாளம் இவனுக்குள்ளே இருக்கிறது'' என்கிறார்கள்.
ஒரு ஜனக்கும்பல் ஊளையிட்டு : "சிலுவையை விட்டு இறங்கி வா. அப்போது நாங்கள் உன்னை விசுவசிப்போம். தேவாலயத்தை அழித்து விட விரும்புகிறவனே... மூடா.... அதோ அங்கே பார் அதை! இஸ்ராயேலின் மகிமை பொருந்திய புனித தேவாலயத்தை அவசங்கை செய்கிறவனே, அது தொடப்பட முடியாதது! நீதான் செத்துக் கொண்டிருக்கிறாயே!" என்கின்றனர்.
வேறு சில குருக்கள்: "தேவதூஷணம்! நீயா தேவகுமாரன்? அப்படியானால் அங்கிருந்து கீழே இறங்கி வா. நீ கடவுளாயிருந்தால் எங்களை இடி மின்னலால் தாக்கு. உன்னைக் கண்டு நாங்கள் பயப்பட வில்லை. உன்னைக் காறித்துப்புகிறோம்.''
அவ்வழியாய்ப் போகும் மற்றும் சிலர் தங்கள் தலைகளை அசைத்து : "இவனால் அழத்தான் முடியும். தெரிந்து கொள்ளப்பட்டவன் நீ என்பது உண்மையானால் உன்னையே இரட்சித்துக் கொள்' என்கிறார்கள்.
போர்ச் சேவகர் இப்படிச் சொல்கிறார்கள்: ''ஆமாம். உம்மையே நீர் காப்பாற்றிக்கொள்ளும். சண்டை சச்சரவான இடங்களில் எல்லாம் பெரிய சண்டை சச்சரவின் இடமாகிய இப்பகுதியை எரித்து சாம்பலாக்கி விடும். இதை மட்டும் செய்துவிடும். உரோமை உம்மைத் தலைநகரில் வைத்து ஒரு கடவுளாக வழிபடும்.''
''அவன் தன்னுடைய ஸ்திரீகளான மார்த்தாளிடமும் மரியாளிட மும் நானே உத்தானமும் உயிரும் என்று சொல்வான். ஹாஹ்ஹா! ஹா! உத்தானம் மரணத்தை விரட்ட முடியவில்லை. உயிர் இறந்து கொண்டிருக்கிறது.''
"மரியாளும் மார்த்தாளும் அதோ நிற்கிறார்கள். அவர்களிடம் லாசர் எங்கே என்று கேட்போம். அவனைத் தேடுவோம்.'' இப்படிக் கூறியவர்கள் ஸ்திரீகள் நிற்கிற இடத்திற்கு வந்து மிடுக்காக : "லாசர் எங்கேயிருக்கிறான்? அவன் அரண்மனையிலா?" என்று கேட்கிறார்கள்.
அதைக் கண்ட மற்றப் பெண்கள் பயந்து இடையர்களுக்குப் பின்னால் ஓட, மரிய மதலேன் முன்னுக்கு வருகிறாள். அவளது இத்துயர வேதனையில் அவளுடைய பாவ நாட்களின் தைரியம் அவளுக்கு ஏற்படுகிறது. அவள் பேசுகிறாள் : "போங்கள். அந்த அரண்மனையில் உரோமைப் படைவீரர்கள் என் நாட்டின் ஐந்நூறு ஆயுதபாணி களுடன் இருப்பார்கள். அவர்கள் இயந்திரக் கல் வெட்டும் அடிமை களுக்கு சமைத்துப் போட குறிக்கப்பட்ட கிழட்டு வெள்ளாட்டுக் கிடாய்களைப் போல உங்களை மலடாக்கிப் போடுவார்கள்” என்று. "வெட்கங்கெட்டவள்! இப்படியா குருக்களிடம் நீ பேசுகிறாய்?"
அதற்கு மரியா : "தேவ துரோகிகளே! அசுத்தர்களே! சபிக்கப் பட்டவர்களே! திரும்புங்கள்! உங்கள் பின்னால் உங்கள் நாக்குகளை, நரக நெருப்பின் நாவுகளைக் காண்கிறேன்'' என்கிறாள்.
மரிய மதலேனின் வார்த்தைகள் எவ்வளவு உறுதியுடன் ஒலிக் கின்றனவென்றால், பயத்தால் பீடிக்கப்பட்ட அக்கோழைகள் திரும்பி விடுகிறார்கள். அவர்கள் முதுகில் நெருப்புச் சுவாலைகள் இல்லையென் றாலும், உரோமையரின் கூரிய ஈட்டிகள் நீட்டியபடி நிற்கின்றன. லோஞ்ஜினுஸின் உத்தரவுப்படி ஓய்வில் இருந்த ஐம்பது போர்ச் சேவகரும் களத்தில் இறங்கி முதலில் ஏற்பட்ட யூதேயரைப் பிட்டத்தில் குத்துகிறார்கள். யூதேயர் கத்திக் கொண்டு ஓடுகிறார்கள். சேவகர் திறந்த வெளியைப் பாதுகாக்க இரண்டு பாதைகளிலும் நின்று மறித்துக் கொள்கிறார்கள். யூதர்கள் சபித்துத் திட்டினாலும் உரோமையரை ஒன்றும் செய்ய இயலவில்லை. பகடி பேசியவர்களை எதிர்த்துப் பதில் கொடுக்க தன் முக்காட்டை விலக்கியிருந்த மதலேன் இப்பொழுது மறுபடியும் முக்காடிட்டுக் கொண்டு தன் இடத்திற்குப் போகிறாள். மற்ற ஸ்திரீகளும் அவளுடன் சேர்ந்து கொள்கிறார்கள்.
இடது பக்கத்துக் கள்வன் சிலுவையிலிருந்தபடியே சேசுவை தொடர்ந்து நிந்திக்கிறான். மற்றவர்களின் வசைகளையெல்லாம் அவன் திருப்பிச் சொல்கிறான்.
வலது பக்கத்துக்கள்வன் தன் பக்கத்தில் நிற்கிற மாதாவைப் பார்க் கிறான். சேசுவைப் பார்ப்பதைவிட கூடுதலாக மாதாவையே உற்றுப் பார்க்கிறான். சற்று நேரமாக அவன் அழுதபடி : "என் அம்மா!" என்று தனக்குள் முனகுகிறான். பின் மற்றவனைப் பார்த்து: “நீ பேசாதே. இந்த வேதனை அனுபவிக்கிற இந்த நேரத்திலுமா நீ கடவுளுக்குப் பயப்படவில்லை? நல்லவரை நீ எதற்காக நிந்திக்கிறாய்? அவருடைய வேதனை நம் வேதனையைவிட அதிகமானது. அவரோ எந்தக் குற்ற மும் செய்யவில்லை'' என்கிறான்.
சேசு மவுனங் காக்கிறார். அந்த நிலையில் அவர் இருப்பதற்கு அவர் செய்ய வேண்டியிருக்கிற முயற்சியின் காரணமாக மூச்சுத் திணறுகிறார். அவ்வளவு கொடூரமான முறையில் அவர் அடிபட்டதாலும், அவரை இரத்தம் வியர்க்கச் செய்த ஆழமான மரண அவஸ்தை யாலும் ஏற்பட்ட காய்ச்சல், இருதயத்தின் நிலை, அவரைப் பாதித்து விட்டது. அவருடைய பாதங்களில் இறங்கும் பாரத்தைக் குறைப் பதால் சற்றேனும் விடுதலை தேட முயல்கிறார். அதற்காக தம்மையே மேலே இழுத்து கைகளிலிருந்தே தொங்கப் பார்க்கிறார். அவர் இப்படிச் செய்வது அவருடைய பாதங்களை வதைக்கிற தசை நார் களின் சுரிப்பை நீக்குவதற்காகவும் இருக்கக்கூடும். சுரிப்பு ஏற்பட் டிருப்பதை அவருடைய தசை நார்களின் துடிப்பு காட்டுகிறது. அவருடைய கரங்களிலும் இதே துடிப்பு தெரிகிறது. கை விரல்கள் நெருக்கப்பட்டிருக்க அந்நிலையில் அவற்றின் நுனிகள் இரத்தம் இல்லாமையால் விறைத்துப் போயிருக்கின்றன. இருதயத்திலிருந்து உயரமாக அவை இருப்பதாலும், கஷ்டத்தோடு மணிக்கட்டு வரை வருகிற இரத்தம் ஆணியறைந்த துவாரத்தின் வழியாக வெளியேறி விடுவதாலும் விரல்களுக்கு இரத்த ஓட்டம் அற்றுப் போகிறது. குறிப்பாக இடது கரத்தின் விரல்கள் உள்ளங்கை நோக்கி வளைந்து அசைவிழந்து இறந்துவிட்டன. காலின் விரல்களும் வேதனைப்படுகின்றன. கால் பெருவிரல்கள் மேலும் கீழும் அசைந்து விரிகின்றன. அதிலுள்ள நரம்பு அதிக சேதம் அடையாமலிருக்கலாம்.
சேசுவின் உடலின் பெரிய வேதனைகள் அதன் அசைவிலிருந்து புலப்படுகின்றன. உடல் வேகமாய் அசைகிறது. அது ஆழ்ந்த அசைவாக இல்லை. அவருக்கு சோர்வளிக்கிறது. எந்த வேதனைத் தணிவும் அவருக்கில்லை. அவரின் உடல் அமைப்பு மிகச் சிறந்தது என்பதால் அவருடைய விலா எலும்புகள் உயர்ந்தும் அகன்றுமே இருக்கும். அவை இப்போது அவரது சரீரம் இருக்கும் நிலையாலும், உள்ளே நுரையீரலில் ஏற்பட்டிருக்கும் இழைம அழற்சியாலும் மிக அதிகமாக விரிவடைந்துள்ளன. ஆயினும் அவருடைய சுவாசம் எளிதாகவில்லை. அவருடைய அடிவயிற்றின் அசைவு, செயலற்றுப்போன ஈரல் தாங்கிச் சவ்வை ஏந்தினாலும், மூச்சுவிட அவர் செய்யும் முயற்சிக்கு எந்த உதவியும் ஏற்படவில்லை.
நிமிடம் நிமிடமாக அவரது இறுக்கமும் மூச்சுத் திணறலும் கூடிக் கொண்டே வருகின்றன. கடுங்காய்ச்சலால் சிவந்த அவரது உதடுகள் நீலம் பூத்துப்போவதிலிருந்து அது தெரிகிறது. கழுத்தின் வீங்கிய நரம்புகளின் வழியே ஊதாச் சிவப்புக் கோடுகள் கன்னம் வரை விரிந்து பரவுகின்றன. காதுகளையும் சென்னியையும் எட்டுகின்றன நாசி சுருங்கியும் இரத்தமற்றும் காணப்படுகிறது. கண்களோ வட்டங் களுக்குள் இறங்கிக் கிடக்கின்றன. முள்முடியிலிருந்து சொட்டும் இரத்தம் படாத இடங்களில் வெளிறித் தெரிகின்றன.
இடது விலாக் கூட்டின் கீழே இருதயத்தின் முனை வந்து மோதித் துடிப்பதைக் காண முடிகிறது. அது ஒரே சீராயில்லாமலும் வேக முள்ள துடிப்பாகவும் இருக்கிறது. உள்ளே இடைக்கிடையே ஏற்படும் ஒரு வலிப்பினால் ஈரல் தாங்கிச் சவ்வு ஆழ்ந்த துடிப்படை கிறது. அது தோளின் மிகக் கூடுதலான முழு விரிசலால் காட்டப் படுகிறது. அந்தக் காயப்பட்ட, இறந்து கொண்டிருக்கிற சரீரத்தின் தோல் இதற்கு மேலும் எங்கே விரிக்கப்பட முடியும்?
சேசுவின் திருமுகம் புனித துகிலின் படத்தில் நாம் காண்கிற சாயலுக்கு வருகிறது. நாசி இரு பிரிவாகி ஒரு பக்கத்தில் வீங்கிக் காணப்படுகிறது. வலது கண் பக்கத்தில் ஏற்பட்ட வீக்கத்தால் அது ஏறக்குறைய மூடிவிட்டது. அவரது வாய் திறந்து காணப்படுகிறது. மேலுதட்டின் காயம் இரத்தம் உறைந்து மூடியவாறிருக்கிறது.
இரத்த இழப்பினாலும், காய்ச்சலாலும், எரியும் வெயிலாலும் அவருக்கு ஏற்பட்ட தாகம் எவ்வளவென்றால் துளிர்த்து விழுகிற வியர்வையையும் வடிகிற இரத்தத்தையும் பாய்கிற கண்ணீரையும் தன்னாலே அசைகிற வாயால் பருகுகிறார். அவருடைய நெற்றியிலிருந்து ஒழுகும் இரத்தம் அவர் வாயில் வடிகிறதைக் கொண்டு தம் நாவை நனைக்கிறார்.....
அவர் கரங்களால் தொங்கும் வேதனையையும் அவருடைய பாதங்களில் இறங்கும் பாரத்தின் வலியையும் சிலுவை மரத்தில் சற்று தலையைச் சாய்த்து குறைக்கலாமென்றால் முள்முடி தடுக்கிறது. அவரது சிறுநீரகங்களும், முதுகெலும்பும் இடுப்பிலிருந்து சிலுவையை விட்டு வெளிப்புறமாக வளைந்திருக்கின்றன. சேசுவின் சரீரத்தைப் போல் தொங்கவிடப்பட்டுள்ள கனப்பொருள் எதுவும் சடத்துவ பாரத்தால் இவ்வாறு தான் தொங்கும்.
வலது புறக்கள்வன் இப்போது மேலும் மேலும் ஆழ்ந்த இரக்கத் தோடு மாதாவை நோக்கிப் பார்க்கிறான், அழுகிறான். மாதாவையும் மற்றவன் சேர்த்து நிந்திப்பதைக் கேட்டதும் அவனுக்கு சூடாகப் பதில் கொடுக்கிறான் : "உன் வாயை மூடு. நீயும் ஒரு ஸ்திரீயிடம் பிறந்தாயென்பதை மறக்காதே. நம் தாய்மார் தங்கள் மகன்களின் பொருட்டு அழுதார்கள் என்பதை நினை. அவை வெட்கத்தின் கண்ணீர்கள்... ஏனென்றால் நாம் குற்றவாளிகள். நம் தாய்மார் இறந்து போனார்கள்..... என்னை மன்னிக்கும்படி என் தாயிடம் நான் கேட்க விரும்புகிறேன் ..... என் அம்மா ஒரு புனித ஸ்திரீயாயிருந்தார்கள். அவர்களுக்கு நான் வருவித்த துயரத்தினால் அவர்களைக் கொன்று விட்டேன்.... நான் ஒரு பாவி .... என்னை யார் மன்னிப்பார்கள்?" பின் மாதாவிடம் : ''அம்மா! மரிக்கிற உங்கள் குமாரனின் பெயரால் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் தாயே!" என்று கேட்கிறான்.
மாதா வாதைப்படும் முகத்தை உயர்த்தி அவனைப் பார்க் கிறார்கள். தன்னைப் பெற்றவளின் நினைவாலும் மாதாவைப் பார்த்துச் சிந்தித்ததாலும் மனஸ்தாபத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிற பரிதாபமான அவனைத் தன் சாந்தமான பார்வையால் நேசிக்கிறார்கள். அப்போது தீஸ்மாஸ் சத்தமாக அழுகிறான்.
சேசு அப்போதுதான் முதல் முறையாகப் பேசுகிறார்: ''பிதாவே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று அறியா திருக்கிறார்கள்” என்கிறார்.
சேசுவின் இந்த மன்றாட்டு தீஸ்மாஸின் எல்லா அச்சத்தையும் மேற்கொள்கிறது. அவன் கிறீஸ்துநாதரை ஏறிட்டுப் பார்க்கத் துணிந்து சொல்கிறான் : "ஆண்டவரே! நீர் உம் இராச்சியத்தில் வரும் போது என்னை நினைத்தருளும். நான் துன்பப்படுவது நீதியே. ஆனால் இதற்குப் பின் எனக்கு இரக்கத்தையும் சமாதானத்தையும் தாரும். இப்பொழுது உந்நதரின் மகனாகிய உமது முன்பாக நான் மனஸ்தாபப்படுகிறேன். நீர் கடவுளிடமிருந்து வருகிறீர் என நான் விசுவசிக்கிறேன். உம் வல்லமையை விசுவசிக்கிறேன். உம் இரக்கத்தை நம்புகிறேன். கிறீஸ்துவே! உமது தாயின் பெயராலும் உமது பிதாவின் பெயராலும் என்னை மன்னித்தருளும் " என்கிறான்.
சேசு திரும்பி ஆழ்ந்த இரக்கத்தோடு அவனைப் பார்க்கிறார். அவரது வதைக்கப்பட்ட உதடுகளால் அழகிய புன்னகைக்கிறார். அவனிடம்: ''இன்றே நீ என்னுடன் பரகதியிலிருப்பாய் " என்கிறார்.
மனஸ்தாபக் கள்வன் அமைதியடைகிறான். அவன் குழந்தையா யிருந்த போது கற்ற ஜெபங்கள் அவன் நினைவில் இல்லாததால் ஒரு மனவல்லய ஜெபம் போல் இப்படிச் சொல்கிறான். "சேசு நசரேயனே, யூதர்களின் இராஜாவே , என் மேல் இரக்கமாயிரும். சேசு நசரேயனே, யூதர்களின் இராஜாவே, உம்மை நம்புகிறேன். சேசு நசரேயனே யூதர்களின் இராஜாவே, உம்முடைய தெய்வீகத்தை விசுவசிக்கிறேன்.''
ஆகாயம் மேலும் மேலும் மங்கலாகி வருகிறது. மேகங்கள் சூரிய ஒளியை விழவிடாமல் அடைத்துக் கொண்டிருக்கின்றன. ஈயப் பாளங்கள் போல் ஒன்றின் மேலொன்றாய், வெண்மையாயும், பச்சை கலந்தும் அடுக்கிக் கொள்கின்றன.
வெளிச்சம் குறைகிறது. முகங்கள் வினோதமாய்க் காணப்படு கின்றன. சேசு மிகுதியாக வெளிறி , இறந்துவிட்டவர் போல் காணப் படுகிறார். அவருடைய சிரசு அவர் நெஞ்சில் கவிழ்ந்து தொங்குகிறது. அவரது உடற்பலம் எல்லாம் துரிதமாய் வற்றிவிட்டது. காய்ச்சல் அவரை எரிக்கிறது. அவர் நடுங்குகிறார். இதுவரை அவர்தம் இருதயத்தின் அடியில் மட்டும் உச்சரித்த வார்த்தையை இப்போது மெல்ல முனகுகிறார்: "அம்மா! அம்மா!" என்று. தாழ்ந்த குரலில் ஒரு பெருமூச்சு விடுவது போல் அவ்வார்த்தையை முனகிச் சொல் கிறார். சற்று ஜன்னி ஏற்பட்டு, அவருடைய சித்தம் வெளிப்படுத்த விரும்பாத அதனைத் தடுக்க முடியாத நிலையில் இருப்பவர் போல் அப்படிச் சொல்கிறார். அவர் அப்படிச் சொல்லும் ஒவ்வொரு தடவையும் மாதா அவருக்கு உதவ விரும்புவது போல் தன் கரங்களை நீட்டுகிறார்கள்.
கல்வாரி உச்சிக்கு அடுத்த மேட்டில் இடையர்கள் நிற்கிற பக்கம் வரை குருக்களும் வேதபாரகர்களும் மறுபடியும் ஏறி வருகிறார்கள். போர்ச் சேவகர்கள் அவர்களைத் துரத்திவிட வந்த போது, அவர்கள் எதிர்த்து : "இந்தக்கலிலேயர் இங்கே நிற்கிறதாயிருந்தால், நாங்களும் நிற்போம். கடைசி வரை நீதி செலுத்தப்படுகிறதா என்று நாங்கள் பார்க்க வேண்டும். தூரத்திலிருந்து இந்த வெளிச்சத்தில் எங்களால் பார்க்க முடியவில்லை'' என்கிறார்கள்.
எதார்த்தமாகவே உலகத்தை மூடியிருக்கிற இருளைப் பற்றி பலர் குழப்பமடைகிறார்கள். படைவீரர்கள், ஆகாயத்தைச் சுட்டிக் காட்டி அங்கே ஒரு மலையுச்சிக்குப் பின்னாலிருந்து எழுந்து வருகிற கருநிறக் கூம்பு வடிவப் பொருள் ஒன்றைக் காட்டுகிறார்கள். அது மிகக் கறுப் பாக, பைன் மரம் போல, தண்ணீர் பாயும் கெண்டி வாய் போலிருக் கிறது. அது உயர உயர எழும்பி அதிக கறுப்பான மேகங்களை உற்பத்தி செய்வது போலிருக்கிறது. அது புகையும் நெருப்புக் குழம்பும் கக்குகிற பூகம்பம் போல் காணப்படுகிறது.
இந்தப் பயங்கரமான அந்திப்பட்ட வெளிச்சத்தில் தான் சேசு, மாதாவுக்கு அருளப்பரையும், அருளப்பருக்கு மாதாவையும் கொடுக் கிறார். மாதா அவரை நன்றாகப் பார்க்கும் பொருட்டு சிலுவையை நெருங்கிப் போய் நிற்கிறார்கள். அப்போது அவர்: ''ஸ்திரீயே உன் மகன். மகனே இதோ உன் தாய்'' என்று சொல்கிறார்.
கடலுக்கடியில் காணப்படுவது போன்ற இருண்ட வேளையில் நிக்கோதேமுஸும் அரிமத்தியா சூசையும் வருகிறார்கள். நிக்கோ தேமுஸ், அருகில் நிற்கும் பத்துச் சேவகர் தலைவனிடமும் பணப் பையையும் மெழுகிட்ட அட்டையையும் கொடுக்கிறார். பதின்மர் தலைவன் பணப்பையையும், அட்டையையும் சரிபார்க்கிறான். பின் சேவகரிடம்: “இவ்விருவரையும் போக விடுங்கள்” என்கிறான்.
சூசையும் நிக்கோதேமுஸும் இடையர்களிடம் வருகிறார்கள். கூடிக் கொண்டே வருகிற இருள் மூட்டத்தில் சேசு அவர்களைக் காண முடிகிறதா என்றே தெரியவில்லை. அவரது கண்கள் மரண அவஸ்தை யால் திரையிடப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் அவரைப் பார்க் கிறார்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நினைவே இன்றி அவர்கள் அழுகிறார்கள். குருக்கள் அவர்களை வைகிறார்கள்.
சேசுவின் வேதனைகள் மேலும் கூடிக் கொண்டே போகின்றன. அவருடைய சரீரம் தசை சுருக்கத்தினால் வளைகிறது. அக்கும்பலின் கூச்சல் அதை அதிகரிக்கச் செய்கிறது. தசை நார்களும், நரம்புகளும் கைகால்களில் தொடங்கி உடலை நோக்கி வருகின்றன. இதனால் சுவாசிப்பது அதிக கடினமாகிறது. ஈரல் தாங்கி சவ்வின் சுருங்குதல் பலவீனமாகி இருதயத் துடிப்பு சமமில்லாமல் போகிறது. கிறீஸ்து வின் முகம் மிக ஆழ்ந்த சிவப்பாவதும், பின் இரத்தப் போக்கினால் இறக்கிறவனைப் போல் பச்சையாக வெளிறிப் போவதும் மாறி மாறி நிகழ்கிறது. அவரது உதடுகள் மிகக் கஷ்டத்தோடு அசைகின்றன. காரணம் அவருடைய கழுத்தும் தலையும் கூட சிலுவையின் குறுக்கு மரத்தில் முழு உடலுக்கும் நெம்புகோல் போல் அடிக்கடி ஊன்றப் பட்டதால் அதிக சிரமமடைந்துள்ள கழுத்து நரம்புகளும், தலையின் நரம்புகளும் அதனால் ஏற்பட்ட சதைச் சுரிப்பைத் தாடைகளுக்கும் பரவச் செய்கின்றன. அவருடைய தொண்டை தடுக்கப்பட்ட கழுத் தின் இரத்த நாளம் காரணமாக வீங்கியிருப்பதால் வேதனையளிக்க வேண்டும். அந்த அழற்சி நாக்கிற்கும் பரவியிருக்க வேண்டும். அது வீங்கியிருக்கிறது. மெதுவாகவே அசைகிறது. அவரது பிடரியிலிருந்து கீழ் முதுகு வரை, தசைச் சுருக்கும் இழுப்புகளினால் முழுவதும் வளைக்கப்படாத சமயங்களிலும் மேலும் மேலும் முன்பாக வளைந்து வருகிறது. ஏனென்றால் அவருடைய அங்கங்கள் இறந்த தசைகளின் பாரத்தால் தொடர்ந்து கீழ் நோக்கி இழுக்கப்படுகின்றன.
இந்த நிலையை ஜனங்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் வெளிச்சம் இருண்ட சாம்பலைப் போல் ஆகிவிட்டது. சிலுவை யின் அடியிலுள்ளவர்களால்தான் நன்றாகப் பார்க்க முடிகிறது.
சேசு மிகக் கஷ்டத்துடன் பெரும் முயற்சி செய்து தமது சித்தத்தின் திடத்தில், அதில் மட்டுமே தம் திடனைக் கொண்டு, சித்திரவதைப் பட்ட தம் பாதங்களில் ஊன்றி நின்று நேராய் தம்மைக் கொண்டு வருகிறார். தம் பலமெல்லாம் ஒன்று கூட்டி தம் முகத்தை உயர்த்து கிறார். கண்களை அகலத் திறந்து பரந்து கிடக்கும் உலகத்தைப் பார்க் கிறார். எட்டத் தெரிகிற பட்டணத்தையும் பார்க்கிறார். தெளிவின்றி அது தெரிகிறது. எங்குமே வெளிச்சம் இல்லை. வானம் தாழ்ந்து இறுகி இருண்டு கிடக்கிறது. சேசுதம் சித்த வலிமையாலும் தம் ஆன்மாவின் தேவையாலும் தமது வீங்கிய நாவையும் அழற்சிப்பட்ட தொண்டை யையும் மேற்கொண்டு உரத்த குரலில் : "எலோயி எலோயி லாமா சபக்தானி'' (என் சர்வேசுரா, என் சர்வேசுரா, ஏன் என்னைக் கைவிட்டீர்?) என்று கதறுகிறார். இப்படி அவர் தம் பிதா தம்மைக் கைவிட்டதாக கதறினாரென்றால் அவரைப் பரலோகம் முற்றிலும் கைவிட்டதையும் தாம் அப்படியே சாகப்போகிறதையும் உணர்ந்திருக்க வேண்டும்.
"இவன் கூப்பிடுகிற எலியாஸ் வந்து இவனைக் காப்பாற்றுவாரா என்று பார்ப்போம்" என்கிறார்கள் யூதர்கள். இன்னும் சிலர் : "அவன் தொண்டையைக் கழுவிக்கொள்ள கொஞ்சம் காடி கொடுங்கள். எலியாஸோ கடவுளோ இவனுக்கு யார் வேண்டும் என்று தெரிய வில்லை. அவர்களுக்குக் கேட்க வேண்டுமானால் பெரிய சத்தம் தேவை...'' என்று கூறி ஓநாய்களைப் போல, பேய்களைப் போல் சிரிக்கிறார்கள்.
ஆனால் எந்த சேவகனும் அவருக்குக் காடி தரவில்லை. மோட் சத்திலிருந்தும் அவருக்கு ஆறுதல் தர யாரும் வரவில்லை. இது மகா பெரிய பலிப்பொருளின் தனிமையான, முழுமையான, குரூரமான, சுபாவத்திற்கு மேலான முறையிலும் குரூரமான அவஸ்தையாகும்.
ஏற்கெனவே ஜெத்சமெனியில் அவரை மூடிய பெரும் நிலச்சரிவு போன்ற ஆறுதலற்ற துயரம் மீண்டும் வருகிறது. அனைத்து உலகத்தின் பாவ அலைகள் சேதப்பட்டிருக்கிற பரிசுத்தரைத் தாக்கி தங்கள் கசப்பில் அவரை அமிழ்த்த வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக சிலுவையைவிட அதிக சிலுவை வேதனையாகவும், எந்த சித்திர வதையை விடவும் அதிகக் குரூரமாகவும் வருவதென்னவெனில் சர்வேசுரனே அவரைக் கைவிட்டு விட்டாரென்றும், தன் மன்றாட்டு அவரிடம் எழும்பவில்லையென்றும் ஏற்படுகிற உணர்வேயாகும்.
அதுவே அவருடைய இறுதி வாதனை. அது அவருடைய மரணத் தைத் துரிதப்படுத்துகிறது. எப்படியெனில், அது அவரின் கடைசி இரத்தத்தையும் வியர்வைத் துவாரங்கள் வழியாக வெளியேற்று கிறது. அது அவருடைய இருதயத்தில் எஞ்சிய தசைநார்களை நசுக்கு கிறது; இக்கைவிடப்படுதலின் முதல் உணர்தல் தொடங்கி வைத் ததை அது முடிக்கிறது. மரணத்தைக் கொண்டு வருகிறது. அதுவே என் சேசு இறந்ததற்கு முதற் காரணம். ஓ என் சர்வேசுரா! எங்களுக் காக அவரை அடித்தீரே! ஏனெனில் நீர் கைவிட்ட பிறகு உம்முடைய கைவிடுதலினால் ஒருவன் என்ன ஆவான்? ஒன்றில் பைத்தியனாவான், அல்லது சாவான். சேசு பைத்தியனாக முடியாது. ஏனென்றால் அவரது புத்தி தெய்வீகமானது. அறிவு ஒரு ஞான வஸ்துவாகையால், அது கடவுள் அடித்துவிட்ட அவருடைய எல்லா புற வேதனைகளையும் வென்று விட்டது. ஆதலால் அவர் இறந்த மனிதன் ஆனார்; இறந்த மானிடன்; மகா புனிதரான இறந்த மனிதன்; மகா குற்றமற்றவராய் இறந்த மனிதன் ; சீவியமாயிருந்தவர் இறந்தார். உம் கைவிடுதலாலும் எங்கள் பாவங்களாலும் கொல்லப்பட்டார்.
இருள் அதிகமாகிறது. ஜெருசலேம் முற்றும் மறைந்து விட்டது. கல்வாரி மலைச் சரிவுகள் கூட மறைகின்றன. மலையுச்சி மட்டுமே தெரிகிறது. ஒரே ஒளியை, இன்னும் அணையாதிருக்கிற ஒளியை, நேசத்தாலும், பகையாலும் அது பார்க்கப்படும்படி, அத்தெய்வீக வெற்றிப் பொருளுடன் அதுவும் காணிக்கையாகும் பொருட்டு, அவ்விருளால் உயர்த்திப் பிடிக்கப்பட்டது போல் கல்வாரியின் உச்சி மட்டுமே தெரிகிறது. அந்த ஒளியல்லாத வெளிச்சத்தில் சேசுவின் முறையிடும் குரல் கேட்கிறது : "தாகமாயிருக்கிறேன்'' என்று.
அப்போது உண்மையிலேயே அங்கே வீசுகிறது நல்ல சுகமாயிருக் கிறவர்களையும் தாகங் கொள்ளச் செய்யும் காற்று. தூசி நிறைந்தும், குளிர்ந்தும், பயங்கரமாயும் ஒரு பலத்த காற்று தொடர்ந்து வீசுகிறது. அது சேசுவின் நுரையீரலுக்கும், இருதயத்திற்கும், தொண்டைக்கும், காயப்பட்டு மரத்திருக்கிற அங்கங்களுக்கும் என்ன வேதனையளித் திருக்கும்! எல்லாம் சேர்ந்து அவரை வதைக்கின்றன. கொலைப்படுத் தும் அதிகாரியின் உதவியாளர்கள் ஒரு ஜாடியில் கொஞ்சம் பிச்சுக் கலந்த காடி வைத்திருக்கிறார்கள். சிரசாக்கினை இடப்பட்டோரின் உமிழ்நீர் சுரத்தலை அதன் கசப்பு அதிகரிக்கும்படி அது தரப்படும். ஒரு சேவகன் ஒரு உறிஞ்சியை திடமான பொடிக் கம்பில் மாட்டி காடியில் தோய்த்து மரிக்கிற சேசுவுக்குக் கொடுக்கிறான். தரப்படும் உறிஞ்சியை நோக்கி ஆவலுடன் சேசு முன் வருகிறார். பட்டினி கிடந்த குழந்தை தாயின் அமுதைத் தேடுவதுபோல் அது இருக்கிறது.
மாதா இதைப் பார்க்கிறார்கள்; "ஓ! அவருக்கு என் கண்ணீரில் ஒன்றைக்கூட தர முடியவில்லையே!... ஓ சர்வேசுரா, என் மகனுக்காக ஒரு புதுமை ! என் இரத்தத்தால் அவரது தாகத்தைத் தணிக்கும்படி யார் என்னைத் தூக்கி விடுவார்கள்...'' என்று அழுது புலம்புகிறார்கள்.
ஆவலுடன் அந்தக் கசப்பை உறிஞ்சிய சேசு அருவருப்பால் முகம் சுளிக்கிறார். அவருடைய காயப்பட்டு வெடித்த உதடுகளில் அது காந்தலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவர் பின்வாங்கி மனமுடைந்து தம்மையே கைவிட்டு விடுகிறார். அதனால் அவருடைய முழுப்பார மும் பாதங்களில் விழுகிறது. அத்திருவுடல் முன்பக்கமாக சாய்கிறது. இப்படி தன்னையே விட்டுவிட்ட உடலின் நுனிப் பாகங்கள்தான் கொடிய வேதனையடைகின்றன. உடற்பாரம் இழுப்பதால் காயங்கள் கிழிகின்றன. அவ்வேதனையைக் குறைக்க அவர் இப்போது எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர் உடல், கீழ் முதுகிலிருந்து மேலாக சிலுவையினின்று பிரிந்தே நிற்கின்றது.
சேசுவின் தலை எவ்வளவு பளுவாய் முன்பாகக் கவிழ்ந்து தொங்கு கிறதென்றால் அவருடைய கழுத்தில் மூன்று இடங்களில் குழி விழுந்து காணப்படுகிறது. தொண்டைப்பகுதி பெரிய குழியாக உள் இழுக்கப்பட்டிருக்கிறது. நெஞ்சுப் பொட்டெலும்பு இரு புறமும் குழிந்து தெரிகிறது. அவர் விட்டு விட்டு மூச்சு வாங்குகிறார். அது மரண கரகரப்பாகக் கேட்கிறது. இடைக்கிடையே வேதனை தரும் இருமல்கள் வந்து இளஞ்சிவப்பான நுரையை அவர் உதடுகளுக்குக் கொண்டு வருகின்றன. அவர் வெளி மூச்சு விடும் இடைவெளி அதிகரிக்கிறது. அவருடைய அடிவயிற்றில் எவ்வித அசைவுமில்லை. நெஞ்சுக் கூடுதான் ஏறி இறங்குகிறது - அது மிகச் சிரமத்தோடு நடக்கிறது.... நுரையீரல்கள் கூடுதல் செயலற்று வருகின்றன.
அப்போது ஒரு சிசுவின் அழுகுரல் போல், ஒரு கூப்பிடுதல் போல், "அம்மா," "அம்மா" என்ற வார்த்தைகள் வருகின்றன. வர வர மெல்லிய தாகின்றன. அதற்கு "என் மகனே, நான் இங்கேதான் இருக்கிறேன்'' என்று பரிதாபமான தாய் கூறுகிறார்கள். அவரது பார்வை மங்கும் போது, அவர், ''அம்மா, எங்கேயிருக்கிறீர்கள்? உங்களைக் காண முடியவில்லையே. நீங்களும் என்னைக் கைவிடுகிறீர்களா?" என்கிறார். இவை வார்த்தைகள் போலில்லை. ஒரு முனகல். தன் செவிகளாலல்ல, தன் இருதயத்தால், இறந்து கொண்டிருக்கும் தன் மகனின் ஒவ்வொரு பெருமூச்சையும் ஏற்கிற தாய்க்கும்கூட தெளிவாகக் கேட்கவில்லை. "இல்லை மகனே, உம்மை நான் விட்டுப் போக மாட்டேன். என் மகனே, உம் அம்மா இங்கேதான் இருக்கிறேன். நீர் இருக்கிற இடத்திற்கு வர முடியவில்லையே என்றுதான் நான் வருத்தப்படுகிறேன்." இப்படி மாதா கூறுவது இருதயத்தைப் பிளப்பதாக உள்ளது.
இப்போது அருளப்பர் வெளிப்படையாக அழுகிறார். அவர் அழுகை சேசுவுக்கு நிச்சயம் கேட்கும். ஆனால் அவர் எதுவும் சொல்ல வில்லை. விரைவிலேயே வரப்போகிற மரணத்தின் காரணமாக அவர் பேசுவது உளறல் போல் இருக்கிறது. அவர் என்ன செய்கிறார் என்பதை அவரே அறியவில்லை போல் தோன்றுகிறது. இதில் நிர்ப்பாக்கியம் என்னவென்றால் அவருடைய தாயார் கொடுக்கும் ஆறுதலையும் அவருக்குப் பிரியமான சீடனின் அன்பையும் கூட அவர் கண்டுபிடிக்கவில்லை.
லோஞ்ஜினுஸ் இவ்வளவு நேரமாக காலில் நிற்க வேண்டியிருந் ததை எளிதாக்கும் பொருட்டு கைகளை மார்பில் மடக்கிக் கட்டி கால்கள் ஒன்றின் மேல் ஒன்றாக சாவகாசமாக நின்றவன், இப்பொழுது தன் பணி நிலைக்கு மாறுகிறான். விறைப்பாக, தயார் நிலையில், இடது கையைத் தன் வாள் மீது வைத்து, வலது கையைப் பக்கவாட்டில் தொங்க வைத்து, இராஜ சிம்மாசனத்தின் படிகளில் நிற்பது போல் நிற்கிறான். அவன் இந்நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட விரும்பவில்லை. ஆனால் அவன் தன் உள் உணர்வுகளை வெல்ல செய்கிற முயற்சி அவன் முகத்தில் தெரிகிறது. அவனது கண்களில் துளிர்க்கும் துளிகளை அவனுடைய கடும் கட்டுப்பாடுதான் கீழே விழாமல் தடுக்கிறது.
பகடை ஆடிய போர்ச் சேவகர்கள் அதை நிறுத்தி விட்டு எழுந்து தலைக் கவசங்களை அணிந்துகொண்டு, சரலில் வெட்டிய படிகளின் பக்கம் வந்து கவனத்துடன் மவுனமாக நிற்கிறார்கள். மற்றச் சேவகர்க்கு அது அலுவல் நேரமானதால் எங்கும் போக முடியாது. அவர்கள் சிலைகளைப் போல் காட்சியளிக்கிறார்கள். மாதாவுக்கு சமீபமாக நின்று அவர்கள் சொல்வதைக் கேட்ட சிலர் தங்கள் உதட்டிற்குள் ஏதோ முனகி தலைகளை அசைக்கிறார்கள்.
ஒரே நிசப்தம். அப்பொழுது எல்லாம் இருண்டுபோன அந்த வேளையில் : "எல்லாம் நிறைவேறிற்று'' என்று சொல்லும் சேசுவின் குரல் தெளிவாகக் கேட்கிறது. அதன்பின் அவருடைய மரண இளைப்பு கூடுதல் சத்தமாகவும் நீண்ட இடைவெளியோடும் கேட்கிறது.
மிகவும் சஞ்சலத்தோடு நேரம் படிப்படியாகக் கடந்து செல்கிறது. இறக்கும் பலிப்பொருளின் மூச்சுவாங்குதல் கேட்காமலிருக்கும் போது உயிரே நிற்கிறது. அந்த ஒலியைக் கேட்பதே துன்பமாயிருக் கிறது..... அந்த ஒலியைக் கேட்காவிட்டாலும் துன்பமாயிருக்கிறது.
எல்லா மேரிகளும் கல்வாரி மேடைக்கு எழும்பும் செங்குத்தான நிலச்சரிவில் தலை சார்த்தி நின்று அழுகிறார்கள். கூட்டம் இப்போது சேசுவின் மரண இளைப்புக் குரலைக் கேட்க மவுனமாயிருப்பதால், அவர்கள் அழும் குரல்கள் நன்றாகக் கேட்கின்றன.
மறுபடியும் நிசப்தம். அப்போது, "பிதாவே! என் ஆத்துமத்தை உமது கரங்களில் ஒப்படைக்கிறேன்'' என்ற கெஞ்சும் குரல் அளவில்லாக் கருணையோடு உருக்கத்துடன் ஒலிக்கிறது. தொடர்ந்து மவுனம். மரண இளைப்புக் குரல் குறைகிறது. அது அவரது தொண்டைக்கும் உதடுகளுக்குமிடையில் உள்ள மூச்சாக மட்டும் இருக்கிறது.
அதன்பின் சேசுவின் இறுதி உயிர்த்துடிப்பு. ஒரு பயங்கர வலிப்பு பாதம் முதல் சிரசு வரை எல்லா நரம்புகளினூடேயும் சென்று மூன்று தடவை எழும்புகிறது. மூன்று ஆணிகளிலிருந்தும் சரீரத்தைப் பிய்த் தெடுத்து விடும் போலிருக்கிறது. அடிவயிறு மும்முறை அசாதாரண மாய் எவ்வுகிறது. குடல்களைக் குழப்புவது போல் விரிந்து பின் ஓய்கிறது. பின் அது அமர்ந்து அடிவயிறு காலியாவது போல் குழிகிறது. மீண்டும் எவ்வி பருத்து நெஞ்சுக் கூட்டை வேகமாய்ச் சுருக்குகிறது. அதனால் விலா எலும்புகளின் இடையிலுள்ள தோல் உட்குழிகிறது. விலா எலும்புகள் விரிந்து கசையடியின் காயங்கள் திறக்கின்றன. தலை கடின சிலுவை மரத்துடன் பின்னோக்காக வேக மாய் ஒரு விசை, இரு விசை, மூன்று விசை மோதுகிறது. முகத்தின் எல்லாத் தசை நார்களும் இத்துடிப்பால் சுருக்கமடைகின்றன. வாயின் திறப்பு வலது பக்கமாய்ச் சரிகிறது. கண் இமைகள் அகன்று விரிவடைந்து, விழிகள் சுழல்கின்றன. வெள்ளைவிழி தெரிகிறது. உடல் முழுவதும் கூனிக் காணப்படுகிறது. கடைசி மூன்று வலிப் பாலும் அது வில் போல் வளைந்து துடிக்கிறது. பார்க்கப் பயங்கரமா யிருக்கிறது. அதன் பின் முற்றிலும் செலவழிக்கப்பட்டு விட்ட அந்தச் சரீரத்திலிருந்து எதிர்பார்க்க முடியாத ஒரு பேரொலி ஆகாயத்தைக் கிழித்துக் கொண்டு எழுகிறது. இது சுவிசேஷத்தில் ''மகா சத்தத் தோடு கூப்பிட்டு " என்று கூறப்படுகிறது. அப்படி அவர் பேரோலியாய்க் கூப்பிட்ட குரல் "அம்மா" என்ற குரலின் முதல் பாகமே... அதன் பின் எதுவுமில்லை ....
அவருடைய திருச்சிரசு மார்பில் சாய்கிறது. அவருடைய திருச் சரீரம் முன்பாக சாய்கிறது. குலுங்குகிறது. நின்று விடுகிறது. சுவாசம் நின்று விட்டது. அவருடைய கடைசி மூச்சு அடங்கி விட்டது.
கொலை செய்யப்பட்ட மாசற்றவரின் கூப்பிடுதலுக்கு பூமி, ஒரு பயங்கர உறுமுதலால் பதிலளிக்கிறது. ஆயிரம் அரக்கர்கள் ஒரே சத்தமாய் ஊதும் எக்காளங்கள் போல் பெருமுழக்கம் கேட்கிறது. அந்த முழக்கத்தோடு இடைக்கிடையே மின்னல் கீற்றுக்கள் வானத்தின் எல்லாத் திசைகளிலும் வெட்டிப் பாய்கின்றன. பட்டணத்தில் இடிகள் விழுகின்றன.... தேவாலயத்தில் விழுகின்றன..... ஜனக் கும்பலிலும் விழுகின்றன... ஜனக் கூட்டத்தில் இடி நேரில் விழுந்ததால் சிலர் தாக்கப்பட்டார்கள் என நினைக்கிறேன். நெளிந்து வளைந்து வீசும் மின்னல் மட்டுமே இடையிடையே காணக்கூடிய வெளிச்சமாயிருக்கிறது. இடிகள் இன்னமும் இடித்துக் கொண்டிருக்கவே பூமி ஒரு பெரும் சூறாவளியால் அசைக்கப்படுகிறது. பூமியதிர்ச்சியும், புயலும் சேர்ந்து அந்த தேவதூஷணிகளுக்கு ஒரு முடிவுகாலத் தண்டனையைத் தருகின்றன. கொல்கொத்தா மலையுச்சி ஒரு பைத்தியக்காரனின் கையிலகப்பட்ட தட்டு போல் குலுங்கி நடுங்குகிறது. வெட்டியிழுத்து, அசைக்கிற அதிர்ச்சி மூன்று சிலுவைகளையும் எப்படி ஆட்டுகிறதென்றால், அவை பெயர்க்கப்பட்டு விடக்கூடிய நிலையில் காணப் படுகின்றன.
லோஞ்ஜினுஸும், அருளப்பரும், போர்ச் சேவகரும் கீழே விழாதிருக்க கிடைத்ததைப் பற்றிக்கொள்கின்றனர். அருளப்பர் ஒரு கையால் சிலுவையைப் பிடித்துக்கொண்டு மறுகையால் மாதாவைத் தாங்கிக்கொள்கிறார். மாதா நிற்க முடியாததாலும், துயரத்தாலும் அருளப்பரின் நெஞ்சில் சாய்ந்துள்ளார்கள். மற்றச் சேவகர், குறிப்பாக மலையுச்சியிலிருந்து நிலம் சரிந்து காணப்படுகிற பகுதியில் இருக்கிறவர்கள், தாங்கள் மலைச் சரிவில் வீசப்பட்டு விடாதபடி நடுவிற்கு வருகிறார்கள். கள்வர்கள் அதிகமாக அஞ்சி கூச்சலிடுகிறார்கள். ஜனக் கும்பல் அதைவிட அதிகமாக ஊளையிடுகிறது. ஓடப் பார்க்கிறது. ஆனால் அது சாத்தியமில்லை. அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து ஒருவர்மேல் ஒருவர் மிதித்து, நிலத்தின் வெடிப்புகளில் விழுகிறார்கள். காயப்படுகிறார்கள். பைத்தியக்காரரைப் போல் உருளுகிறார்கள்.
பூமியதிர்ச்சியும், சூறைப் புயற்காற்றும் மூன்று தடவைகள் நிகழ் கின்றன. அதன்பின் செத்த உலகின் அசைவின்மை காணப்படுகிறது. இடி முழக்கமின்றி மின்னல் மட்டும் வீசுகிறது. அவ்வெளிச்சத்தில் கிறுக்குப் பிடித்தவர்களைப் போல் கைகளை முன்னாலோ அல்லது மேல் நோக்கியோ நீட்டிக்கொண்டு ஜனங்கள் எப்பக்கமும் சிதறி ஓடுவது தெரிகிறது. இவ்வளவு நேரமும் தாங்கள் பரிகசித்துக் கொண் டிருந்ததும், இப்பொழுது பயப்படுவதுமான வானத்தை நோக்கிக் கைகளை நீட்டுகிறார்கள். இருட்டு கொஞ்சம் கலைகிறது. காந்த மின்னல் அதை தெளிவுபடுத்துகிறது. அநேகர் தரையில் கிடப்பதைக் காண முடிகிறது. அவர்கள் இறந்து விட்டார்களா, மயங்கிக் கிடக்கிறார்களா என்று தெரியவில்லை. ஜெருசலேம் பட்டணச் சுவர்களுக்குள் ஒரு வீடு பற்றி எரிகிறது. நெருப்பின் சுவாலை அசை வற்ற ஆகாயத்தில் பிரகாசமான சிவப்புச் சூளையாக மேலே மங்கிய ஆகாயத்தில் நேராய் எழுந்து எரிகிறது.
மாதா தலையை நிமிர்த்தி தன் சேசுவைப் பார்க்கிறார்கள். அவர் அசைவற்று, முன்பக்கமாக வளைந்து தொங்குகிறார். அவருடைய சிரசு எவ்வளவுக்கு முன்னாலும், வலது பக்கமாகவும் வந்துள்ளதென்றால் அவருடைய கன்னம் தோளைத் தொடுகிறது. அவருடைய நாடி விலா எலும்பை ஒட்டியிருக்கிறது. மாதா கண்டுபிடிக்கிறார்கள். தன் சேசு இறந்து விட்டார் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.