“ ஆதியிலே வார்த்தை இருந்தார்; அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார்; அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார் “
அருளப்பர் 1 : 1
இவ்வளவு மகிமையானவரான வார்த்தையான சுதனான சர்வேசுவரன் நமக்காக மனித உரு எடுத்தார்.. இது எப்பேர்பட்ட தாழ்ச்சியான செயல்.
மனிதனை கடவுள் எதற்காக படைத்தார் என்று பார்த்தோம்..
மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கத்தைப் பார்த்தோம்..
மனிதர்களான நாம் கடவுளை அறிந்துகொள்ளவும், நேசிக்கவும், அவரை சேவிக்கவும் செய்யாமல் அவரைவிட்டு பிரிந்து வாழ்கிறோம்.. அவரை அறிய முயற்சி செய்யாமல் அவரை ஆராய முயற்சி செய்கிறோம். அதுவும் அவர் தந்த அறிவைப் பயன்படுத்தி..
மனிதன் என்ன செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாக மனிதர்களை விட சற்று உயர்வாகப்படைக்கப்பட்டு அதில் ஒரு பகுதி அந்தத் தகுதியை இழந்து நமக்கும் கீழாகப்போய் அதள பாதாளத்தில் கிடக்கும் ஒரு படைப்புகளைப் பார்ப்போம்..
சின்ன குறிப்பிடம் 15-வது கேள்வியில் நாம் பார்த்தோம். சர்வேசுவரன் படைப்புகளில் பிரதான வஸ்துக்கள் சம்மனசுக்கள் என்று பார்த்தோம்.
16-ம் கேள்வி,
சம்மன்சுக்கள் எல்லோரும் தாங்கள் மேன்மையான நிலையில் நிலைகொண்டார்களா?
இல்லை. சிலர் ஆங்காரத்தினாலே மோட்சத்தை இழந்து நரக தண்டனைக்கு உள்ளானார்கள்.
17-ம் கேள்வி
இப்படி கெட்டுப்போன சம்மனசுக்களின் பெயரென்ன?
பிசாசுக்கள்..
பிசாசு செய்ததைத்தான் நாமும் பல நேரங்களில் செய்துகொண்டிருக்கிறோம்..
சரி கடவுள் மனிதனை எதற்காகப் படைத்தார் என்று பார்த்துவிட்டோம்..
எந்த நிலையில் படைத்தார் என்று பார்ப்போமா?
19- கடவுள் எந்த நிலையில் ஆதித் தாய் தகப்பனை உண்டாக்கினார்..
பரிசுத்தமும், பாக்கியமான நிலையில்..
இது எப்பேற்பட்ட நிலை.. இந்த பதிலை நாம் நன்றாக தியானிக்க வேண்டும்..
அப்பேற்பட்ட உயர்ந்த நிலையில் படைக்கப்பட்ட அதைத் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டிருக்காமல் ஏன் வீழ்ந்தோம்…
20 -அவர்கள் அதை இழந்தது எப்படி ?
பசாசை நம்பி சர்வேசுவரனால் விலக்கப்பட்ட கனியை தின்றதினாலே இழந்தார்கள்..
21- அதனால் அவர்களுக்கும் அவர் சந்ததியாருக்கும் வந்த கேடென்ன?
பசாசுக்கு அடிமையாகி சாவு, நரகம் முதலிய தண்டனைக்கு ஆளானார்கள்..
நாம் ஆளானோம்.. இன்னும் நாம் திருந்தவில்லை.. நிறைய நேரங்களில் ஆண்டவரின் சொல் பேச்சைக் கேட்காமல் பசாசின் சொல் பேச்சையே கேட்கிறோம்.. அதனால்தான் நிம்மதி, சந்தோசத்தை தொலைத்து அலைகிறோம்..
“ பசாசின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது “
ஞான ஆகமம் 2 : 23
பசாசு தானும் கெட்டு நம்மையும் கெடுத்து அலைகிறது..
கிராமங்களில்.. அல்லது வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தை..
“ அவன் சொன்னால் என்னய்யா. அவனு(ளு)க்கு புத்தி எங்கய்யா போச்சு “
அவளுக்கு அதாவது ஏவாளுக்கு புத்தி எங்கேயோ போச்சு.. பழத்தை தின்று ஆண்டவரிடம் மாட்டிக் கொண்டாள்..
“ அவள் திண்ணா என்னயா.. அவனுக்கு புத்தி எங்கய்யா போச்சு? “
யாரு.. ஆதாமுக்கு.. அவனும் தின்றான் கெட்டுப்போனான்.. ஆண்டவரிடம் மாட்டிக்கொண்டான்..
இருந்த எல்லாமும் பறிபோய்விட்டது..
ஒரு இறக்கம் நடந்தது…
பரிசுத்த நிலையை இழந்து பாதாளத்திற்கு சென்றது..
அடுத்த இறக்கம் நடந்தது..
அதுவும் பரிசுத்த நிலையை இழந்து பூமிக்கு சென்றது..
கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறது..
இன்னொரு மகா புனிதமான இறக்கம் நடந்தது..
இரக்கத்தினால் நடந்த இறக்கம் அது..
மகா மகிமையிலும், பேரின்பத்திலும், மகிழ்ச்சியிலும், நிறைவிலும் பிதாவோடு ஒன்றிருந்தவர்.. நமக்காக மனிதரானார்..
அந்த மாபெரும் இறக்கத்தையும், கடவுளின் இரக்கத்தையும் தியானிப்போம்..
இந்த சிந்தனைகளோடு கடவுளுக்குச் சித்தமானால் அடுத்த பகுதியில்..
நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !