அமல உற்பவமாக ஜெனித்தவர்..
“ நமது சாயலாகவும், பாவனையாகவும் மனிதனைப் படைப்போமாக; “
“ இவ்வாறு கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச்சாயலாகவே அவர்களைப் படைத்தார். ஆணும், பெண்ணுமாக அவர்களைப் படைத்தார் “
ஆதியாகமம் 1 : 26-27
இந்த உலகில் அமல உற்பவங்களாக படைக்கப்பட்டது மொத்தம் நான்கு படைப்புக்கள்..
ஆதாம்- ஏவாள், சேசு நாதர் சுவாமி- தேவ மாதா, இதில் சேசு நாதர் மட்டும் அமல உற்பவமாக ஜெனித்தவர்..
ஆதாம்- ஏவாளும் அமல உற்பவங்கள்தான் ஆனால் அதே நிலையில் அவர்கள் தொடர்ந்து வாழவில்லை. அலகையின் சூழ்ச்சியாலும், தன்னைப் படைத்த கடவுள் மேல் நம்பிக்கையில்லாததாலும் பாவிகள் ஆனார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்..
அமல உற்பவங்களாக படைக்கப்பட்ட நம் ஆண்டவர் இயேசுவும், மாதாவும் மட்டுமே கடைசிவரை அமல உற்பவங்களாகவே வாழ்ந்தார்கள்.. வாழ்ந்தார்கள் என்று சொல்வதைவிட உண்மையாக மனிதப்பிறவியாக ஜெயித்தார்கள் என்று சொல்வதுதான் சரி..
பாவம் நிறைந்த உலகில் படைக்கப்பட்டமாதிரியே கடைசி வரை அதே பரிசுத்தத்தோடு வாழ்ந்தவர் தேவ மாதா !
அமல உற்பவமாக ஜெனித்து 100 சதவீதம் மனிதனாகவும் ஜெனித்தமாதிரியே அதே பரிசுத்தத்தோடு உலகில் கடைசி வரை வாழ்ந்தவர் நம் சேசு கிறிஸ்து..
உலகில் நமக்கு நிறைய சவால்கள் உள்ளன..
சாவான பாவ சூழல் மட்டுமல்ல கற்பு ரீதியான பாவம் மட்டுமல்ல (இதுவும் சாவான பாவமே) வேறு எத்தனையோ பாவங்கள் உலகில் இருக்கிறது..
ஏன் கடவுளை நம்பாமல் விசுவசிக்காமல் இருப்பது கூட பாவம்தான்.. அப்புறம் கடவுளின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் இருப்பது, அசட்டையோடு இருப்பது, தற்புகழ்ச்சி, ஆணவம், அகங்காரம், தான் சிறந்தவர் மற்றவர் தாழ்ந்தவர் என்ற எண்ணம், மற்றவர்களைத் தீர்ப்பிடுவது, சூழ்நிலை கிடைத்தும் உதவி செய்யாமல் இருப்பது, பயனற்ற வார்த்தைகளைப் பேசுவது, நேரத்தை வீணாக்குவது என்று சின்ன சின்ன அல்லது பெரிய பாவங்கள் ஏராளம்..
அமல உற்பவங்களான ஆண்டவர் சேசுவுக்கும், தேவ மாதாவுக்கும் கற்பு நெறி தவிர மற்ற பிற பாவங்கள் செய்ய அவர்களுக்கும் இந்த உலகில் சூழ் நிலை இல்லாமல் இல்லை..
( கற்பு சார்புடைய பாவங்களை அவர்களால் செய்ய முடியாது ஏனென்றால் அவர்கள் அமல உற்பவங்கள்)
முதலில் மாதாவை எடுத்துக்கொள்வோம்..
“ நான் கடவுளுக்கே தாயானவள் “ என்று எளிதாக தற்பெருமை கொள்ளவும், தற்புகழ்ச்சி பேசவும் சரியான காரணங்கள் இருக்கிறது.. ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.. தன்னுடைய ஆழ்ந்த தாழ்ச்சியால் அதை முறியடித்தார்கள்..
தான் அமல உற்பவமாகப் படைக்கப்பட்டதால் மற்றவர்களை குறைவாக ஏதோ தாழ்ந்தவர்கள் போல நினைத்திருக்கலாம்.. அதையும் அவர் செய்ய வில்லை..
ஆண்டவருடைய உயிர்ப்பிற்குப் பின் ‘நான்தான் ஆண்டவருடைய தாய் அதனால் என்னிடம் கேட்டுத்தான் எதுவும் செய்ய வேண்டும்’ என்று புனித இராயப்பருக்கு உத்தரவு போட்டிருக்கலாம்..
அதை மாதா செய்யாமல் புனித இராயப்பருக்கும், திருச்சபைக்கும் கீழ்ப்படிந்து நடந்தார். திருப்பலியில் பங்கேற்று குருக்களான அப்போஸ்தலர்களிடம் முழங்காலில் நின்று நாவில் திவ்ய நற்கருணை வாங்கினார்..
( அப்படி சொன்னால் அதை இராயப்பர் கண்டிப்பாக கேட்பார்.. மேலும் மாதா அப்படிச்சொல்லாதபோதும் திருச்சபையை வழி நடத்தவும், முக்கியமான சூழ்நிலையிலும் புனித இராயப்பர் தேவ மாதாவைக் கலந்து ஆலோசிக்காமல் இருந்ததில்லை.. அவரிடம் ஜெப உதவியும் கேட்க தவறியதில்லை..)
மேலும் மாதாவுக்கு புதுமை செய்யும் ஆற்றலை பிதா கொடுத்திருந்தும் அவர் பூமியில் வாழ்ந்தபோது அதைப் பயன்படுத்தியதே இல்லை..
பாருங்கள் எத்தனை தாழ்ச்சி எத்தனை பரிசுத்தம்..
கடவுளுக்கு எதிராக ஒரு சிறிய முனுமுனுப்போ..ஏன் ஒரு சிறிய சிந்தனை கூட செய்யாமல் இருந்தவர்தான் நம் தேவ மாதா..
சேசு சுவாமிக்கு சொல்லவே வேண்டாம்..
மாட்டுக்கொட்டிலில் பிறப்பு, எகிப்தில் அனாதை வாழ்வு, வீட்டில் வறுமை, அப்பாவின் தொழிலை செய்ய வேண்டிய நிலைமை, ஓய்வே இல்லாத நற்செய்திப்பணி, தலைமைக்குருக்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள் ஏற்படுத்திய பிரச்சனைகள், இடையூறுகள், ஏச்சுக்கள், பேச்சுக்கள் கடைசியாக மிக அவமானமாக, கேவலமாக நடத்தப்பட்டு மிகக்கொடிய சிலுவை மரணம்.. இது ஒரு சூழல்..
புதுமை செய்வதால் கிடைத்த புகழ் ! ஏன் நம்ப முடியாத புதுமைகளைச் செய்ததால் கிடைத்த பெயர், புகழ், கிடைத்த மக்கள் வெள்ளம், எப்போதுமே அவரைச் சுற்றி வந்த மக்கள் கூட்டம், நோயாளிகள், அவர் சீடர்கள், பிதாவின் நேரடியான வெளிப்படுத்தும் குரல், பரிசுத்த ஆவியானவர் வருகை, உருமாற்றம், தாவீதின் மகனுக்கு ஓசன்னா! என்ற புகழ் பாடல் என்று எத்தனையோ மகிமைகள், புகழ் மொழிகள், பெரிய பெரியவர்கள் எல்லாம் தன்னை உணவருந்த வீட்டிற்கு அழைத்தல் என்று புகழான, மகிமையாக வாழ்க்கை ஒருபுறம்..
மேலே உள்ள கடினமான வாழ்க்கைக்கும் அவர் கலங்கவில்லை.. இடறல்படவில்லை.. நம்பிக்கை இழக்கவில்லை..
அடுத்த மகிமையான வாழ்க்கைப்பார்த்து அதற்கும் அவர் ஆசைப்படவில்லை.. மேலும் புகழ் ஈட்டவில்லை.. எவ்வளவோ செய்திருக்கலாம்.. தன்னை உயர்ந்தவராக காட்டியிருக்கலாம்.. ஏன் அவரை அரசராக்க வந்த வாய்ப்பைக் கூட அவர் பயன்படுத்தவில்லை..
ஏன்.. ? இந்த இடத்தில் ஆண்டவர் இயேசுவையும், மாதாவையும் நாம் தியானிக்க வேண்டும்.. சிந்திக்க வேண்டும்..
ஏனென்றால் அவர்கள் கடவுளையும் அவர் விருப்பத்தையும் தவிர வேறு எதையுமே தேடவில்லை.. நாடவில்லை..விரும்பவில்லை..
இவர்களே உன்னதமான அமல உற்பவங்கள்..
முழுமையான மனிதர்கள்..
மனித வாழ்க்கையில் 100% வெற்றி பெற்றவர்கள்..
இது எப்பேற்பட்ட சாதனை..
அவர்களால் அதை எப்படி செய்ய முடிந்தது..?
ஏன் நம்மால் அது முடியவில்லை..
இந்த சிந்தனைகளோடு கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்
நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !
சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !
மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !