என்ன செய்தார் திருச்சிலுவையை பரிசாக பெற? இறைவார்த்தையை அறிவித்தார், புதுமைகள் செய்தார். நோயாளிகளை குணமாக்கினார், உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசி என்றார். கொடு உனக்கு கொடுக்கப்படும் என்றார். தன்னையே தாழ்த்து என்றார். பசியுற்றவனுக்கு உணவு கொடு, ஆடையில்லாதவனுக்கு ஆடை கொடு, நோயுற்றவனை மருத்துவமணை சென்று பார். சிறையில் இருப்பவனையும் சென்று சந்தி என்றார். அப்போது அது எல்லாம் எனக்கே செய்ததாகும் என்றார். இவ்வளவு நன்மைகளை செய்தவர் வேறு ஒன்றையும் செய்தார் அதுதான் புரட்சி.
தலைமைக் குருக்களை எதிர்த்தார். மறை நூல் வல்லுநர்களை எதிர்த்தார். பரிசேயர் சதுசேயர்களை எதிர்த்தார். ஏன் எதிர்த்தார் இறைவனை நேசிப்பதும், வழிபடுவதும் வெறும் சட்டதிட்டங்கள் அல்ல. இறைவனுக்கு தேவை மாடப்புறாக்கள் அல்ல. மாசில்லா ஆன்மாக்கள். மாசில்லா ஆன்மாக்களை பெற முயற்சித்த மன்னவனுக்கு சிலுவைமரணம் பரிசு. “உங்களுள் பாவம் இல்லாதவன் அவள் மேல் முதல் கல் எரியட்டும்” என்று சொன்னவருக்கு சிலுவை. “ செசாருடையதை செசாருக்கும் கடவுளுக்குறியதை கடவுளுக்கும் செலுத்துங்கள் “ என்று சொன்னவருக்கு சிலுவை. “ ஓய்வு நாளில் ஒன்றுமே செய்யாமல் இருப்பதைவிட நல்லது செய்வது நன்று “ என்று சொன்ன நம் நாயகனுக்கு சிலுவையே பரிசு.
சரி இப்போது நம் வாழ்க்கைக்கு வருவோம். அன்று இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட சிலுவையை மனந்தளராமல் சுமந்தார். சுமக்க முடியாமல் வலுவற்றராக இருந்த போதும் ஏற்றுக்கொண்டார். நடக்கமுடியாமல் நடந்தபோதும் மூன்று முறை விழுந்தபோதும் துவளவில்லை. யாரும் தூக்கிவிடவில்லை. தானே எழுந்தார். தானே நடந்தார். கல்வாரி மலை வரை நடந்தார்.
ஆனால் நமக்கு வரும் சின்ன சின்ன சிலுவையைக்கூட சுமக்கமுடியாமல் “ கடவுளுக்கு கண்கள் இல்லையா? காது இல்லையா? “ என்று கேட்கிறோம். கடவுள் இல்லை என்கிறோம். நமக்கு வரும் சிலுவைகளை துணிவுடன் சுமப்போம். ஒரு காய்ச்சல், தலைவலி வந்தால் கூட மருத்துவரிடம் சென்று குணமாகும் வரை நம் உடல் வேதனையை அடுத்த பாவிக்காக ஒப்புக்கொடுக்கலாமே.
மீண்டும் சொல்கிறோம் “ சிலுவை இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை “ “ என்னைப் பின் செல்ல விரும்புகிறவன் என் சிலுவையை தூக்கிக்கொண்டு என்னை பின் தொடரட்டும் “ என்று சொன்ன தெய்வத்தின் திருச்சிலுவையை அவருக்காக நாம் தூக்குவோமா?
அவர் பட்ட பாடுகளை நம்மைப்பட சொல்லி கேட்கவே இல்லை. அது அவரால் மட்டுமே முடியும். முடிந்தது. அட்லீஸ்ட் சீமோன் தூக்கிய தூரமாவது அவர் சிலுவையை நாம் தூக்குவோமா? தூக்குவோம்