"இவன் சாட்டைகளால் அடிக்கப்படட்டும்!'' என்று ஒரு செந்தூரியனுக்குக் கட்டளையிடுகிறான் பிலாத்து. "எத்தனை அடிகள்?" "எத்தனை முடியுமோ, அத்தனை... எப்படியும் காரியம் முடிந்து போனது. எனக்குச் சலிப்பாகி விட்டது. போங்கள்.''
நீண்ட கூடத்திலிருந்து நான்கு போர்ச் சேவகர் சேசுவை அதற்கு அப்பாலிருக்கிற மண்டப முற்றத்திற்குக் கொண்டு செல்கிறார்கள். வண்ண சலவைக்கல் பதித்த அந்த முற்றத்தின் நடுவே, மண்டபத்தில் உள்ளது போன்ற ஒரு உயர்ந்த தூண் இருக்கிறது. அத்தூணில், தரையிலிருந்து சுமார் மூன்று மீட்டர் உயரத்தில் ஒரு இரும்புப் பட்டை குறைந்தது ஒரு மீட்டராவது வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது. அதன் நுனியில் ஒரு வளையம் உள்ளது. சேசுவின் ஆடைகளை எடுத்து விட்டு அவரை அந்த வளையத்தில் கட்டுகிறார்கள். இரு கைகளையும் சேர்த்து தமது தலைக்கு மேலாக சேசு கட்டப்படுகிறார். லினன் குட்டைக் காற்சட்டையுடனும், பாதரட்சைகளுடனும் மட்டுமே விடப்பட்டிருக்கிறார். அவருடைய மணிக்கட்டுகள் சேர்த்துக் கட்டப்பட்டு அந்த வளையம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால், அவர் உயரமுடையவராயிருந்தபோதிலும் தம் காலின் பெருவிரல் நுனி களாலேயே தரையில் ஊன்றிக்கொள்ள முடிகிறது. அந்த நிலையே ஒரு வதைப்பாக இருக்கிறது.
அவருக்குப் பின்னால், பக்கத் தோற்றத்தில் தெளிவான யூத சாய லோடு, கொலைஞனாகக் காணப்படும் ஒருவன் நிற்கிறான். அவனைப் போலவே இன்னொருவன் அவருக்கு முன் நிற்கிறான். அவர்களிடம் சாட்டைகள் உள்ளன. ஏழு தோல்வார்களைக் கொண்டது ஒரு சாட்டை அந்த ஏழு வார்களும் ஒரு கைப்பிடியில் ஒன்றாகப் பிணைக்கப்பட் டிருக்கின்றன. அந்த வார்களின் நுனிகளில் சிறு சம்மட்டி போன்ற ஈயக் குண்டுகள் உள்ளன. அவர்கள் அவரை அடிக்கத் தொடங்குகிறார்கள். ஓசை தாளமாக, பயிற்சி செய்வது போல் அடிக்கிறார்கள். ஒருவன் சேசு முன்னாலும் ஒருவன் அவர் பின்னாலும் நின்று அடிப்பதால் சேசுவின் உடல், அடிக்கும் சாட்டைகளின் சுழற்சிக்கு நடுவே அகப் பட்டிருக்கிறது. சாட்டையடிகளின் ஓசை ஸ்ஸ்ஸ்ஸ்
என்று பாம்பு களின் சீறல் போல் முதலில் கேட்கிறது. பின் முரசில் விரித்துக் கட்டப் பட்ட தோலில் கல் விழுவது போல் எதிரொலிக்கிறது. எவ்வளவோ மென்மையான, பழந்தந்தம் போல் வெளிறிய அந்தப் பரிதாபத்திற் குரிய உடலில் அவர்கள் அடிக்கிறார்கள். உடல் முழுவதும் கசை யடியால் நிரம்புகிறது. அடி படப்பட நிறம் இளஞ்சிவப்பாகிறது. பின் ஊதா நிறமாகிறது. பின் நீலம் கட்டுகிறது. இரத்தம் உள்ளே பெருகி நிற்கிறது. அடுத்து தோல் கிழிந்து இரத்தம் எல்லாப் பக்கமும் கொட்டுகிறது. நெஞ்சுக் கூட்டிலும் அடிவயிற்றிலும் அதிக குரூர மாய் அடிக்கிறார்கள். கால்களிலும் கைகளிலும் தலையிலும் கூட அடிகள் விழுகின்றன. இதனால் அவருடைய சருமத்தின் ஒரு சிறு இடமாவது வேதனையின்றி விடப்படவில்லை.
சேசுவிடமிருந்து ஒரு முனகல் சத்தம் கூட வெளிவரவில்லை..... அவர் மேலே கட்டப்பட்டிராவிட்டால் கீழே விழுந்திருப்பார். எத்தனை எத்தனை அடிகள் ! அவற்றால் மயக்கமுற்றது போல் அவருடைய சிரசு அவர் நெஞ்சில் கவிழ்ந்து தொங்குகிறது.
அப்போது ஒரு சேவகன் : "ஏய்! நிறுத்துங்கள். அவன் கொல்லப் படும் போது உயிரோடிருக்க வேண்டும்'' என்கிறான். இரண்டு கொலைஞரும் அடிப்பதை நிறுத்தி வியர்வையைத் துடைக்கிறார்கள்.
சேசுவைக் கட்டவிழ்க்கிறார்கள். அவர் இறந்தவர் போல் தரையில் விழுகிறார். அவர் முனகுவாரா என்று பார்க்க குதிமுள் உள்ள சப்பாத்துக் காலால் தள்ளிப் பார்க்கிறார்கள். ஆனால் அவரோ மவுனமாயிருக்கிறார்.
“இவனை நான் கவனித்துக் கொள்கிறேன்" என்று ஒரு போர்ச் சேவகன் கூறுகிறான். அவன் சேசுவை அந்தத் தூணில் சாய்த்து இருத்துகிறான். அவர் விழுந்து கிடந்த இடத்தில் இரத்தம் உறைந்து காணப்படுகிறது.... அந்தச் சேவகன் ஒரு மண்டபத்திற்கடியில் கொப்பளிக்கிற நீர்ச்சுனைக்குப் போய் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வந்து சேசுவின் தலையிலும், உடலிலும் ஊற்றுகிறான்.
சேசு ஆழ்ந்த பெருமூச்சு விட்டு உணர்வு பெறுகிறார்; எழ முயற்சிக்கிறார். அவருடைய கண்கள் மூடியே உள்ளன. எழுந்திருக்கும் முயற்சியில் கைகளை தரையில் ஊன்றிப் பார்க்கிறார். முடியவில்லை.
இன்னொரு படைவீரன் தன் ஈட்டிக் கம்பினால் அவர் முகத்தில் வலது கன்ன எலும்பிற்கும் நாசிக்கும் நடுவே அடிக்கிறான். அதிலிருந்து இரத்தம் வடிகிறது. சேசு கண் திறக்கிறார். அவருடைய விழிகள் திரையிடப்பட்டுள்ளன. தம்மை அடித்த போர்ச் சேவகனைப் பார்க்கிறார். கையால் இரத்தத்தைத் துடைக்கிறார். பின் அதிக சிரமத்துடன் எழுந்து நிற்கிறார்.
"உடுத்திக்கொள் ஆபாச மனிதா, இப்படி நிற்பது ஒழுக்கமில்லை" என்று சொல்லி எல்லாரும் சுற்றி நின்று சிரிக்கிறார்கள்.
எதுவும் பேசாமல் சேசு கீழ்ப்படிகிறார். ஆடைகளை எடுக்க அவர் குனியும் போது, அவர் ஒருவரே அறிவார் அவர் எவ்வளவு வேதனைப்படுகிறார் என்பதை. உடல் அடிகளால் கன்றிப் போயிருக்கிறது. குனிகிற சமயம் சருமம் இழுக்கப்படுவதால், காயங்கள் மேலும் அதிகமாகத் திறக்கப்படுகின்றன. கொப்புளமாக இருக்கிற காயங்கள் வெடிக்கின்றன. தம் ஆடைகளை அவர் எடுக்கக் குனிந்தபோது, ஒரு சேவகன் அதைக் காலால் உதைத்துச் சிதறி விடுகிறான். அவற்றைப் பொறுக்க சேசு தள்ளாடியபடி அவற்றை நெருங்கும் ஒவ்வொரு தடவையும் ஒருவன் அதைத் தூர தள்ளிவிடுகிறான். அல்லது இன்னொரு திசையில் எறிந்துவிடுகிறான். சேசு கொடூரமாய் வேதனைப்பட்டுக் கொண்டே ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் அவற்றைத் தேடி அலைகிறார். போர்ச் சேவகர் அவரை ஆபாசமாய்ப் பரிகசிக்கிறார்கள்.
கடைசியாக அவர் தம் ஆடைகளை அணிய முடிகிறது. ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டு இன்னும் சுத்தமாக இருந்த வெள்ளைத் துகிலையும் அணிந்து கொள்கிறார். அவரது சிவப்பு அங்கி நேற்று எவ்வளவோ அழகாயிருந்தது. இப்பொழுது குப்பையாலும், ஜெத்சமெனியில் வியர்த்த இரத்தத்தாலும் அசுத்தமடைந்து விட்டது. மேலும் தம் குட்டை உள் வஸ்திரத்தை அணியுமுன் நனைந்துள்ள தம் முகத்தைத் துடைத்து அதில் படிந்த தூசிகளையும் எச்சில்களையும் சுத்தஞ் செய்து கொள்கிறார். பரிதாபமான அந்தத் திருமுகம் சுத்தமாக இருக்கிறது. காயங்களும் கீறல்களும் தெரிகின்றன. கலைந்து கிடக்கிற தம் தலைமுடியையும் தாடியையும் ஒழுங்குபடுத்துகிறார். துப்புரவா யிருப்பது அவருடன் பிறந்த ஒரு தனித் தேவை.
பின்னர் சேசு சூரிய ஒளியில் உட்காருகிறார். ஏனென்றால் என் சேசு நடுங்குகிறார்..... காய்ச்சலால் ஏற்படும் குளிர் நடுக்கம் அவரை வாட்டுகிறது. அவர் இரத்தத்தை இழந்ததாலும், ஒன்றும் சாப்பிடாத தாலும், இவ்வளவு தூரம் நடந்ததாலும் பலவீனமாய் உணருகிறார்.....