மந்திரவாதிகளையே மனந்திருப்பிய மகா புனிதர் :
வேதகலாபனையின் போது அதாவது புனித முடியப்பர் கொல்லப்பட்ட பின்பு புனித சந்தியாகப்பர் ஊக்கத்துடனும், நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் இயேசுவைப்பற்றி போதிக்கிறார். சந்தியாகப்பரின் மகா தைரியமான வீர விசுவாசமிக்க போதனையால் அநேக மக்கள் மனம் திரும்புகிறார்கள். யூதர்களும் மனம் திரும்புகிறார்கள். ஜெருசலேமின் (ரோமாபுரியின்) முதல் ஆயர் இவரே. திருச்சபையின் தூண்கள் என மதிக்கப்பட்ட புனித யாகப்பர், புனித இராயப்பர், புனித அருளப்பர் ( கலாத்தியர் 2 :9) என்று புனித சின்னப்பர் தன் திருமுகங்களில் சான்று தருகின்றார்.
யூதக்கிறீஸ்தவர்களை தலைமை ஏற்று வழி நடத்துகிறார். பொறாமை மற்றும் கொலை வெறியோடு யூத தலைமைக்குருக்கள், பரிசேயர்களை ஒன்றினைந்து இயேசு சுவாமியை கொலை செய்ய திட்டம் தீட்டியதுபோல் புனித சந்தியாகப்பருக்கு எதிராக பல திட்டங்கள் தீட்டுகிறார்கள். சந்தியாகப்பரின் நெருப்பு போன்ற வார்த்தை போதனையால் அவரை நேரடியாக அனுக பயந்தனர் தலைமைக்குருக்கள். அதனால் பெரிய மந்திரவாதியை வாடகைக்கு அமர்த்தி அவரோடு வாதிட்டு அவரை தோற்கடிக்க முயற்சி செய்கிறார்கள்.
சினிமாவில் நடப்பது போன்ற சம்பவம். பெரிய மந்திரவாதி ஹெர்மோகன்ஸ் வீர வசனம் பேசுகிறான் “ சந்தியாகப்பனிடம் வாதிட நான் போக வேண்டுமா ? என் மாணவர்களே போதும் “ என்று ஒவ்வொரு மாணவனாக அனுப்புகிறான். செல்பவர்கள் எல்லாம் மனம் மாறி இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவர்களாக வருகிறார்கள். கொதித்துவிட்டான் ஹெர்மோகன்ஸ். அவனிடம் இருந்த ஒரு முக்கியமான மந்திரவாதியான பிளேட்டஸ் என்றவனை அனுப்புகிறான். அவனும் மனம் மாறி இயேசு சுவாமியை ஏற்றுக்கொண்டுவிட்டான். வெகுண்டெழுந்தான் ஹெர்மோகன்ஸ். பிளேட்டஸை சந்தித்து திட்டிவிட்டு தன் மந்திர சக்தியால் அவனைக்கட்டிபோட்டு விட்டான்.
அந்த செய்தி நம் சந்தியாகப்பரின் காதுக்கு எட்டியது. விரைந்தார் பிளேட்டசை சந்திக்க. தன் கைக்குட்டையால் பிளேட்டசின் கட்டுகளை அவிழ்க்கிறார் புனிதர். கூடவே ஹெர்மோகன்ஸுக்கு ஒரு கட்டளை ‘ தன்னை வந்து பார்க்கவேண்டும் என்று. அதுதான் சந்தியாகப்பர். பிளேட்டசை காப்பாற்ற அங்கு சென்றவர். ஹெர்மோகன்ஸை தன்னை சந்திக்க வரச்சொல்லுகிறார். இந்த செய்தி ஹெர்மோகன்சுக்கு எட்டுகிறது. வீர வசனங்கள் எல்லாம் பேசிவிட்டு சந்தியாகப்பரிடம் வாதாட செல்கிறான். அவர் ஆழ்ந்த அறிவோடு சொன்ன நெருப்பு போன்ற வார்த்தைகளை அவன் கேட்டு மனம் கலங்கி கிறிஸ்தவனாக திரும்புகிறான். இந்த முறை அவனை வாடகைக்கு அமர்த்தியவர்களுக்கு அதிர்ச்சி. மேலும் ஹெர்மோகன்ஸ் தன்னிடம் இருந்த மந்திர, தந்திர புத்தகங்கள் அனைத்தையும் விற்று அந்த பணத்தை ஏழைகளுக்கு அளித்துவிட்டான். சந்தியாகப்பரின் ஆற்றலைக்கண்டு அந்த யூதக்கூட்டம் அப்படியே மலைத்துப் போனது.
ஜெபம் : புனித சந்தியாகப்பரே உம்மிடம் மந்திரமும், தந்திரமும், துரோகமும் செல்லாது. ஆற்றல் மிகு பாதுகாவலரே. இன்றைக்கும் மந்திர தந்திர சக்திகளை நம்பிக்கொண்டு அதன் பின்னே ஓடும் மக்களும்.அதனால் பாதிக்கப்பட்டு பின் வாடும் மக்களும் இருக்கிறார்கள். ஜாதகம் பார்க்கும் மக்களும் இருக்கிறார்கள். இறைவன் இயேசுவை நம்பும் மக்களுக்கு இவைகள் எல்லாம் தேவையில்லை என்பதை புரியவைத்து அவைகளில் இருந்து அவர்களை காப்பாற்ற உம் வழியாக ஆண்டவர் இயேசுவிடம் மன்றாடுகிறோம்- ஆமென்
மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு..