துன்பம் சிறந்த தயரிப்பு...
கடவுள் தம் தூதரை மும்முறை அனுப்பி மூன்று குழந்தைகளையும் தயாரித்த பின், அவர்களை துன்பத்தால் மேலும் தகுதியுள்ளவர்களாக்க சித்தங்கொண்டார்.
வானவனின் வருகைக்குப் பின் அவர்கள் முன்பு போல் இல்லை. முன்போல அவர்கள் இருக்கவும் முடியாது. உலகத்தின் வரலாற்றையே மாற்றக் கூடிய மாபெரும் நிகழ்ச்சிகளாக அல்லவா சம்மனசானவரின் காட்சி முதல் படியாக அமைந்திருந்தது !. அப்படி ஒரு நிகழ்ச்சிக்குப் பின் இந்த உலகமும் முன்பு போல் இருக்க முடியாது. அக்காட்சியைக் கண்ட உள்ளங்களும் முன்போல் இருப்பது கூடாத காரியம்.
மரிய ரோஸாவின் குடும்பத்தில் பல இன்னல்கள் ஏற்பட்டன. அவள் கணவனின் போக்கு திருந்துவதாக இல்லை. ஏற்பட்ட கடனைத் தீர்க்க அக்குடும்பத்திற்கென இருந்த கொஞ்ச நிலங்களும் ஒவ்வொன்றாக விற்கப்பட்டன. மூத்த பெண்மக்கள் இருவரும் திருமணமாகி சென்று விட்டனர். அடுத்த இரு பெண்களையும் மரிய ரோஸா மற்றவர்களின் வீடுகளில் கூலி வேலை செய்ய அனுப்ப வேண்டியதாயிற்று. தந்தையின் கவலையற்ற போக்கினால் வெறுப்படைந்த மகன் மனுவேல் விவசாயத்தை விட்டு பட்டாளத்தில் சேர்வதற்குப் பெயர் கொடுத்துவிட்டான்.
மருத்துவ தேர்வு மட்டும்தான் நடைபெற வேண்டியிருந்தது. அதில் அவனுக்கு வெற்றி கிடைத்துவிட்டதால், உடனே போர்முனைக்குப் போக தயாராகி விட்டான். மிகக் கடுமையாக நடந்து கொண்டிருந்த முதல் உலகப்போரில் உயிரழிந்த வாலிபர்கள் பற்றியும், அங்கவீனமடைந்த இளம் வீரர்கள் பற்றியும் தினமும் செய்திகள் வந்தன. அங்கே, இங்கே அந்த வீட்டுப் பையன் இறந்தான். அந்த வீட்டு இளைஞன் காயப்பட்டான் என்று கேள்விப்பட்ட பாமர மக்கள் மிகக் கவலையடைந்தனர். இந்நேரம் பார்த்து, தன் மகன் மனுவேல் போருக்குச் செல்ல பெயரும் கொடுத்து விட்டான். அவனைத் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை என்ற பெரும் துயரம் மரிய ரோஸாவைப் பற்றிக் கொண்டது. வீட்டில் ஒரு அமைதியில்லை. வறுமை தாண்டவமாடியது.
ஒரு நாள் மாலை, தன் பிள்ளைகளெல்லாம் இப்படித் தன்னைத் தவிக்க விட்டுப்போக நேரிடும் என்று நினையாத அத்தாயுள்ளம் கலங்கியது. பெண்மக்களோ தன்னிடமில்லை. அவர்கள் வழக்கமாக அமரும் இடங்கள் வெற்றிடங்களாகக் காட்சியளிக்கின்றன. மனுவேலும் நினையாத வேளை சென்று விடுவான். கணவனுக்கோ எதிலும் கவலையில்லை. அவளால் அதற்கு மேலும் தாங்க முடியவில்லை. “ ஆண்டவரே ! இவ்வீட்டின் மகிமையெல்லாம் எங்கே போய்விட்டது? “ என்று சொல்லி ஓவென்று அழது விட்டாள். மனுவேல் அந்த அழுகைக் குரலைத் தாங்க முடியாமல் அவனும் அழுதான். லூசியாவின் நிலயோ மிகப் பரிதாபம். “ அன்று உண்ட இரவு உணவைப் போல் துயரமானது வேறு ஒன்று இருந்ததில்லை “ என்று பின்னாளில் கூறுமளவுக்கு வேதனையும், துயரமும் நிறைந்திருந்தது அந்தக் காட்சி. அவளும் தாயுடனும், தன் அண்ணனுடனும் சேர்ந்து அழுதாள். அவளால் வேறு என்ன செய்ய முடியும்?.
அன்று முதல் மரிய ரோஸாவின் உடல் நோய்வாய்ப்பட்டது. அவ்ளால் வீட்டு வேலைகளைக் கூட செய்ய முடியவில்லை. மிகவும் மெலிந்து தள்ளாடினாள். மருத்துவர் மாற்றி மருத்துவர் மருந்து பார்த்தும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை.
லூசியா எல்லாவற்றையும் கவனித்து வந்தாள். வீட்டின் நிலையும், குறிப்பாக அவள் தாயின் கவலைக்கிடமான நிலையும் அவள் உள்ளத்தில் வேதனையைப் பெருக்கின. அடிக்கடி அழுவாள். அவளைப் பார்த்து பிரான்சிஸும், ஜஸிந்தாவும் அழுவார்கள்.
இப்படியிருக்கையில் பிரான்சிஸின் அண்ணன் ( போர் முனைக்குச் சென்றிருந்தவன்) இறந்து விட்டான் என்ற செய்தி கிடைத்தது ! மார்ட்டோ குடும்பம் துயரக் கடலுள் ஆழ்ந்தது. பிரான்சிஸும், ஜஸிந்தாவும் அதிகம் அழுதனர்.
பாவம், பிஞ்சு உள்ளங்கள் ! மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்து இருந்ததால் ஒருவருடைய வேதனையை மற்றவர்களும் அனுபவித்தார்கள்.
பிரான்சிஸின் அண்ணன் இறந்தான் என்று தவறுதலாகச் சொல்லப்பட்டது. அவன் இறக்கவில்லை என்பது பல நாட்களுக்குப் பிறகே தெறிய வந்தது.
அவர்களுடைய துயர நாட்களில் லூசியா, பிரான்சிஸ், ஜஸிந்தா மூவரும் வழக்கம்போல் ஆடு மேய்க்கச் சென்று வந்தார்கள். ஆனால் கோவா தா ஈரியா அவர்களுடைய இளஞ்சிரிப்பால் எதிரொலிக்கவில்லை. ஏதோ ஒன்று அவர்களுடைய கலகலப்பை நிறுத்தி விட்டது. ஆயினும் ஒரே மவுனமாக முகம் வாடிப் போகாத வண்ணம், “ ஒரு பாட்டுப் பாடி அபிநயம் செய்வோம்” என்று லூசியா கூறுவாள். ஆனால் அவர்கள் முயன்றாலும் பாட்டிலும் உயிர் இராது. அபிநயமும் வராது. புறங்கையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ஜஸிந்தா ஆட முயற்சி செய்வாள். இடையில் அது நின்றுவிடும்.
மரணத்தின் வாயில் அகப்பட்டுக்கொண்ட ஓர் உலகில் தாங்கள் வாழும் உணர்வு அவர்களிடம் ஏற்பட்டிருந்தது. துயரம் என்றால் என்னவென்று தெரியாத இச்சிறு குழந்தைகள் வேதனையின் கூர்மையை எப்படியோ உணர்ந்தனர். அப்போதுதான் காட்சியில் தோன்றிய வானவரின் வார்த்தைகள் அவர்களுக்குத் தெளிவாய்ப் புலப்பட்டன :
“ ஆண்டவர் உங்களுக்கு அனுப்பவிருக்கும் துன்பங்களை அமைந்த மனதோடு ஏற்று தாங்கிக்கொள்ளுங்கள் “ என்று அவர் கூறியிருந்தார். குழந்தைகள் மூவரும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டனர். தங்கள் வயதுக்கு மிஞ்சிய நுட்ப உணர்வோடு ஆண்டவரால் அனுப்பப்பட்ட இத்துன்பங்களை அமைதியுடன் ஏற்று ஒப்புக்கொடுத்தார்கள். ஏழு வயது சிறுமி ஜஸிந்தா,
“ என் தேவனே, இந்தத் துன்பங்கள், பரித்தியாகங்கள் எல்லாவற்றையும் உமக்குத் தருகிறோம். இது பாவிகள் மனந்திரும்பும்படி பரிகாரமாக இருக்கட்டும்” என்று அடிக்கடி கூறி வந்தாள் !.
அது 1917-ம் ஆண்டின் முதல் பகுதி. இடைத்தொழில் செய்த அச்சிறு கூட்டத்தில் ஒருவித அமைதியும், மவுனமும் நிலவியது. அவர்கள் இருதயங்கள் என்னவெல்லாம் நினைத்ததோ ! ஒரு சிறு இருதயம் எவ்வளவு தனிமையானது ! யார்தான் அதன் ஆழங்களை அறிய முடியும். இந்நிலையில் அவர்கள் வானவரின் வருகைப் பற்றியும், அவர் ஜெபங்கள் கற்றுக் கொடுத்தது பற்றியும், அற்புதமாக நற்கருணை வழங்கியது பற்றியும் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
“ போர்வை போர்த்திய ஆள் “ என்று கேலி பேசியவர்களிடம் தூதரைப் பற்றிப் பேச லூசியா விரும்பவில்லை. தூதர் வந்த விசயம் மூவருக்கும் மட்டுமே தெறிந்த இரகசியமாகவே இருந்தது. அவர்களைத் தயாரிக்க சர்வேசுவரன் அனுப்பிய துன்பங்களும் அவர்களைப் பேசவிடாதபடி தடுத்தன.
நன்றி : பாத்திமா காட்சிகள் நூல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள Ph. 0461-2361989, 9487609983, 9487257479
இந்தச் சிறுமியர் வாழ்க்கை கண்டிப்பாக நம் வாழ்க்கையை பாதித்தாக வேண்டும்.. (இந்த சின்னஞ்சிறு வயதில் அவர்கள் துன்பங்களை கையாளும் விதம்.. பக்குவம்... நம்மில் பல பெரியவர்களுக்குக் கூட இல்லை..)அதே போல் இந்த பாத்திமா காட்சிகள் நம் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வந்தே தீரும்.. மாதாவை நேசித்தால், நம் சர்வேசுவரனை நேசித்தால் அவருக்கு நாம் எதாவது செய்ய வேண்டும்..கொடுக்க வேண்டும் என்று விரும்பினால்.. மாற்றம் தானாக வர ஆரம்பித்திருக்கும்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !