13-ம் பகுதியின் தொடர்ச்சி..
“ ஏனெனில் அவர் வருகின்றார்: பூவுலகை ஆட்சி செய்ய வருகிறார், பூவுலகை அவர் நீதியுடன் ஆட்சி செய்வார் : மக்களை அவர் தம் சொல்லுறுதியால் ஆள்வார். “
சங்கீதங்கள் 95 : 13
நாம் ஏற்கனவே பார்த்தோம் நம் இயேசு ஆண்டவர் அமல உற்பவமாக ஜெனித்திருந்தாலும், நம் பரிசுத்த தேவ மாதா அமல உற்பவமாக உற்பவித்திருந்தாலும் கற்பு எதிரான பாவங்கள் தவிர்த்து மற்ற அனைத்து பாவங்கள் செய்ய வாய்ப்புள்ள சூழல்கள் அவர்களைச் சுற்றி இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்தது..
நம் இயேசு ஆண்டவர் பிறந்ததே நமக்காக இறக்கத்தான்.. அவர் இந்த உலகில் பிறந்த நோக்கம் ஒன்றே ஒன்றுதான்..
பாடுகள் பல படவேண்டும், மனுக்குலத்தால் புறக்கணிக்கப்படு கல் தூணில் அடிக்கப்பட்டு, முள் முடி சூட்டப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மனுக்குலத்தை மீட்கவேண்டும். இடையில் நற்செய்திப் பணி செய்து, குருத்துவத்தையும், திருப்பலியையும் ஏற்படுத்தி திருச்சபையை ஸ்தாபித்து நற்செய்தியை உலகம் முழுவதும் அறிவித்து உலகம் முடியும்வரை தொடர்ந்து ஆன்மாக்களை நரகத்திலிருந்து மீட்டு தன்னுடைய, தன் தந்தையின் உறைவிடமான மோட்சத்திற்கு நம்மை அழைத்து செல்வது ஒன்றே அவர் நோக்கம்..
ஆண்டவர் இயேசு பாவ சூழ்நிலைகளை எப்படி மேற்கொண்டார் என்றால்,
தான் எதற்காக இந்த பூமிக்கும் வந்தோம், தனக்கு என்ன வேலை என்ற விசயத்தில் மிகவும் தெளிவாக இருந்தார்..
தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதே தன் வேலையாகக் கொண்டிருந்தார்..
அதனால்தான், தான் வாழ்ந்த இந்த பூலோக வாழ்க்கையில் மானிட ஜீவியத்தில் தன் விருப்பப்படி அல்ல தன் தந்தையின் விருப்பப்படி மட்டுமே வாழ்வது என்று தீர்மானித்தார். அதை மட்டுமே செய்தார். தன்னையும், தன்னுடைய வாழ் நாட்களையும் முழுவதுமாக தந்தையிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு அப்பாவின் திருவுளத்தை நிறைவேற்றுவது மட்டுமே தன் வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டார்.
அதனால்தான் பல முறை இப்படி பேசுவார்..
“ உங்களுக்குத் தெரியாத உணவு ஒன்று எனக்குள்ளது “
“ என்னை அனுப்பினவரின் விருப்பத்தின்படி நடந்து, அவரது வேலையைச் செய்து முடிப்பதே என் உணவு “
அருளப்பர் 4 : 32 & 34
மேலும் தன்னுடைய பாடுகளை அறிவித்தார்.. அந்த நேரத்தைக் குறித்து பேசினார்..
அதை எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு கடிவாளம் போடப்பட்ட குதிரையைப் போல வாழ்ந்தார்..
பாதையும், பயணமும் சீராக ஒரே நேர்கோட்டில் செல்ல வேண்டும் என்றால் அந்த கடிவாளம் அவசியம்..
மற்றவகள் தனக்குத் தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டார்.. தன் தந்தையின் திருவுளம் தவர மற்றவைகள் எல்லாம் தனக்குத் தேவையில்லாதவைகள் என்று ஒதுக்கி விட்டார்.
அப்படி இருந்ததால் மட்டுமே தன் தந்தையின் திருவுளத்தை செவ்வனே நிறைவேற்றி.. அதை இன்னும் ஆழமாக சொல்லவேண்டும் என்றால் தன் வாழ்க்கை முழுவதுமே பாடுகள் மட்டும் என்பதையும், அதை மனுக்குலத்தின் கடந்த, நிகழ், எதிர்கால பாவத்திற்கு பரிகாரமாய் செய்ய வேண்டும், ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்..
அதனால்தான் அவரால் வாகை சூட முடிந்தது..
தேவ மாதாவை எடுத்துக்கொள்வோம்..
பிறக்கும் முன்னே கடவுளுக்கான அர்ப்பணம், அமல உற்பவியாக பிறப்பு, மூன்றே ஆண்டுகளில் கடவுளின் ஆலயத்தில் அர்ப்பணிப்பு மற்றும் பணி , மூன்று வயது முதல் இளமைப் பருவம் வரை ஆலயத்திலே பணி, அங்கே தன் கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணிப்பு..
அதன் பிறகு கன்னியாகவும், கடவுளுக்கு தாயாகவும் அழைப்பு. மீட்புத்திட்டத்தில் உடன் பணி. கடவுள் மகனான தன் மகனின் பாடுகளில் பங்கேற்க வேண்டும், அதுவும் அவர் வாழ்நாள் முழுவதும் பங்கேற்க வேண்டும்.. அதுவும் பாடுகளின் சிகரமான கல்வாரியில் மகனோடு சேர்ந்து பாடுபட்டு, அதை ஒப்புக்கொடுத்து, தானும் அவரோடு அந்த வேதனையை அனுபவித்து இந்த உலகம் மீட்கப்பட உழைக்க வெண்டும்..நற்செய்திப் பணி செய்ய வேண்டும்..
தன் குமாரனால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சபையை உடனிருந்து வழி நடத்தவேண்டும், அப்போஸ்தலர்களை வழி நடத்த வேண்டும், முதல் கிறிஸ்தவர்களை வழி நடத்த வேண்டும், அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் முக்கியமாக அவர்களோடு உடனிருக்க வேண்டும்.. இந்த உடனிருத்தல் மிக மிக முக்கியமான ஒன்று..
மாதா முக்கியமாக என்ன செய்தார்கள் என்றால் தன் வாழ்க்கையை கடவுளோடு, கடவுளுக்குள், கடவுளுக்காக, கடவுளைச் சுற்றி மட்டும் இருக்குமாறு அமைத்துக் கொண்டார்கள்..
அவர்களும் கடவுள் கடவுள் சார்ந்தவை என்ற கடிவாளத்தை தனக்குப் போட்டுக் கொண்டார்கள்..
நம் ஆண்டவரான இயேசு சுவாமி தன் தந்தையின் திருவுளம், பாடுகள் என்ற கடிவாளத்தைப் போட்டுகொண்டார்கள்..
அதனால்தான் அவர்களால் ஜெயிக்க முடிந்தது..
பார்வையும், பாதையும், பயணமும், நேராக இருந்தது அது சீராக இருந்தது அதோடு அது நேர்மையாகவும், தூய்மையாகவும் இருந்தது..
அதனால் இருவருமே மிகவும் ரிஸ்கான இந்த மனித பிறவியை வென்று சாதித்துக் காட்டினார்கள்..
நாமும் இது போன்ற கடிவாளத்தைப் போட்டிருக்கிறோமா?
நம்முடைய பார்வையும், பயணமும் நேராக, சீராக, நேர்மையானதாக, பரிசுத்தமானதாக இருக்கிறதா?
நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !
சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !
மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !