புத்தாண்டை நோக்கிய சிந்தனைகளாக..
காலங்களை கடந்தவர்.. ஆனால் காலத்தைப் பிரித்துப் போட்டவர்..
“ அகரமும் னகரமும் நானே “
திருவெளிப்பாடு 1 : 8
துவக்கமும் முடிவும் நானே என்கிறார் சேனைகளின் ஆண்டவரான நம் கடவுள்..
யுகங்களைக் கடந்து,
“ இருக்கிறவர் நாமே “
யாத்திராகமம் 3 : 14
என்றவர் காலத்தைப் பிரித்தார்.. அதுமட்டுமல்ல..
காலங்களின் மையமாகத் திகழ்கிறார்..
கிறிஸ்துவுக்கு முன் (கி.மு) கிறிஸ்துவுக்கு பின் (கி.பி)..
மனிதர்கள் தோன்றி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இருந்தாலும்..
எத்தனையோ வல்லவர்கள், மேதைகள், சாதனையாளர்கள், அரசர்கள், ஆரம்ப நாகரீகர்கள், மேலும் பேதைகள் மன்னைக் கவ்வியவர்கள் உட்பட
அவர்கள் எப்போது வாழ்ந்தார்கள் என்று கணக்கிடுவதற்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை துணைக்கு அழைத்துத்தான் ஆக வேண்டும்..
அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி.. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி ஏன் கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களாக இருந்தாலும் சரி..அவர்கள் கிறிஸ்து என்ற நாமத்தை உச்சரித்தே ஆக வேண்டும்..
உலக வரலாற்றை இரண்டாகப் பிரித்தவர் நம் ஆண்டவர்..
உலகத்தின் ஒரு கோடி முனை முதல் மறு கோடி முனை வரை ஆண்டவர் இயேசுவை அறியாதவர்களே இல்லை..
உலக வரலாற்றில் கிறிஸ்துவை ஏன் மையம் என்று சொல்கிறோம்..?
ஆதாமில் துவங்கிய மனித இனம்… நோவாவின் காலத்தில் தப்பித்த மனித இனம்.. ஆபிரகாமில் பெருகிய மனித இனம்.. முதலில் இறைவாக்கினர்கள் மூலமாக கடவுள் நேரடியாக வழி நடத்தப்பட்ட மக்கள் இனம்..
அதன்பின் கடவுளால் வழி நடத்தப்படுவதை விரும்பாத அந்த மனித இனம் தங்களை வழி நடத்த அரசர்களை விரும்பி கடவுளிடம் வேண்டி வாங்கிக் கொண்ட மனித இனம் ஒரு கட்டத்தில் அந்த அரசர்களாலும் வெறுத்துப் போனது..
அதன் பின் மனித இனம் ஒருவரைத் தேட ஆரம்பித்தது.. அந்த ஒருவரை அவர்கள் தாவீதுக்குப் பின் தேடினார்கள்..
ஆனால் அந்த ஒருவரைப் பற்றி ஆதியாகமத்திலேயே பிதா பேச ஆரம்பித்துவிட்டார்..
அந்த ஒருவரை பற்றியே.. அவரைச் சுற்றியே பழைய ஏற்பாடு முழுவதும் பயணமானது..
அந்த ஒருவரையும், அவரைச் சார்ந்தவரையும், அவரைச் சார்ந்தவைகளையும் பற்றியே அந்த பயணம் தொடர்ந்தது..
தொடர்ந்து அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது..
அந்த ஒருவர்தான்.. மனித இனத்திற்கு விடுதலை அளிப்பவர்.. அவர்களை மீட்பவர்.. அவர்களைக் காப்பவர்..
அவரை எதிர்பார்த்து.. எதிர்பார்த்து.. கண்கள் பூத்து..
“ ஆயிரக்கணக்கான வருடங்களாய் எம் மன்னவரே ! உம்மை எதிர்பார்த்தோம் “
என்று எதிர்பார்த்து.. தவித்து.. ஏக்கத்தோடு காத்து இருந்தது.. மனித இனம்..
அவரும் வந்தார்… அவரே வந்தார்.. இருக்கிறவரான அவரே மீண்டும் வந்தார்..
மனித இனத்தை காப்பாற்ற மனிதனாக வந்தார்..
ஆனால் பெருவாரியான மக்கள் எதிர்பார்த்தது போலல்லாமல் எளிமையாக.. ஏழ்மையோடு சாதாரனமாக ஆனால் வித்தியாசமாக வந்தார்..
அந்த ஒருவரை பெருவாரியான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை..
ஒரு சிறிய.. மிகச் சிரிய மக்கள் கூட்டம் அதாவது ஒரு சிறிய வட்டம் மட்டுமே அவரை ஏற்றுக்கொண்டது..
ஆனால் அந்த சிறிய கூட்டம் மிகப்பெரிய ஆல மரமாகி… உலகம் முழுவதும் பரந்து விரிந்து மாபெரும் கூட்டமாக பரந்து விரிந்து விட்டது..
அந்த ஒருவரை.. அந்த அவரை நம் இயேசு தெய்வத்தை ஏற்றுக் கொள்ளாத அந்த மாபெரும் மக்கள் கூட்டம் இப்போது மிகவும் சின்னஞ் சிறிய கூட்டமாகிப் போனது..
“ முதலானோர் பலர் கடைசியானார்கள்… கடைசியானோர் பலர் முதலானார்கள் “
என்ற நம் ஆண்டவரின் வார்த்தை அவரை ஏற்றுக் கொண்டவர்களுக்கே.. அதாவது நமக்கே.. நம்மிடம் நிறைவேறிவிட்டது..
பெரிய விசயம்தான்.. நமக்கு பெருமைதான்.. நன்றாக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்..
அத்தகைய பெருமைக்குரிய நாம்.. உலக அளவில் அதிக மக்கள் தொகையாக இருக்கும் நாம்.. கிட்டத்தட்ட 130 கோடி அளவிற்கு உலகம் முழுவதும் பலுகிப் பெருகி மிகப்பெரிய ஆல மரமாக இருக்கும் நாம்..
உண்மையிலேயே அந்த ‘ஒருவருக்கு’ பிரமாணிக்கமாக இருக்கிறோமா?
அவரை நேசிக்கிறோமா? அவருக்கு அன்பு செய்கிறோமா? நம் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டுள்ளோமா? அவருக்கு நன்றி செலுத்துகிறோமா? நன்றியோடு வாழ்கிறோமா? அவருக்காக பிறரை நேசிக்கிறோமா? அவர்களுக்கு இரக்கம் காட்டுகிறோமா? சகோதர்களை அன்பு செய்கிறோமா?
நாம் குளுவாகவோ, தனிப்பட்ட முறையிலோ அல்லது தனிப்பட்ட நம் வாழ்க்கையாலோ நற்செய்தி அறிவிக்கிறோமா?
அல்லது வெளிப்பார்வைக்கு மட்டும் கிறிஸ்தவர்களாக வாழ்கிறோமா?
பெயரளவில் மட்டும் கிறிஸ்தவர்களாக வாழ்கிறோமா?
அர்த்தமில்லாத வெறும் வெளி அடையாள கிறிஸ்தவர்களாக வாழ்கிறோமா?
புனித யாகப்பர் சொல்லியதுபோல் செயல் இல்லாத செத்த விசுவாசம் உள்ள மிதமிதப்பான கிறிஸ்தவர்களாக இருக்கிறோமா?
கல் தோன்றி மண் தோன்றுமுன்னே இருக்கிறவரான இருந்தவர் நமக்காக பிறந்தும், நமக்காகவே இறந்தும் மீண்டும் இருக்கிறவராக இருப்பவரை நாம் கொஞ்சமாவது கண்டு கொள்கிறோமா?
இந்த வருடத்தில் கூட எத்தனையோ உதவிகள், நன்மைகள் செய்த வழி நடத்திய ஆண்டவரை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோமா?
இந்த வருடத்தின் இறுதியில் இருக்கும் நாம்.. இப்போது சிந்திப்போம்..
இந்த சிந்தனைகளோடு கடவுளுக்குச் சித்தமானால் அடுத்த பகுதியில்..
நன்றி : வேதாகம மேற்கோள்கள் வாழும் ஜெபமாலை இயக்கம்..
நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !
சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !
மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !