“அருள் நிறைந்தவளே வாழ்க ! ஆண்டவர் உம்முடனே “ லூக்காஸ் 1 : 22
" மரியே, அஞ்சாதீர்; கடவுளின் அருளை அடைந்துள்ளீர். லூக்காஸ் 1 : 30
முதல் வசன விளக்கம் : கடவுள் விவிலியத்தில் எத்தனையோ பேரை பெயர் சொல்லி அழைக்கிறார். “ ஆதாம்” “ ஆபிரகாம்” “ மோயிசன்” “சாமுவேல் “ யாக்கோபு “ யாரையும் அடைமொழி சொல்லி அழைத்ததில்லை. கடவுள் அடைமொழி சொல்லி அழைத்த ஒரே ஆள் மாதா மட்டுமே.. நம் அன்புத்தாய் அருள் நிறைந்தவள்; அருள் மட்டுமே நிறைந்தவள். விவிலியத்தில் எங்கு புரட்டினாலும் பிரிவினை சபையினர் தூக்கி தலையில் வைக்கும் எந்த பெண்ணையும் கடவுள் பெயர் சொல்லி அழைக்கவில்லை. அது மாதாவுக்கு மட்டுமே கிடைத்த மாபெரும் கொடை மட்டுமல்ல. அதுதான் சத்தியம். மாதாவை பழிப்பவர்கள் மூவொரு கடவுளை பழிக்கிறார்கள்.
இரண்டாவது வசன விளக்கம் : மாதாவின் அச்சம் தீர்க்க அதை மீண்டும் கபரியேல் தூதர் உறுதிசெய்கிறார்.
இன்று நம் அன்புத்தாயின் அமல உற்பவ விழா.. பாருங்கள் எத்தனை சிறப்பு. நாம் நம் மீட்பர் இயேசு தெய்வத்தின் பிறந்த நாளை கொண்டாடும் முன் மாதாவின் அமல உற்பத்தை கொண்டாடுகிறோம். இது கடவுள் நம் அன்புத்தாய்க்கு அளித்த கொடை. அன்னையின் அமல உற்பவத்தை பற்றி பேசும் நாம் இன்னும் இரு வாரங்களில் அவர்களை கன்னி கன்னி என்று அழைக்கப்போகிறோம். அதே நேரத்தில் டிசம்பர் எட்டுக்கும் செப்டம்பர் எட்டுக்கும் தொடர்பு உள்ளது சரியாக பத்தாம் மாதத்தில் மாதாவின் பிறப்பு. எப்படிப்பார்த்தாலும் மாதாவின் உற்பத்திலும் பாவம் இல்லை. இயேசுவின் உற்பத்திலும் பாவம் இல்லை. எல்லா இடத்திலும் தூய ஆவியானவர் செயலாற்றுகிறார்.
அதனால்தான் நம் பரிசுத்த தாயை தூயவள், அருள் நிறைந்தவள் என்றெல்லாம் அழைக்கிறோம். “ முப்பொழுதும் அவள் கன்னியம்மா எப்போழுதும் நம் அன்னையம்மா “
கபரியேலின் மங்கள வார்த்தை நாள் மார்ச் 25, இயேசுவின் பிறப்பு டிசம்பர் 25. நம் தாய் திருச்சபை எதையும் சரியாக தீர்மானிக்கும்.
கத்தொலிக்கத் திருச்சபையில் பிறக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும். கத்தொலிக்க வேத சத்தியங்களை விசுவசிப்போர் பேறு பெற்றோர். இயேசு சொல்லியிருக்கிறார் “ கண்டு விசுவசிப்பதைவிட காணமல் விசுவசிப்பவர்களே பேறு பெற்றோர் “
மேலும் முதல் வசனத்தை தியானிப்போம்,
“ அருள் நிறைந்தவளே வாழ்க ! ஆண்டவர் உம்முடனே “
ஜெபமாலை முதன்முதலில் தோன்றியதும் இப்போதுதான். வார்த்தையான கடவுளை நம் அன்புத்தாய் மூலமாய் மனிதனாய் மாற்றிய மங்கள மொழியே பாவிகளான நம்மை தூயவர்களாக ஏன் புனிதர்களாக மாற்றும் அளவுக்கு சக்தி மிக்கது. மேலும் அது மூவொரு கடவுளுக்கு மகிமையாய் உள்ளது. கடவுளின் பேரன்பை பறைசாற்றுகிறது.
ஆதலால் நம்மை தூய்மையாக்க, பாவத்திலிருந்து விடுவிக்க கபரியேல் தூதரின் மங்கள வார்த்தை நமக்கு பயன்படுகிறது; நம்மை பாதுகாக்கிறது.
அமல உற்பவியான; அருள் நிறைந்தவளான அன்னையை வாழ்த்தி அதன் மூலம் நம்மையும் தூய்மையாக்குவோம். நம் கிறிஸ்த்துவின் பிறப்பு விழாவைக்கொண்டாட நமக்கு தூய்மை முக்கியம். தூய்மையை நேசிப்போம்; தூய்மையை நம் மனவாட்டியாக மனவாளனாக ஆக்குவோம்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !