சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 09

சிறிதும், பெரிதும், கரடும், முரடும், பலவித வடிவமுமான கருங்கல் துண்டுகளை ஒன்றோடொன்று நல்ல சுண்ணாம்புச் சாந்தினால் கலந்து, அஸ்திவாரக் கடைக்கல்லில் போட்டு நிரப்பவே, அவைகள் சேர்ந்து இறுகி, செம்மையாய்க் காய்ந்து, மேலெழும்பும் மாட மாளிகையைத் தாங்கும் பலம் உடைய ஆதாரமாக மாறி அமைந்து விடுகின்றன 

அவ்விதமே கத்தோலிக்கக் குடும்பங்களிலும் மாமியார் மகத்துவம், நாத்தனார் பெருமை, மருமகளின் மட்டும் உற்றார் உறவினரின் பொறாமை, அயலார் வெறுப்பு, பிள்ளைகளின் பிணக்கு, புருஷன் கோபம், மனைவியின் வீம்பு, வியாதியின் வேதனை, வறுமையின் கொடுமை, வேலையாட்களின் தொல்லை, காலையிலோர் இன்பம், மாலையிலோர் துன்பம் இன்றொரு பிறப்பு, நாளையொரு இறப்பு, விருந்தினர் வரவு நினையாததோர் அதிர்ஷ்டம், எண்ணிய கருமம் கைகூடாமல் ஏமாற்றம் போன்ற பல்வேறு சிறிய பெரிய காரியங்கள் யாவும் கடவுள் நேசமும், பிறர் சிநேகம் எனும் சிறந்த சாந்தினால் நன்றாய்க் கலவை செய்யப்பட்டு, *கடவுள் சித்தமே. நமது பாக்கியம்” என்னும் ஒரு பெருங்கல்லாக அமையும், அதன் மேல் எழும்பி நிற்கும் கத்தோலிக்கக் குடும்பம், கருங்கல் மலையின்மீது நாட்டிய அரணை போலும், குன்றின் மேலிட்ட தீபத்தைப் போலும் விளங்கி நிற்கும் 

கத்தோலிக்கக் குடும்பங்கள் இவ்வாறு சீர்பெற்றுச் சிறப்புற்று வாழ்வதற்கு வெகு சுலபமாக வழியுமொன்றுண்டு. அதென்னவெனில் கிறிஸ்து இராஜாவை அந்தக் குடும்பங்களின் இராஜாவாக கத்தோலிக்கர் தங்கள் இல்லங்களில் வெளியரங்க ஆடம்பர கெம்பீரத்துடன் கொலுவிருக்க செய்வதே 

இருதய இராஜாவை கிறிஸ்தவ இல்லங்களில் குடும்ப இராஜாவாக ஸ்தாபித்தல் என்னும் சடங்கு இப்போது தென் இந்தியாவில், அநேக பட்டணங்களிலும், குக்கிராமங்களிலும் பரவியிருக்கிறது என்பது சந்தோஷப்பட வேண்டிய ஒன்று ஆயினும் இந்த அருமையான சடங்கின் உற்பத்தி, நோக்கம் மேன்மை, அதனால் ஏற்படும் பொறுப்புகள், பலன் இவைகளை இன்னும் அநேகர் சரியாய்க் கண்டுபிடிக்கவில்லை என்று கூறுவதற்கு தகுந்த காரணங்களோடு. 

புது வீடு குடி புகுதல், பிள்ளைக்குக் காது குத்துதல் என்னும் சடங்கு களைப் போலவே இதுவும் ஓர் சடங்காக மாத்திரம் ஏற்பட்டு, திரு இருதயப் படமோ, சுரூபமோ பகிரங்கமாய் குடும்ப இராஜாவாக வீட்டில் ஸ்தாபிக்கப்படும் நாளில் அக்கம்பக்கத்தார் பலரை அழைத்து, வந்த விருந்தினர் மன உற்சாகத்துக்காக பல்வேறு பாட்டுகளுடன் இருதய ஆண்டவருக்குத் தோத்திரமான ஒன்றிரண்டு பாடல்கள் பாடி, நாவுக்கினிய சிற்றுண்டிகளும் அருந்தி, சுவையான தேநீர் பருகி, வெற்றிலை போட்டு விருந்தளித்தோன் சுகமே வாழ வேண்டுமென்று சோபனங்கூறி, கடைசியாய் ஏதோ ஜெபமொன்று நிமிஷத்தில் வேகமாக முடித்துக் கூட்டம் கலைந்தால், இருதய இராஜாவான கிறீஸ்து அவ்வில்லத்தில் குடும்ப இராஜாவாகக் கொலுவிருக்க வைத்த சந்தோஷ ஆரவாரச் சடங்கு முற்றுப்பெற்றதாக எண்ணி, அதற்கு மேல் அக்கவலையே அற்றவர்களாய் அசமந்தத்துடன் இருக்கும் குடும்பங்களும் உண்டு. 

அல்லது கிறீஸ்துவைக் குடும்ப இராஜாவாக ஸ்தாபிப்பதற்கு மேற்கூறிய ஆரவாரங்கள் இன்றியமையாதவை என்று தப்பெண்ணம் கொண்டு, அவ்வித ஆடம்பரத்துக்குத் தக்க நிலை தங்களுக்கில்லை என்று வருத்தப்பட்டு அந்த உந்நதச் சடங்கைத் தங்கள் இல்லங்களில் செய்யாமல் விடுபவரும் உண்டு 

ஆனால் இக்கொலுவிருத்தும் சடங்கு மெய்யாகவே இருதய இராஜாவுக்கு மிகவும் பிரியமானதும், அதனால்

குடும்பங்களுக்கு அபரிமிதமான அனுகூலங்கள் கிடைக்க இருப்பதால், அதன் உற்பத்தி, நோக்கம், மேன்மையைப்பற்றி

நாம் சற்றுக் கவனிப்பது அவசியம் அப்படிச் செய்வதால் குடும்பங்களின் இராஜாவுக்கும் மிக்க ஆறுதலளிக்கும்.

தொடரும்...