“ சிலுவையிலேதான் மீட்சியுண்டு தேடும் வானக மாட்சியுண்டு “
“ சிலுவை…திருச்சிலுவை…சிலுவையின் இனிய மறைவினில் அமர்ந்து கருனையின் தெய்வத்தைப் பார்த்திடும் அரிய சிலுவை…திருச்சிலுவை”
நம்மை பாவத்திலிருந்து விடுவிக்க கடவுளால் பயன்படுத்தப்பட்ட கருவி “சிலுவை”
கிறிஸ்தவர்களாகிய நமக்கு மீட்பின் அடையாளம் சிலுவை.. நாம் சிலுவையை எப்படிப்பார்க்கிறோம் என்று செல்வதற்கு முன்பாக நம் மீட்பின் நாயகன் அதை எப்படிப்பார்த்தார் என்று பார்ப்போம்… அதற்கும் முன்..
நம்முடைய மரணம்..எப்போது எப்படி வரும் என்று நமக்குத்தெறியாது… ஆனால் ஆண்டவராகிய இயேசு சுவாமிக்கு தன் மரணம் எப்படி வரும்? அது எப்படி இருக்கும்? அது எத்தனை கொடியதாக இருக்கும் என்று அருக்குத்தெறியும். தான் பிறந்ததே சிலுவையில் மரிக்கத்தான் என்று அவருக்குத் தெறியும். மிகக்கொடிய கல்வாரி மரணம் எப்போதும் அவர் கண்முன் நின்றிருக்கும்…
கானாவூர் திருமன அற்புதத்தை தன் மகனை செய்ய வைத்து “ மகனே உன் நேரம் வந்துவிட்டது “ என்று தன் தெய்வீகத்தாய் சொல்லாமல் சொல்லும் போதே இந்த தெய்வீகத் திருக்குமாரன் தயாராய் ஆகியிருப்பார்.. “ சரிம்மா நான் ரெடி “ என்று தாயிடம் கண்களால் பேசியிருப்பார்.. திருமண வீட்டாருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் நம் தெய்வீக அன்னையின் இதயம் வழக்கம் போல் அக்கொடிய மரணத்தை நினைத்து வியாகுலத்தால் துடித்திருக்கும்.
ஏன் வழக்கம்போல் என்று சொல்கிறேன் என்றால், பிதாவாகிய சர்வேசுவரனின் மீட்பின் திட்டத்தை ஆண்டவர் சேசு சுவாமிக்கு அடுத்தபடியாக அறிந்தவர் நம் தெய்வீகத்தாய் மட்டுமே. அவர் ஒரு நாளோ.. இருநாளோ சில ஆண்டுகளோ அந்த வியாகுலத்தை சுமக்கவில்லை. 33 ஆண்டுகளாக சுமந்திருக்கிறார்கள். தன் பாலகனின் மழலை சிரிப்பை ரசிக்கும் போதும், சிறுவனான சேசு சுவாமி விளையாடும் போதும், அல்லது எதையாவது பார்த்து பயந்து அன்னையின் கால்களை கட்டிக்கொள்ளும் போதும் ஒரு தாயாக அவர் இதயம் சிறிது மகிழ்ந்தாலும்… உடனே அன்னையின் இதயம் கல்வாரியை நினைத்து பயத்திலும், வியாகுலத்திலும் துடித்து விடும்.. கல்வாரியை அன்னை 33 ஆண்டுகள் சுமந்ததால் அன்னையின் இதயமே சுருங்கி விட்டதாம்..
சரி சேசு சுவாமிக்கு வருவோம்.. சேசு சுவாமி அந்த தெய்வீக மீட்பின் சின்னத்தை வாங்கி அதை தோலில் சுமக்கும்போது சொல்லியிருப்பார்,
“ ஓ என் அன்பான சிலுவையே… உன்னை நேசிக்கிறேன்.. உன்னை சந்திக்க.. உன்னை… தழுவ.. உன்னில் ஒன்றாக இனைக்கப்பட… உன்னில் அறையப்பட உனக்காகத்தானே இத்தனை ஆண்டுகள் காத்துக்கொண்டிருந்தேன்.. இங்கு கூடியிருப்பவர்களுக்கு இது அவமான சிலுவை.. எனக்கும், என் பிதாவுக்கும், என் தாய்க்கும் மட்டுமே தெறியும் இது மீட்பின் சிலுவை என்று.. உன்னை சந்தித்து விட்டேன்… இனி எனக்கு கலக்கமில்லை..என் மக்களை..என்னை விசுவசிக்கும் மக்களை உன்னை வைத்து நான் மீட்டு விடுவேன் ஏனென்றால் நீ மீட்பின் கருவியே… வா.. உன்னை அழைத்துக் கொள்கிறேன்.. அணைத்தும் கொள்கிறேன்” என்றிருப்பார்.. துணிச்சலாக.. உடலில் வலு இல்லாமல் இருந்தாலும் பெற்றுக்கொண்டார்.. கல்வாரி நோக்கி வெற்றி நடை போட்டார்..
கல்வாரி நாயகன் சிலுவையை நேசித்தார்…சுமந்தார்… நம்மை நரகத்திலிருந்து மீட்டார்… மோட்சத்திற்கு கூட்டிக்கொண்டு போக வழி வகை செய்தார்..
நாமும் சிலுவையை நேசித்தால்.. சுமந்தால்.. அந்த சிலுவையைக் கொண்டே மோட்சத்தை சம்பாதிக்க முடியும்.. நமக்கு வரும் துன்பங்கள்தான் அந்த சிலுவை…. பொறுமையோடும்..சகிப்புத்தன்மையோடும்…” நாம் தண்டிக்கப்படுவது முறையே “ என்று சொல்லி தன் சிலுவையை… வேதனையை ஏற்றுக்கொண்டதால் அந்த நல்ல கள்ளன் மோட்ச பாக்கியத்தை சம்பாதித்துக்கொண்டான். ஏன் புனிதனாகவே மாறிவிட்டான்.
ஆனால் நாம் பல நேரங்களில் என்ன சொல்கிறோம்…” எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்ட்டம், உபத்திரம்..துன்பங்கள் வருகிறது…” என்று புலம்புகிறோம்.. அதே துன்பங்களை அந்த நல்ல கள்ளனைப்போல் ஏற்றுக்கொண்டால்… மோட்சம் நமக்கு உறுதி..
ஏன் ஆண்டவர் இயேசு சுவாமி சொல்லியதைப்போல்..
"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும் “ மத்தேயு 16 :24
ஆண்டவரைப்பின் செல்வோம்… நம் சிலுவைகளை தூக்கிக்கொண்டு…