விசுவாச தூண்களில் ஒருவர்..
நிறைய பேருக்கு சந்தேகமோ.. சிந்தனையோ வந்திருக்கலாம்.. இயேசு சுவாமி ஏன் இந்த மூன்று பேரை மட்டும் முக்கியமான தருணங்களில் தன் அருகில் வைத்துக்கொண்டார் என்று..
இராயப்பர்.. யாகப்பர்.. அருளப்பர் இந்த மூன்று பேரும் எந்த வித சிறு அவ நம்பிக்கை கூட படாமல் இயேசுதான் மெசியா என்று 100 சதவீதம் நம்பினார்கள்.. அதே போல் இயேசு சுவாமியால் எந்த வித வல்ல செயலும் செய்ய முடியும் என்று தளர்வில்லாமல் விசுவசித்தார்கள்..
உதாரணமாக.. புனித இராயப்பர் அறிக்கையிட்டார்..
“ நீர் மெசியா ! உயிருள்ள கடவுளின் மகன் “ – என்று..
புனித யாகப்பரும் அருளப்பரும்..
“ நீர் அரசுரிமையோடு வரும்போது நாங்கள் ஒருவர் உம் வலப்பக்கமும், மற்றவர் உம் இடப்பக்கமும் அமர அருள் புரியும் “ என்று கேட்டனர்..
விசுவாசமும், அன்பும் மிகுந்திருந்ததால் சில வேளைகளில் முந்திரிக்கொட்டடைகள் போல் முந்திக்கொண்டு.. ஆண்டவரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டாலும்.. கடைசி வரை கெத்சமனி வரை ஆண்டவர் தன் அருகில்தான் அவர்களை வைத்திருந்தார்..
ஜெபக்கூடத்தலைவன் யாயிரின் இறந்த மகளை உயிர்ப்பிக்கும்போது.. இந்த மூவர் தவிர மற்ற எவரையும் தன்னுடன் இருக்க ஆண்டவர் அனுமதிக்கவில்லை என்கிறார் மாற்கு நற்செய்தியாளர் ஏன்..?
மேலே உள்ள கேள்விக்கு விடை தரும் சம்பவமாக கீழே உள்ள சம்பவம் நடக்கிறது..
ஆண்டவரின் உருமாற்றம் நிகழ்வு நடக்கிறது.. இந்த மூன்று சீடர்களும் அவர் அருகில் இருக்கிறார்கள்.. அதன் பின் அவர்கள் பேசிக்கொண்டே மலையிலிருந்து ஆண்டவரோடு இறங்குகிறார்கள்.. அவர்கள் மற்ற சீடர்களிடமும், கூட்டத்திடம் வந்ததும்.. பின் வரும் சம்பவம் நடக்கிறது..
அவர்கள் கூட்டத்திடம் வந்ததும், ஒருவன் அவரை அணுகி அவர்முன் முழந்தாளிட்டு,
"ஆண்டவரே, என் மகன்மேல் இரக்கம் வையும். ஏனெனில், அவன் வலிப்பினால் துன்பப்படுகிறான். அடிக்கடி நெருப்பிலும் நீரிலும் விழுகிறான்.
அவனை உம் சீடரிடம் கொண்டு வந்தேன். அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை" என்றான். (மத்தேயு 17 : 14-16)
அதன் பின்பு ஆண்டவருக்கு கோபம் வந்து கீழ்கண்ட வார்த்தைகளை உதிர்க்கின்றார்..
அதற்கு இயேசு, "விசுவாசம் இல்லாத சீர்கெட்ட தலைமுறையே, எதுவரை உங்களுடன் இருப்பேன்? எதுவரை உங்களைப் பொறுத்துக்கொண்டிருப்பேன்? அவனை என்னிடம் இங்குக்கொண்டு வாருங்கள்" என்றார்.
இயேசு அவனைக் கடிய, பேய் அவனை விட்டு நீங்கியது. அந்நேரமுதல் பையன் குணமாயிருந்தான் ( மத்தேயு 17: 17-18)
அதன் பின் ஆண்டவர் விளக்குகிறார்.. உங்களுடைய விசுவாசமில்லாத மன நிலையே நீங்கள் அந்த பேயை ஓட்ட முடியாததற்கு காரணம் என்று சொல்கிறார்..
நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் இருந்து இந்த மூவர் தப்பித்துக்கொள்கிறார்கள்.. “ விசுவாசம் இல்லாதவர்கள் “ என்று ஆண்டவரால் கடிந்து கொள்ளப்படவில்லை..
இயேசு சுவாமியின் மற்ற அனைத்து சீடர்களையும் நாம் நேசிக்கிறோம்.. ஒருவர் நீங்கலாக.. மற்ற எல்லோருமே ஆண்டவர் இயேசுவின் உண்மையான சாட்சிகளாக விளங்கினார்கள்.. வாழ்ந்தார்கள்..
இது சந்தியாகப்பரின் வாழ்க்கைப்பாதையாக இருப்பதால்... அவரைப் பற்றி அதிகமாக கொஞ்சம் அதிகமாக சிந்திக்கிறோம்.. தியானிக்கிறோம்..
இன்னும் அவரைப் பற்றிய பல அருமை பெருமைகள் வர இருக்கிறது..
அவரிடமிருந்து அவரின் பல சிறப்பான குண நலன்களைப் பெற்று ஆண்டவரைப் பின் செல்ல பயன்படுத்துவதற்காகவே..
ஜெபம் : விசுவாசத்தூண்களில் ஒருவரான புனித பெரிய யாகப்பரே ! உம்மைப் போல எங்களுக்கும் ஆண்டவரை கண்டுனற அருள் தாரும் !. ஆண்டவரை உரிமையோடு இறுகப் பற்றிக்கொண்டு அவரை நேசித்து அவரைப் பின் சென்று ஆண்டவரின் கிண்ணத்தில் பருகிய யாகப்பரே ! இந்த விசுவாச பஞ்ச காலத்தில் உம்மைப்போல் உறுதியான வீரமிக்க விசுவாச வாழ்வு வாழ்ந்து ஆண்டவரின் உண்மைச் சாட்சிகளாக விளங்க அருள்தாரும் – ஆமென்..
கடவுளுக்கு சித்தமானால் மீண்டும் வருவேன்.. ஆற்றல் தரும் அருட்துணையோடு..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !