உணவாக வந்த இயேசு..
“ அவள் தலைப்பேறான மகனை ஈன்றெடுத்து துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தினாள் “
லூக்காஸ் 2 : 7
நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.. ஆண்டவர் இயேசு நமக்காக கல்தூணில் கட்டி அடிக்கப்பட்டு, முள்முடி சூட்டப்பட்டு, சிலுவை சுமந்து, சிலுவையில் அறையப்பட்டு பாடுகள் அனுபவித்தாரே அது மட்டும்தான் பாடுகள் என்று.. அது பாடுகளின் சிகரம்.. ஆனால் அதுமட்டும் பாடுகள் அல்ல..
அதே போல ஆண்டவருடைய தாழ்ச்சி ஆண்டவர் சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டபோதோ.. பாவிகள் கைகளினால் அடிபட்டபோதே.. அவமானப்பட்டபோதோ.. மண்ணுலக அரசர்களால் விசாரிக்கப்பட்டபோதே வர வில்லை..
வார்த்தையான சர்வேசுவரனாக உச்ச மகிமையிலும், உன்னத நிலையிலும், சந்தோசத்திலும், நிறைவிலும், உன்னதமான நேசத்திலும் தன் பிதாவோடு இருந்த நிலையை விட்டுவிட்டு மனிதனாக, குழந்தையாக.. அமல உற்பவ தாயிடம் பரிசுத்த ஆவியானவரால் ஜெனித்தாரோ.. அப்போதே ஆண்டவரின் தாழ்ச்சி ஆரம்பமாகி விட்டது..
அந்த அமல உற்பவியின் வயிற்றில் 10 மாதங்கள் இருந்து அந்த தாயின் மூலமாக வந்த உணவை சாப்பிட்டு, தாயின் சுவாசத்தை சுவாசித்து வயிற்றில் தங்கியிருந்தாரே அப்போதே அவருடைய இரண்டாவது தாழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது..
அந்த அமல உற்பவ தாயின் மடியில் அமர்ந்து, தாய் கொடுத்த உணவை உட்கொண்டு, அவரிடம் வளர்ந்து, அந்த தாயிடமும், வளர்ப்பு தகப்பனான புனித சூசையப்பரிடம் நடைபயின்று, கல்வி கற்று அவர்களுக்கு பணிந்திருந்து அவர்களிடம், அவர்களிடம் வளர்ந்து அவர்களோடு ஜெபித்து ஆண்டவர் வாழ்ந்த 30 ஆண்டுகளுமே தாழ்ச்சியின் உச்சம்தான்..
அதுபோல ஆண்டவருடைய பாடுகள் அவர் இந்த பூமியியில் பிறக்கும்போதே ஆரம்பமாகி விட்டது..
அரசாங்க மருத்துவமனையில் கூட ஒரு எளிமையான தொட்டில் இருக்கும்..
அரசருக்கெல்லாம் அரசரான அரசர் விண்ணுக்கும், மண்ணுக்குக்கும் அனைத்திற்கும் அதிபதியான அரசர் சிரிய அல்லது ஒரு ஏழை வீட்டில் கூட அல்ல..
மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில், மாட்டுச்சாணத்தின், மாட்டு மூத்திரத்தின் நாற்றத்தின் மத்தியில், ஓட்டை, ஒடிசைகள் உள்ள கூறைகள் அமைந்த மாட்டுத்தொழுவத்தில் பிறக்கிறார்..மாடுகள் தண்ணீர் குடிக்கவும், தீவணம் உண்ணவும் வைக்கப்பட்ட கழனித்தொட்டியில் பிறந்த உடன் கிடத்தப்பட்டிருக்கிறார்..
அதற்கு முன் அந்த இடத்தை புனித சூசையப்பர் கூட்டி சுத்தம் செய்திருப்பார். அந்த கழனித்தொட்டியையும் முடிந்த அளவு சுத்தம் செய்திருப்பார், அந்த சூழ்நிலையிலும் தேவமாதாவும் சூசையப்பரோடு சேர்ந்து தன்னால் முடிந்த அளவு அந்த இடத்தை சுத்தம் செய்திருப்பார்கள்..
என்ன இருந்தாலும் மாட்டுத்தொழுவம் மாட்டுத்தொழுவம்தான்.. கழனித்தொட்டி கழனித்தொட்டிதான்..
நல்ல செல்வச் செழுப்போடும், சகல வசதிகளும் பெரிய குடும்பங்களில் (மனித பார்வையில்) பிறக்கின்ற குழந்தைகளை இப்படிச் சொல்வார்கள்..
“ அவன்(ள்) பிறக்கும்போதே வெள்ளி கரண்டியோடு பிறந்தான்(ள்)யா”
“ He(She) was born with the silver Spoon”
நம்ம ஆண்டவர் எப்படிப் பிறந்தார்? பிறக்கும்போதே சிலுவையோடு பிறந்தார்..
“ Our God was born with holy Cross “
நிறைய இடத்தில் பார்த்திருப்போம்.. குழந்தை இயேசு கையில் சிலுவையோடு தொட்டிலில் படுத்திருக்கும்.. அது நிதர்சனமான உண்மை..
பிறக்கும்போதே சிலுவை, பாடுகள், எளிமை..
பிறந்த பின்னும் வறுமையான சூழல்..
இது சகலத்திற்கும் அதிபதியான கடவுளின் நிலை..
ஆண்டவர் பிறந்த சூழ்நிலையை நம்மால் எளிதாக கற்பனை செய்து பார்த்துவிட முடியும்.. ஒரு மாட்டுத்தொழுவத்தை எளிதாக நம்மால் கற்பனை செய்து பார்த்துவிட முடியும்..
இந்த காட்சியை நாம் நம் மனக்கண்முன் கொண்டுவந்து ஒரு சில நிமிடங்களாவது தியானிப்போம்..
அதை நினைத்துக்கொண்டே நம்மையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்..
அங்கே அந்த சூழ்நிலையையும்.. அந்த திருக்குடும்பம் ஏற்றுக்கொண்டது..
நமக்கு ஒரு சிறிய கஷ்ட்டம் வந்தாலும் கடவுளுக்கு எதிராக நம் முனுமுனுப்பை ஆரம்பித்து விடுவோம்..
ஆண்டவர் பிறந்த சூழல்.. அந்த காட்சி தியானத்தோடு.. கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..
நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !
சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !
மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !