அன்னையின் அத்த்னைக் காட்சிகளையும் நீங்கள் பார்த்துவிட்டீர்கள்... இப்போது நாம் பார்க்க இருப்பது.. அன்னையின் காட்சிகளின் முக்கிய செய்திகள் மற்றும் காட்சிக்குப்பின் குழந்தைகளின் நிலை... இவற்றை இனி வரும் பகுதிகளில் பார்க்க இருக்கிறோம்..
1917- மே மாதம் 13 அன்னையின் காட்சியின் ஒருபகுதி.. மற்றும் தொடர்ச்சி..
மீண்டும் நம் அன்னை பேசினார்கள்:
“ கடவுளை நோகச் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்பும்படி மன்றாட்டாகவும் அவர் உங்களுக்கு அனுப்ப விரும்பும் எல்லாத் துன்பங்களையும் அவருக்கு ஒப்புக்கொடுக்க நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்கள்.
“ ஆம், விரும்புகிறோம் “ என்று மூவர் சார்பிலும் லூசியா பதிலளித்தாள்.
“ அப்படியானால் நீங்கள் அதிகம் துன்பப்பட நேரிடும். ஆனால் கடவுளின் வரப்பிரசாதம் உங்களைத் தேற்றும்.“ என்று கூறியபடி தேவ அன்னை தன் கரங்களை விரித்து அக்குழந்தைகள் மீது ஒரு தெய்வீக ஒளியை பாயவிட்டார்கள். அந்த ஒளி எவ்வளவு பிரகாசமுடையதாய் இருந்தது என்றால், அவர்களுடைய உள்ளத்தையும், ஆன்மாவையும் ஊடுறுவிச் சென்று அவர்கள் தங்களையே கடவுளில் காணச்செய்தது.
லூசியா கூறுகிறாள்:
“ அவ்வொளி எங்கள் இருதயங்களின் ஆழங்களையும் ஊடுறுவிச் சென்றது. எங்களையே நாங்கள் அவ்வொளியாய் இருந்த கடவுளில், கண்ணாடியில் காண்பதை விட தெளிவாகக் காணச்செய்தது. மேலும் ஒரு அந்தரங்க ஏவுதல் எங்களுக்கு கொடுக்கப்பட, நாங்கள் முழங்காலில் விழுந்து,
“ ஓ மிகவும் பரிசுத்த தமத்திருத்துவமே, உம்மை ஆராதிக்கிறேன்., என் தேவனே, என் தேவனே, மிகவும் பரிசுத்த திவ்ய நற்கருணையில் உம்மை நேசிக்கிறேன் “ என்று எங்கள் இருதயத்தில் திரும்ப திரும்ப சொன்னோம்.
குழந்தைகள் இவ்வாறு ஜெபித்து முடியும் வரை தேவ அன்னை சற்று நேரம் காத்திருந்தபின் அவர்களைப்பார்த்து:
“ உலகிற்கு சமாதானம் பெற்றுக்கொள்ளவும், யுத்தம் முடிவடையவும், ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லுங்கள்.” என்று கூறி கிழக்கு திசையில் சூரிய ஒளியுடன் கலந்து, “ எல்லையற்ற தொலைவில் “ மறைந்தார்கள்.
குழந்தைகள் மூவரும் அத்திசையைப் பார்த்துக்கொண்டே நெடுநேரம் நின்றார்கள். ஓர் ஆழ்ந்த பரவசம் அவர்கள் மீது படிந்திருந்தது. மவுனமாக சிந்தனையின் வசப்பட்டே இருந்தார்கள். ஆயினும் தேவ தூதனைக் கண்டபின் அவர்கள் உணர்ந்த பலவீனம் இப்போது அவர்களிடம் காணப்படவில்லை. ஒருவித அமைதியையும், விசாலமான மகிழ்வையும், பளுவற்ற தன்மையையும் அன்னையின் காட்சி அவர்களுக்குக் கொடுத்திருந்தது.
“ ஆ! அந்த அம்மா எவ்வளவு அழகு ! “ என்று ஜஸிந்தா இடைக்கிடையே கூறுவாள். அன்னையின் தோற்றம் ஒரு தாயின் அன்புடனும் சொல்லி விளக்க முடியாத அழகுடனும் இருந்ததை மூவரும் உணர்ந்தார்கள்.
“ தேவ அன்னையின் அழகு என்னை ஏறக்குறைய பார்வையிழக்கச் செய்தது. ஆயினும் அவர்களை நோக்கிக் கொண்டிருந்த நான் களைத்து விடவில்லை. நம் அன்னை இத்தனை அழகுள்ளவர்கள் என்று நான் ஒருபோதும் எண்ணியதேயில்லை “ என்று கூறுகிறாள் லூசியா.
ஏறக்குறைய பத்து நிமிடங்கள் காட்சி நீடித்திருந்தது. அதன் இனிமையால் நிறைந்திருந்த குழந்தைகள் விளையாட விரும்பவில்லை. தங்களுக்குள் அதிகம் பேசவும் இல்லை..
இக்காட்சியைப் பற்றி கேள்விப்பட்டால் யாருமே நம்ப மாட்டார்கள், ஆனால் திட்டுவார்கள் என்று லூசியா நினைத்தாள். எனவே அதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று இருவரிடமும் எச்சரித்தாள். “ அந்த அம்மா என்ன அழகு!” என்று இடக்கிடையே ஜஸிந்தா தன்னையும் மீறி சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்த லூசியா, “ நீ எல்லாவற்றையும் சொல்லிவிடுவாய் போல ! “ என்றாள். “ நீ ஒன்றும் பயப்பட வேண்டாம். நான் இந்த இரகசியத்தை வெளியிடவே மாட்டேன் “ என்றாள் ஜஸிந்தா.
பிரான்சிஸ் மாதாவைக் கண்டான். ஆனால் அவர்கள் கூறிய எதையும் அவன் கேட்கவில்லையாதலால் தான் மோட்சத்திற்குப் போவதாக மாதா கூறினார்கள் என்று கேட்டவுடன் மகிழ்ச்சியடைந்து, “ ஓ என் தாயே, நீங்கள் மிகவும் விரும்பும் ஜெபமாலைகள் அத்தனையும் நான் சொல்வேன் “ என்றான்.
ஜஸிந்தா அக்காட்சியின் இனிய மகிழ்ச்சியால் நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்தாள். ஆனால் மாலையில் வீடு சேர்ந்ததும் அதற்கு மேலும் அவளால் அதற்கு மேலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் பெற்றோர் சந்தையிலிருந்து திரும்பி வர சற்று நேரமாயிற்று. ஜஸிந்தா துறுதுறுவென்று வந்தாள். சிறிது நேரத்திற்குள் மார்ட்டோவும், ஒலிம்பியாவும் திரும்பி வந்த சத்தம் வாசலில் கேட்டது. அவ்வளவுதான் நேரே தன் தாயிடம் ஓடினாள்.
“ அம்மா, நான் மாதாவைக் கண்டேன் கோவா தா ஈரியாவில் ! “ என்று ஒரேயடியாக செய்தியைப் போட்டு உடைத்துவிட்டாள்.
இவ்வளவுக்கும் அவள் பெற்றோர் வண்டியிலிருந்து சாமான்களைக் கூட இறக்கி முடியவில்லை.
“ ஓகோ ! இப்போதே நீ அர்ச்சிஷ்ட்டவள் ஆகிவிட்டாயோ மாதாவைப் பார்த்துவிட?” என்று கூறியபடியே ஒலிம்பியா தன் மகளை அணைத்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தாள்.
“ நான் மாதாவைப் பார்த்தேனம்மா” என்று அழுத்திக் கூறிய ஜஸிந்தா ஒரே மூச்சில், மின்னல் மின்னியது, அவர்கள் பயந்து ஓடியது, அஸின்ஹேரா மரத்தின் மீது ஓளி உருண்டை காணப்பட்டது. அது ஆளா என்று பார்க்க கல் எரியும்படி பிரான்சிஸ் சொன்னது. லூசியா மறுத்தது. தினமும் ஜெபமாலை சொல்ல வேண்டுமென்று மாதா கூறியது. தானும் அண்ணனும் மோட்சத்திற்கு செல்ல இருப்பது என்று எல்லாவற்றையும் பொறிந்து கொட்டினாள்.
சந்தையிலிருந்து வாங்கி வந்திருந்த சாமான்களையும், சிறு பன்றிக் குட்டியையும் அவற்றிற்குரிய இடங்களில் ஒழுங்குபடுத்தி வைப்பதில் பெற்றோர் ஈடுபட்டனர்.
சற்று நேரத்தில் ஜஸிந்தா மீண்டும் வந்து,
“ அம்மா, நானும் பிரான்சிஸும் ஜெபமாலை சொல்லப் போகிறோம். ஜெபமாலை சொல்ல வேண்டுமென்று மாதா சொன்னார்கள் “ என்று கூறி ஜெபமாலை சொல்லப்போய்விட்டார்கள் இருவரும்.
நன்றி : பாத்திமா காட்சிகள் நூல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள Ph. 0461-2361989, 9487609983, 9487257479
வாங்க நாமும் போவோம் ஜெபமாலை ஜெபிக்க…
“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி.. வாழியவே… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !