இயேசு நாதர் ஸ்வாமி பாடுபட்ட முதலாம் ஸ்தலம் துவங்கி “ இயேசு நாதர் சிலுவையில் உயிர்விடுகிறார் என்று முடியும் 14 ஸ்தலங்களை உள்ளடக்கிய இயேசுவின் திருப்பாடுகள் நமக்கு சொல்வது என்ன ?
இந்த இயேசுவின் சிலுவைப்பாடுகள்தான் கிறிஸ்தவ மதத்தின் அஸ்திவாரம். இந்த திவ்ய இயேசுவின் சிலுவைப்பாடுகள் இல்லை என்றால் கிறிஸ்தவம் இல்லை. இந்த ரகசியத்தை இயேசுவுக்கு அடுத்தபடியாக தெறிந்து கொண்டது மாதாதான். அவருக்கு அடுத்தபடியாக புனித அருளப்பர் மற்றும் மற்ற அப்போஸ்தலர்கள் மற்றும் ஆண்டவரின் பெண் சீடர்கள் புனித மகதலேன் மரியாள், புனித சலோமி, புனித சின்ன யாகப்பரின் தாய் மரியாள் இன்னும் பலர், புனிதர்கள், ஆதிகால கிறிஸ்தவர்கள், வேதசாட்சிகளாய் மரித்த நிறைய குருக்கள், ஆயர்கள் மற்றும் போப் ஆண்டவர்கள்.
எத்தனை வேத சாட்சி மரணங்கள், எவ்வளவு குருதி ஆறுகள். தனித்தனியாக, கூட்டம் கூட்டமாக, குருக்கள், ஆயர்கள், அப்போஸ்தலர்கள் என்று எத்தனை பேர் ரத்தம் சிந்தினார்கள். குருதி வெள்ளம் ஓடியது. அத்தனையும் யாருக்காக இயேசு சுவாமி என்ற நம் மீட்பருக்காக, இயேசு சுவாமி என்ற போதகருக்காக, இயேசு நாதர் என்ற கடவுளுக்காக. இதில் முக்கியமான செய்தி இயேசு சுவாமி பாடுகள் பட்டபோது மானிட மகனாக இருந்தார். அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்தார் ஏன் கடவுளாலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்தார். துவளவில்லை, துணிந்தார் கல்வாரி மலையை நோக்கி நடந்தார். “ என் உடலைத்தானே வதைக்கமுடியும் ? என் உடலைத்தானே கொல்ல முடியும் ? என் ஆன்மாவை உங்களால் என்ன செய்ய முடியும்? என்று இந்த மனித தெய்வம் துணிந்து கல்வாரியை நோக்கி நடந்தார். தான் யார் ? தன்னைப்பின் பற்றி கிறிஸ்தவர்கள் எப்படி வாழவேண்டும் என்று தானே ரோல் மாடலாக வாழ்ந்தல்ல, இறந்தும் காட்டினார்.
இப்போது நம் வாழ்க்கைக்கு வருவோம். நம்மை யாரும் வேத சாட்சியாக மரிக்க அழைக்கிறார்களா? அல்ல கூப்பிட்டு துன்பங்களையும், அவஸ்தைகளையும் கொடுக்கிறார்களே இல்லையே. வரும் துன்பங்களை சந்தோசமாக ஏற்றுக்கொள்ளுங்கள், அதை தன் மீட்புக்காகவும், பிறரின் மீட்புக்காகவும் ஒப்புக்கொடுங்கள். ஒறுத்தல் முயற்சிகள் (அட்லீஸ்ட் சின்ன சின்ன) செய்யுங்கள். அவற்றை நம் பாவ பரிகாரத்திற்க்காகவும், பிறரின் மீட்புக்காகவும் ஒப்புக்கொடுங்கள் அட்லீஸ்ட் பாவம் செய்யாமல் இருங்கள் என்றுதானே கேட்கிறார். தவறி தெறியாமல் பாவம் செய்துவிட்டோமா ? உடனே எழுவோம் அவரிடம் கண்ணீர்விட்டு கதறி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து மீண்டும் பாவம் செய்யாமல் வாழுவோம். அதற்கு ஒரே வழி திவ்ய நற்கருணை நாதரை நல்ல தயாரிப்பு செய்து உட்கொள்ளுவோம். குறைந்த பட்சம் வாரம் ஒருமுறையாவது நற்கருணை நாதரை உட்கொன்டே ஆகவேண்டும். அடுத்த வழிகள் அவர் திருப்பாடுகளை தினமும் அல்லது வாரம் இருமுறையாவது சிந்திக்கவேண்டும். அதற்கு ஜெபமாலை சொல்லவேண்டும். இயேசு தெய்வத்திடம் நம்மை கொண்டு வந்து சேர்ப்பது நற்கருணை நாதருக்கு அடுத்த படியாக நம் தேவமாதாவும், புனிதர்களும்தான். இந்த தவக்காலத்தில் புனிதர்கள் வரலாறுகளைப் படிப்பது மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்..படிப்போம்.. தேடி வாங்கிப்படிப்போம். அவர்கள் வாழ்க்கை வரலாறுகள் நம்மையும் ஆண்டவர் இயேசு சுவாமியின் திருப்பாடுகளை தியானிக்க நம் வாழ்விலும் கடைபிடிக்க நமக்கு உறுதுணையாய் இருப்பார்கள்.
ஆண்டவர் இயேசு சுவாமியின் சிலுவைப்பாடுகளை உள்ளார்ந்து, உணர்ந்து நம் தெய்வத்தை நம் நெஞ்சத்திற்கு அருகே வைத்து தியானிப்போமா ? தியானிப்போம்...
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !