புனிதர்கள் தேவை ( Saints wanted)
“ என்னைப் பின்செல் “ மத்தேயு 8 : 22
இப்போதைய கட்டாயத்தேவை புனிதர்கள். புனிதர்கள் நிறையபேர் இவ்வுலகில் வாழ்ந்தால், அவர்கள் பொறுட்டு கடவுள் உலகை அழிக்கமாட்டார். ஆகையால் புனிதர்கள் தேவை. அதற்காக நாம் அதிகம் ஜெபிக்கவேண்டும்.
ஆபிரகாம்: ஆண்டவரே, அருள் கூறும். அடியேன் இன்னும் ஒருமுறை மட்டும் கேட்கிறேன். ஆண்டவருக்கு கோபம் வேண்டாம். அவ்விடத்தில் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால் என, ஆண்டவர்: அந்தப் பத்துப் பேருக்காக அந்நகரை அழிக்க மாட்டோம் என்றார். ஆதியாகமம் 18:32
ஆண்டவர் சொதோம், கொமாராவை அழிக்கும் முன், ஆபிரகாம் அம்மக்கள் மேல் இரக்கம் கொண்டு 50 நீதிமாங்களில் ஆரம்பித்து 10 நீதீமான்கள் இருந்தாலவது அந்நகரங்களை அழிக்க மாட்டீரா? என்று பரிந்து பேசி ஜெபிக்கிறார்.
இதைத்தான் மாதாவும், புனிதர்களும் நமக்காக பரிந்து பேசி ஜெபிக்கிறார்கள். புனிதர்கள் வழி ஜெபங்களை பரிகசிக்கும் பிரிவினை சபையினர் ஆபிரகாமின் இந்த பரிந்துரை ஜெபத்தையும் பரிகசிப்பார்களோ?
ஆண்டவர் ஆபிரகாமோடு இருந்தார். ஆபிரகாமும் “ எவன் செத்தா எனக்கென்ன “ என்று இருந்திருக்கலாம் அல்லவா? அவர்களுக்காக பரிந்துரைக்க என்ன அவசியம் வந்தது. கடவுளின் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள். ஆபிரகாமும் அப்படித்தான் இருந்தார்.
சரி இப்போது புனிதர்களின் தேவைக்கு வருவோம். கடைசியாக நம்மிடையே நடமாடும் புனிதையாக வாழ்ந்து வந்தவர் அன்னை தெரசா. இப்போது தஞ்சாவூரில் ஆண்டவரின் திருக்காய வரம் பெற்று வாழ்ந்து வரும் அருட்சகோதரி ரோஸி நமக்கு ஒரு ஆறுதல். ஆனால் காணாது. நிறைய புனிதர்கள் வேண்டும். அவர்கள் நமக்காகவும், உலகத்திற்காகவும் ஜெபிக்க வேண்டும்.
ஏன் புனிதர்களாக நாம் வாழக்கூடாது? வாழ முயற்சி செய்யக்கூடாது ? எத்தனையோ புனிதர்கள் வாழ்க்கை வரலாற்றை பார்த்திருக்கிறோம். படித்திருக்கிறோம். குருக்கள், அருட்சகோதரிகள் மட்டுமல்ல சாதாரண பொது நிலையினரும் புனிதர்களாக மாறி உள்ளார்கள். குடும்ம வாழ்க்கை வாழ்ந்தவர்கள் புனிதர்களாக மாறி உள்ளார்கள். ஏன் நம்மால் முடியாது.
“ தாழ்ச்சி, தூய்மை, எளிமையோடு ஆண்டவர் இயேசுவின் சிலுவையை சுமந்தால் போதும்; அவரின் சிலுவைப்பாடுகளை நம் அன்றாட கடமைகளோடு சேர்த்துக்கொண்டால் போதும். நமக்கு வரும் துன்பங்களை, அசவுகரீகங்களை முனுமுக்காமல் அமைந்த மனதுடன் ஏற்று ஒப்புக்கொடுத்தால் போதும்” நாமும் புனிதர்கள்தான்.
இயேசுவை நாம் பின் செல்ல வேண்டும். அன்று அவர் சீடர்களைப்பார்த்து கேட்டதுபோல் நம் ஒவ்வொருவரையும் பார்த்து ஓயாமல் கேட்கிறார்,“ என்னைப்பின் செல் “ என்று. ஆனால் அவர் குரல்தான் நம் ஆன்மாவுக்கு கேட்பதில்லை. கேட்டாலும் நாம் அசட்டை செய்கிறோம். நாம் எப்போது கடவுளின் குரலை, அழைப்பை, பேச்சை கேட்க ஆரம்பிக்கிறோமோ அப்போதே நம்மில் மாற்றங்கள் நடை பெற ஆரம்பித்துவிடும். ஏன் அவர் குரலை கேட்க வேண்டும் என்ற ஆவல் நம்மிடம் வந்தாலே போதும் நாமும் புனிதர்களாகிவிடுவோம்.
சுருக்கமாகச் சொன்னால் நாம் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்ந்தாலே புனிதர்கள் ஆகிவிடலாம். வெறுப்பு, பகைமை, பொறாமை, பாவம் இவைகள் இல்லாமல் “தாழ்ச்சி, கீழ்ப்படிதல், தூயமை, பிறறன்பு, தெய்வீக அன்பு” இவற்றால் பற்றி எரிந்தாலே போதும்.
சரி நாமும் புனிதர்கள் ஆக ஜெபிப்போம். மேலும் இந்த உலகத்தில் இப்போது நமக்கு நிறைய புனிதர்கள் கிடைக்க ஜெபிப்போம். அவர்கள் நமக்காக ஜெபிப்பார்கள். நாமும் ஒருவர் ஒருவரை நேசிப்போம்; ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்போம்.
இந்த மாற்றங்கள் மட்டுமே திவ்ய பாலனை நம் உள்ளத்தில் பிறக்க வைக்கும். புற மாற்றங்கள் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட வேண்டும். அக மாற்றமே முதலாவதாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அதற்காக ஜெபிப்போம்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !