சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 04

சர்வேசுரனுடைய அதாவது கிறீஸ்து இராஜாவின் இராச்சியம் அன்னமும் பானமுமல்ல, அது நீதியும் சமாதானமும் இஸ்பிரீத்துசாந்துவினிடத்தில் அகமகிழ்ச்சியுமாயிருக்கிறது (உரோ.14:17). அது மனிதன் கிரியைகளை முடித்து இளைப்பாறும் ஸ்தலம் (எபி. 4:5). அவ்விடத்தில் இவர்களுக்கு இனிப் பசியும் இல்லை, தாகமும் இல்லை. வெயிலாவது உஷ்ணமாவது அவர்கள் மேல் படுவதில்லை (இசை. 49:10)

ஆனால் எழுதப்பட்டிருக்கிறபடியே சர்வேசுரன் தம்மை நேசிக்கிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிறவைகளை கண் கண்டதுமில்லை, காது கேட்டதுமில்லை, மனிதருடைய இருதயத்துக்கு அவைகள் எட்டினதுமில்லை (1 கொரி. 2:9)

அப்போது நீதிமான்கள் தங்கள் பிதாவின் இராச்சியத்தில் சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள் (மத். 13:43) என்று சுவிசேஷத்தில் பற்பல இடங்களில் கூறப்பட்டிருப்பதும் நாம் கவனிக்கத்தக்கது.

இதுவுமன்றி எந்த மனிதனும் சரியாய் வர்ணிக்கத் திறமையற்ற நித்திய பரமானந்த பாக்கியத்தை சம்பூரணமாய்க் கொண்டு விளங்கும் மோட்ச இராச்சியமாகிய புது ஜெருசலேமின், சிறப்பு மகிமையை அருளப்பர் தமது காட்சியாகமத்தின் 21-ம் அதிகாரத்திலும், அந்த இராச்சியத்தில் சர்வேசுரன் தாம் தெரிந்து கொண்டவர்களை நித்திய காலமும் எப்படி அரசு ஆள்வாரென்று 22-ம் அதிகாரத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இவ்விரண்டு அதிகாரங்களையும் சாவகாசமாய் வாசிப்போர் கிறீஸ்துவின் இராச்சியத்தின் மகிமைப் பிரதாபத்தைத் தத்தம் அறிவுக்கும், நல்லுணர்ச்சிக்கும், மன சுத்திகரத்திற்கும் தக்கவாறு கிரகித்துக்கொள்வார்களாகையால், இவ்விராச்சியத்தின் மேன்மையைப்பற்றி இனி அதிகமாக விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை.

கிறிஸ்து ராஜாவின் இராச்சியம் அதன் உற்பத்தியில் தெய்வீகமாயும், அதன் நோக்கத்தில் ஆத்துமத்திற்குரியதாகவும் இருப்பதால், அதைப் பரலோக இராச்சியம் என்று, அது பூலோகத்தைச் சேர்ந்த இராச்சியமல்ல என்றும் நமதாண் டவரே பல முறை திருவாய் மலர்ந்தருளி, தாம் மோட்ச இராச்சியத்தின் சுவிசேஷத்தைப் பிரசிங்கிக்க இவ்வுலகில் வந்தாரென்று திட்டமாய்த் தெரியப்படுத்தினார்.

இந்த இராச்சியம் பூலோகத்தைச் சேர்ந்ததல்ல என்றாலும் அது பூலோகத்திலும் உண்டு. நமது ஆத்தும் இரட்சணிய வேலையில் நம்மை முழுவதும் ஆட்கொண்டு ஆளுபவரான கிறீஸ்து இராஜா நமது மனித சுபாவத்துக்குத் தக்காற்போல தனது ஆளுகையை நடத்துகிறார்.

ஆத்துமமும் சரீரமும் சேர்ந்தே ஒருவன் மனிதனாகிறான். மனிதனிடத்தில் ஆவியும், பொருளும் எவ்வளவு ஒன்றித்திருக்கிறதென்றால், இவ்விரண்டும் அவனுக்கு இன்றியமையாத சாதனங்களா கின்றன. ஆத்துமத்தின் வலிமையால் சரீரம் ஆடியோடித் தன் கிரியைகளைச் செய்கிறது. உயிர் கொடுப்பது ஆத்துமமே; ஆத்துமமின்றி மாமிசமானது ஒன்றுக்கும் உதவாது; ஆத்துமமும் சரீரத்தின் மூலமாகவே தன்னுடைய உணர்ச்சிகளையும் முயற்சிகளையும் வெளிப்படுத்துகிறது.

ஆகையால் மனிதனுடைய ஆத்தும இரட்சணிய வேலைகளிலும் அவனுடைய சரீரமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. 

இந்தக் காரணத்தினால் சுதனாகிய சர்வேசுரன் மனிதனை இரட்சிப்பதற்குத் தமது தேவ சுபாவத் துடன் மனித சுபாவத்தை ஒன்றித்து, மனுவுருவெடுத்து, மனிதருடன் வசித்து அவர்களுக்கு மோட்சம் இராச்சியத்தின் சுவிசேஷத்தைத் தமது பகிரங்க சீவியத்தில் பிரசங்கித்து, அவர்களுக்காகப் பாடுபட்டு மரித்தார். இதுவுமன்றி, தமது திருப்பாடுகளின் பேறுபலன்கள் உலக முடியுமட்டும் மனிதனுடைய இரட்சணியத்துக்குப் பயன்படும் பொருட்டு உலகில் காணக் கூடிய வெளியரங்கமான ஓர் இராச்சியத்தையும் ஸ்தாபிக்கச் சித்தமானார். இதுவே சத்தியத் திருச்சபை. இது உலகத்துக் கடுத்ததல்ல என்றாலும் உலகத்திலுள்ள கிறிஸ்து ராஜாவின் இராச்சியம். மாம்சமான வார்த்தையானவர் பூவுலகில் கொண்டு வந்து பிரசங்கித்த மோட்ச இராச்சியத்தின் தொடர்ச்சியே உலகத்தில் இந்தத் திருச்சபை என்னும் இராச்சியம்

தொடரும்...