ஒரு மலைப்பாங்கான இடம். தாவரங்கள் அடர்ந்தும் அழகாக வும் உள்ளன. ஏராளமான நல்ல தண்ணீர் மேய்ச்சல் நிலங்களைப் பசுமையாகவும் பழமரங்களை வளமாகவும் வைத்திருக்கிறது.
மாதா கழுதையின் மேல் அமர்ந்தபடி ஒரு நன்கு பராமரிக்கப் பட்ட முக்கியமான சாலை வழியே மேலேறுகிறார்கள். மேட்டு நிலத்தில் தான் அந்தக் கிராமம் உள்ளது. துப்புரவான கிராமம் அது. இந்த இடம்தான் எபிரோன்.
இப்போது மாதா ஊருக்குள் செல்கிறார்கள். ஊரின் நடுவில், ஓர் மிக அழகிய வீட்டின் முன் நிற்கிறார்கள். அவ்வீட்டின் முன்னும் பின்னும் சமையல் தோட்டம் உள்ளது. வீட்டைச் சுற்றி நன்கு பயிரிடப்பட்ட ஒரு பழத் தோட்டம் காணப்படுகிறது. அவ்விடத்தைச் சுற்றிலும் ஒருவகை முட்செடிகளாலும், காட்டு ரோஜாக்களாலுமான வேலி இருக்கின்றது. நடுவில் ஒரு இரும்புக் கதவு. ஊரில் ஒரு முக்கியமானவரின் வீடு அது என்று தெரிகிறது.
மாதா வாகனத்தை விட்டிறங்கி வாசலுக்கு வந்து இரும்புக் கம்பிகள் வழியாகப் பார்க்கிறார்கள். ஒருவரும் தென்படவில்லை. சத்தம் கொடுத்துப் பார்க்கிறார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஒரு மூதாட்டி, அங்கே தொங்குகிற மணியாகப் பயன் படுத்தப்படும் ஒரு நூதன விசையைக் காட்டுகிறாள். இரண்டு உலோகத் துண்டுகள் ஒரு கோலில் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு கயிறு உள்ளது. கயிற்றை இழுக்கும் போது அந்த உலோகத் துண்டுகள் மோதி மணியொலியை எழுப்பும். மாதா மிக மெதுவாக கயிற்றை இழுக்கிறார்கள். மிக மெலிந்த ஒலி கேட் கிறது. யாருக்கும் அது கேட்கவில்லை. பின் அந்த பாட்டி தன் பலமெல்லாம் கூட்டி கயிற்றை பலமுறை வேகமாக இழுத்து செத்த வனை எழுப்பப் போதுமான பெரிய ஒலியை உண்டாக்குகிறாள்.
“இப்படிச் செய்ய வேண்டும் பெண்ணே! இல்லாவிட்டால் யாருக்குக் கேட்கும்? எலிசபெத்தும் சக்கரியாசும் வயதானவர் களென்று உனக்குத் தெரியுமே. அவர் இப்போது ஊமையும் செவிடுமாயிருக்கிறார். இரண்டு வேலைக்காரர்களும் வயசாலிகள் தான், உனக்குத் தெரியாதா? நீ இதற்குமுன் இங்கே வந்ததுண்டா ? சக்கரியாஸை உனக்குத் தெரியாதா? நீ...''
அப்போது அங்கே மூச்செறிய வேகமாய் வருகிற ஒரு சின்ன வயோதிப மனிதனால், மாதா அந்த ஸ்திரீயின் கேள்விகள், அவள் தரும் தகவல்கள் ஆகிய பிரளயத்திலிருந்து காப்பாற்றப்படு கிறார்கள். அந்த ஆள் ஒரு தோட்டக்காரர் அல்லது விவசாயியாக இருக்க வேண்டும். அவர் வாசலைத் திறக்க, மாதா அந்தப் பாட்டிக்கு நன்றி சொல்லிவிட்டு, அவளுடைய கடைசிக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் உள்ளே செல்கிறார்கள்.
உள்ளே வந்ததும் மாதா : "நான் சுவக்கீன் அன்னாளின் மரியா. என் ஊர் நாசரேத் . உம் எஜமானரின் உறவினள்'' என்கிறார்கள்.
அம்மனிதன் வாசற்கதவை மீண்டும் திறந்து கழுதையை உள்ளே வரவிடும்போது : "ஓ! இந்த வீட்டிற்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சியும், அதிர்ச்சியும்! மலடியாயிருந்தவளுக்கு பரலோகம் ஒரு மகவைத் தந்திருக்கிறது. உந்நதர் வாழ்த்தப்படுவாராக! ஆனால் ஏழு மாதங்களுக்கு முன் சக்கரியாஸ் ஜெருசலேமிலிருந்து ஊமையாகத் திரும்பி வந்தார். இப்போது அவர் சயிக்கினையால், அல்லது எழுதிக் காட்டி தம்மைக் கண்டுபிடிக்க வைக்கிறார். என் எஜமானி, இந்த மகிழ்ச்சியிலும், கஷ்டத்திலும் உமக்காக மிகவும் ஏங்கியிருக்கிறார்கள். எப்போதும் அவர்கள் சாராளிடம் : "சின்ன மரியா மட்டும் என்னுடன் இருந்தால்! அவள் இன்னும் ஜெருச லேமில் இருந்திருந்தால், அவளை அழைத்துவர சக்கரியாஸை அனுப்பியிருப்பேன். ஆனால் ஆண்டவர் அவர் நாசரேத் சூசைக்கு விவாகஞ் செய்யப்பட விரும்பினார். என் வேதனையில் அவள் மட்டுமே எனக்கு ஆறுதலாயிருக்கக் கூடியவள். அவள்தான் கடவுளிடம் ஜெபிக்க எனக்கு உதவக்கூடியவள். அவள் அவ்வளவு நல்லவள். தேவாலயத்தில் எல்லாரும் அவளைத் தேடுகிறார்கள். கடவுள் எனக்குத் தந்திருக்கிற குழந்தைக்காக அவருக்கு நன்றி செலுத்தும்படி போன திருநாளைக்கு நான் சக்கரியாசுடன் ஜெருசலேமுக்குப் போயிருந்தபோது அவளுடைய ஆசிரியைகள் என்னிடம் : "மரியாயின் குரல் இந்த சுவர்களின் உள்ளே கேட்கப் படாததால் மகிமையின் கெருபின் தேவாலயத்தில் இல்லாதது போல் இருக்கிறது'' என்று சொன்னார்கள்'' என்று கூறுகிறான்.
அப்போது வீட்டின் ஒரு பக்கத்திலிருந்த படிக்கட்டில் ஒரு வயதான ஸ்திரீ தோன்றுகிறாள். முகமெல்லாம் சுருக்கம். பழுத்த தலைமுடி. அது முன்பு நல்ல கறுப்பாயிருந்திருக்க வேண்டும். அவள் தளதளப்பாக உடையணிந்திருக்கிறாளெனினும் அவள் குழந்தையோடிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவள் கையால் கண்ணை வெளிச்சத்துக்கு மறைத்தபடி கீழே எட்டிப் பார்க்கிறாள். மாதாவை அடையாளம் கண்ட உடனே தன் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “ஓ!!” என்று மகிழ்ச்சியாலும், ஆச்சரியத்தாலும் குரல் கொடுக்கிறாள். தன்னால் முடிந்த மட்டும் மாதாவை நோக்கி விரைந்து வருகிறாள். வழக்கமாக எப்போதும் மெல்லவே நடக்கும் மரியா மான்போல் ஓட, படிக்கட்டின் அடியில் இருவரும் சந்திக் கிறார்கள். மகிழ்ச்சியால் கண்ணீர் சிந்தும் எலிசபெத்தம்மாளை மாதா அன்போடு அரவணைத்துக் கொள்கிறார்கள்.
பின் எலிசபெத்தம்மாள் தன்னை விடுவித்துக்கொண்டு, மகிழ்ச்சியும், துயரமும் கலக்க, "ஆ!'' என்று ஓலமிட, மாதாவும் அந்த மூப்பான ஊழியனும் உடல் நலமற்றது போல் தள்ளாடும் எலிசபெத்தம்மாளைத் தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் சற்று ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் எலிசபெத் பிரகாசமான முகத்துடன் காணப்படுகிறாள். அதிக இளமையாக காட்சியளிக்கிறாள். ஒரு சம்மனசைப் பார்ப்பது போல் வணக்கத்தோடு மாதாவைத் தாழ்ந்து பணிந்து ஆச்சரியத்தோடு உரைக்கிறாள் :
"பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய உதரத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே! என் ஆண்டவரின் தாயார் உம்முடைய ஊழியக்காரியாகிய என்னிடம் வரும்படி எனக்குக் கிடைத்ததெப்படி? உமது குரலின் சத்தம் என் காதில் விழுந்ததும் என் உதரத்திலுள்ள பிள்ளை அக்களிப்பால் துள்ளிற்று. நான் உம்மை அரவணைத்தபோது தேவ ஆவியானவர் மிக ஆழ்ந்த உண்மைகளை என் இருதயத்தில் கூறினார். மனித மனத்திற்கு சாத்தியமாகாதென காணப்பட்டவை கடவுளால் கூடும் என நீர் விசுவசித்ததால் நீர் பாக்கியவதியாயிருக்கிறீர். நீர் பாக்கியவதி. ஏனென்றால், உமக்கு முன்னறிவிக்கப்பட்டதையும், நம் நாட்களுக் கென தீர்க்கதரிசிகள் முன்னுரைத்ததையும் உம்முடைய விசுவாசத் தால் நீர் நிறைவேறச் செய்வீர். யாக்கோபின் வீட்டாருக்கு நீர் கொண்டு வந்துள்ள இரட்சண்யத்திற்காக நீர் பாக்கியவதியா யிருக்கிறீர். என் மகனுக்கு நீர் கொண்டு வந்துள்ள அர்ச்சிப்பிற்காக நீர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர். இக்குழந்தை மகிழ்ச்சியடைந்த வெள்ளாட்டுக் குட்டிபோல் என் உதரத்துள் அக்களிப்பால் துள்ளுவதை நான் உணருகிறேன். காரணம் அவன் பாவ தோஷத்திலிருந்து விடுபட்டதாக உணருகிறான். உமக்குள் வளரும் பரிசுத்தரின் இரட்சிப்பிற்கு முன்கூட்டியே அர்ச்சிக்கப்பட்டு அவருடைய முன்னோடியாக அழைக்கப்பட்டிருக்கிறான்.''
அப்போது மாதாவின் ஒளிரும் கண்களில் இரு துளிகள் உருண்டோடுகின்றன. தன் இரு கரங்களையும் உயர்த்தி கண்களை மேலே எழுப்பி முறுவலோடு : "என் ஆன்மா ஆண்டவரை மகிமைப்படுத்துகிறது" என்ற தன் கீதத்தை அது நமக்குக் கிடைத்துள்ளபடியே உரைக்கிறார்கள். மேலும் "அவர் தமது கிருபையை நினைவுகூர்ந்து தம்முடைய தாசனாகிய இஸ்ராயேலை ஆதரித்தார்'' என்ற வாக்கியத்தைக் கூறும்போது மாதா முழங்காலிட்டு கைகளை மார்பில் சார்த்தி தரைமட்டும் கவிழ்ந்து கடவுளை ஆராதிக்கிறார்கள். மாதா கரங்களை உயர்த்துகிற பாவனையில் சேசு அடிக்கடி பின்னால் காணப்படுவார்.
ஊழியன் விவேகத்தோடு அங்கிருந்து அகன்று, ஒரு கம்பீர மான முதியவரோடு திரும்பி வருகிறான். முதியவரின் தலையும் தாடியும் முழுவதும் வெண்மையாயிருக்கின்றன. தூரத்திலிருந்தே அவர் மாதாவை பெரும் சைகைகளோடும் அடித்தொண்டையிலிருந்து கிளம்பும் ஒலிகளோடும் வரவேற்கிறார். அப்போது எலிசபெத்தம்மாள் ஜெபத்தில் மூழ்கியிருந்த மாதாவை தோளில் தொட்டு : ''சக்கரியாஸ் வருகிறார். அவர் ஊமையாயிருக்கிறார். அவர் விசுவசியாததால் கடவுள் அவரைத் தண்டித்திருக்கிறார். ஆனால் வரப்பிரசாதத்தால் நிறைந்திருக்கிற நீர் இங்கு வந்திருப் பதால் கடவுள் அவரை மன்னிப்பாரென நம்புகிறேன்' என்கிறாள்.
மாதா எழுந்து சக்கரியாஸை சந்திக்கப் போகிறார்கள். சைகைகளால் சக்கரியாஸ் மாதாவை வரவேற்கிறார். இருவரும் எலிசபெத்திடம் வருகிறார்கள். அவர்கள் ஓர் அறைக்குள் செல் கிறார்கள். அது ஒரு விசாலமான அழகாக ஒழுங்கு செய்யப்பட்ட அறை. அதில் மாதாவை இருக்கச் செய்து பலகாரங்களையும் நுரைமாறாத புதுப்பாலையும் அருந்தக் கொடுக்கிறார்கள்.
இதற்கிடையில், ஓர் எழுதுகோலால் மெழுகு அட்டையில் சக்கரியாஸ் எழுதிக் கேட்கிற கேள்விகளுக்கு மாதா பதில் சொல் கிறார்கள். அவர். சூசையப்பரைப் பற்றியும் அவருடன் மாதாவின் திருமண வாழ்வு பற்றியும் கேட்கிறார். மேலும், மாதா மெசையா வின் தாயாயிருக்கிற நிலையைப் பற்றிய மோட்ச ஒளி அவருக்குக் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது. எலிசபெத்தம்மாள் சக்கரியாஸிடம் சென்று : "மரியாயும் ஒரு தாயாகியிருக்கிறாள். அவளின் மகிழ்ச்சியினிமித்தம் சந்தோஷப்படுங்கள்'' என்கிறாள். வேறு எதையும் கூறாமல் மாதாவைப் பார்க்கிறாள். மாதாவும் எலிசபெத் தைப் பார்த்து, வேறு எதுவும் சொல்ல வேண்டாமென்ற குறிப்பை உணர்த்துகிறார்கள். எலிசபெத்தம்மாளும் மவுனமாகி விடுகிறாள்.