(நன்மை)யானவர் இயேசு..
“ விரும்புகிறேன் குணமாகு”
லூக்காஸ் 5 : 13
மேலே உள்ள இயேசு சுவாமியின் வார்த்தை அவர் குருடனையோ, முடவனையோ சுகமாக்கும்போது சொல்லிய வார்த்தை அல்ல..
உடம்பெல்லாம் தொழுநோயாளியாய் இருந்த ஒருவரைப் பார்த்து சொல்லியது..
ஆண்டவர் அந்த தொழு நோயாளியைத்தொட வெட்கப்படவில்லை.. கூச்சப்படவில்லை.. அவனைத் தொட்டு சுகமாக்கினார்..
இயேசு ஆண்டவர் படைப்பவர்.. தொழு நோயாளி அவரால் படைக்கப்பட்ட படைப்பு. .. அதனால் அந்த தொழுநோயாளியைப் பார்த்து ஆண்டவர் முகம் சுழிக்கவில்லை.. யூதர்களைப்போல அவனை அவர் வெறுக்கவில்லை.. அங்கே போய் ஓரமாய் நில்லு.. என்று உத்தரவு கொடுக்கவில்லை.. நீ இங்கேயெல்லாம் வரக்கூடாது என்று சொல்லவில்லை..
அவரே தேடிச் சென்று அவரைத் தொட்டு குணமாக்குகிறார்..
ஏனென்றால் அவர் ஆண்டவர்.. சர்வேசுவரன்..
ஆனால் இப்போது ஆண்டவர் ஒதுக்கப்படுகிறார்.. ஓரம் கட்டப்படுகிறார்.. முகம் சுழிக்கப்படுகிறார்.. ஆண்டவர் நோயைப் பரப்பிவிடுவாரோ என்று சந்தேகிக்கப்படுகிறார்..
ஏனென்றால் நாம் யார்?
மனிதர்கள்.. கிறிஸ்தவர்கள்.. அதுவும் ஏக பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்க திருச்சபையில் இருக்கும் கிறிஸ்தவர்கள்..
இங்கே இப்போது படைத்தவரின் நிலை என்ன?
படைத்தவரையே அவரால் படைக்கப்பட்ட படைப்புகள் ஓரங்கட்டுகின்றன.
திவ்ய நற்கருணையை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் எப்படி அழைப்பார்கள்?
“நன்மை”
“நீ நன்மை வாங்கினாயா?”
“நீ ஏன் நேற்று பூசையில் நன்மை வாங்கவில்லை”
“ உன் மகனை(ளை) எப்போது புது நன்மை எடுக்க வைக்கப்போகிறாய் “
“நன்மை”.. நம்மைக் காக்கும் “நன்மை”.. தன்னையே நமக்கு உணவாக தந்த “நன்மை” நம்மை காப்பாற்றும் “நன்மை” நம்மை குணமாக்கும் “நன்மை”
அந்த “நன்மை” ஒருபோதும் தீமை செய்யுமா? யோசிக்க வேண்டாமா? சிந்திக்க வேண்டாமா? என்ன இந்த வினோத போக்கு? என்ன சொல்கிறோம்..? என்ன செய்கிறோம்..? எப்படி நடந்து கொள்கிறோம்..?
அன்று யூதாஸ் செய்தததிற்கும் இப்போது நாம் செய்வதற்கும் என்ன வித்தியாசம்..?
இரண்டும் ஒன்றுதான்..
ஒரு காலத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த சபையில் மட்டுமே ஒரு காட்சியைப் பார்க்க முடியும்....கத்தோலிக்க ஆலயங்களில் பார்க்கவே முடியாது அந்த காட்சி..
இப்போது அதற்கும் மேல்.. அதற்கும் மேல்… அதற்கு ரொம்பவும் மேல்.. என்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது..
நாம் ஆயிரம் காரணம் சொல்லலாம்.. நன்மைக்கு காரணமானவர்.. நன்மையே உருவானவர்.. நாம் இயங்கவே காரணமாய் இருப்பவரிடம் நாம் காரணம் சொல்ல முடியுமோ?
நாம் இயங்க மட்டுமல்ல.. இந்த உலகமும் இயங்க காரணமாய் இருப்பவர்..
அனைத்தையும் இயக்குபவரிடம்.. தீமை தவிர அனைத்திற்கும் காரணமாய் இருப்பவரிடம் நாம் காரணம் சொல்ல முடியுமோ?
காரணங்களைப் பற்றி பேசுவதால் மீண்டும் சின்ன குறிப்பிடம் கேள்வி எண் 14-க்கு செல்வோம்..
சர்வேசுவரன் எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாயிருப்பது எப்படி?
பரலோகத்தையும் பூலோகத்தையும் அவைகளடங்கிய சகலத்தையும் படைத்து காப்பாற்றுகிறதினாலே எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாயிருக்கிறார்..
சிறு வயதில் படித்திருந்தாலும் நமக்கு ஒரு முறை நினைப்பூட்டுதலுக்காக கேள்வி எண் 85.
நற்கருணை ஆவதென்ன?
அப்பத்தின் குணங்களிலும், முந்திரிகை பழ இரத்தின் குணங்களிலும் இயேசு நாதருடைய திருச்சரீரமும், திருஇரத்தமும், திரு ஆத்துமமும் தேவ சுபாவமும் அடங்கியிருக்கின்ற தேவதிரவிய அனுமானம்.
இந்த அனுமானத்திற்குத்தான் இப்போது எவ்வளவு பெரிய சோதனை, வேதனை, தேவ நிந்தைகள், அவசங்கைகள்..
என்று தீரும் இந்த நிலைமை..
வைரஸ் வருவது நிற்குமா என்று தெரியவில்லை..
ஆனால் புயல், மழை, வெள்ளம், சூராவளியாக வரும் சோதனையில் நம் விசுவாசம் நீடித்து நிற்குமா? தாக்குப்பிடிக்குமா? நிலைத்து நிற்குமா? என்று தெரியவில்லை..
“இறுதிவரை நிலைத்து நிற்பவன் மீட்கப் பெறுவான் “
மத்தேயு 10 : 22
மாற்கு 13 : 13
மத்தேயு 24 : 13
ஆண்டவர் டபுள் ஸ்ட்ராங்காக சொல்லவில்லை.. டிரிபிள் ஸ்ட்ராங்காக சொல்லியிருக்கிறார்.. கேட்கச் செவி உள்ளவர்கள் கேட்கட்டும்..
நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !
சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !
மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !