மாதாவின் முதல் காட்சிக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள்...
ஜஸிந்தா விசயத்தை வீட்டில் போட்டு உடைத்ததைப் பார்த்தோம்..
லூசியா வீட்டில் என்ன நடக்கிறது..? பார்ப்போமா?
ஜஸிந்தா வீட்டில் இவ்வளவு நடந்திருப்பது லூசியாவிற்குத் ஒன்றும் தெறியாது. காட்சி கண்ட விஷயம் இரகசியமாகவே உள்ளது என்ற நினைப்பில் நிம்மதியாகக் கண் விழித்தாள் அவள். எந்நேரமும் ஒளி நிரம்பிய தேவ அன்னையின் அன்பு முகம்தான் அவள் கண்முன் நின்றது. மிகவும் மகிழ்ச்சியோடு அவள் இருந்தாள். ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போகும் நேரம் வீட்டருகில் உள்ள அத்தி மரத்தடியில் விளையாடலாம் என்று வந்தவளை அவள் அக்காள் மரியா ஒரு கேள்வி கேட்டு திடுக்கிட வைத்தாள்.
“ லூசியா ! நீ கோவா தா ஈரியாவில் மாதாவைக் கண்டாயாமே ?”
லூசியாவால் பதில் சொல்ல முடியவில்லை ! வேதனை கலந்த ஆச்சரியத்துடன் வெறிச்சென்று பார்த்தாள்.
மரியா விடவில்லை. “ உண்மையாகத்தானா?” என்று மீண்டும் கேள்வியை நெருக்கிக் கேட்டாள்.
“ யார் சொன்னது?” என்றாள் லூசியா திகைப்போடு.
“ ஒலிம்பியா அத்தையிடம் ஜஸிந்தா சொன்னாளாம்”
லூசியாவிற்கு அழுகை வந்தது. “ யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவளிடம் சொல்லியிருந்தேனே” என்றாள்.
“ ஏன் சொல்லக்கூடாது?”
“ அது மாதா தானா என்று எனக்குத் தெறியாது. அது ஒரு மிக அழகான பெண். “
“ அந்தப் பெண் உன்னிடம் என்ன சொன்னாள்?”
“ தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் அங்கு செல்ல வேண்டுமாம். அதன்பின் தான் யாரென்றும், தான் என்ன விரும்புகிறார்கள் என்றும் கூறுவார்களாம்.”
“ அவள் யாரென்று நீ கேட்கவில்லையா?”
“ அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்டேன். “ மோட்சத்திலிருந்து வருகிறேன் “ என்றார்கள். அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை.
மேற்கண்ட உரையாடல் மரியாவே கூறியது. அவள் லூசியாவைப் பகைக்கவில்லை. இப்படி ஒரு காட்சி கண்டதாக லூசியா கூறுவதை அவள் தாய் மரிய ரோஸா நம்பாதது போல் மரியாவும் நம்பவில்லை. எனவே லூசியா கூறிய யாவற்றையும் உடனே வீட்டில் பெற்றோரிடம் சென்று அறிவித்தாள்.
லூசியா வீட்டிற்கு உடனே அழைக்கப்பட்டாள். அவள் தந்தை அந்தோணி சார்லஸ் ஒரே வார்த்தையில் “ பெண்கள் கதை “ என்று கூறி அலட்சியமாய் ஒதுக்கி விட்டார். ஆனால் மரிய ரோஸா மிகவும் வேதனைப்பட்டாள். அவளுக்கு ஒரே கோபம். லூசியாவை நன்றாகத் திட்டினாள்.
“ என் வயோதிப காலத்திற்கு இது வேண்டிய பரிசுதான். என் பிள்ளைகள் எப்போதும் உண்மையே பேசும்படி வளர்த்ததாக நான் நினைத்தேன். ஆனால் இப்போ இப்படி ஒரு கட்டுக் கதை கூறுகிறாளே “ என்று துயரத்தோடு கூறினாள்.
லூசியாவின் நிலை மிகவும் பரிதாபமாயிருந்தது. எவ்வளவு துரிதத்தில் இந்த உலகம் அவளுக்கு சகிக்க முடியாத கசப்பாக மாறிவிட்டது ! பட்டியிலிருந்து ஆடுகளிய திறந்துவிட்டுக் கொண்டிருக்கும்போது பிரான்சிஸ் அங்கு வந்தான். அவன் கண்கள் நீரால் நிறைந்திருந்தன.
“ அழாதே பிரான்சிஸ், அந்த அம்மா சொன்னதை யாரிடமும் நாம் சொல்லக் கூடாது “ என்றாள் லூசியா.
“ நான் சொல்லி விட்டேனே “ என்று பழியை ஜஸிந்தா மேல் போடாமல் தன் மேலேயே போட்டுக்கொண்டான் பிரான்சிஸ்.
“ என்ன சொன்னாய்?”
“ அந்த அம்மா நம்மை மோட்சத்திற்கு கொண்டு போவதாகச் சொன்னேன். அதைப் பற்றி அவர்கள் என்னிடம் கேட்டபோது என்னால் பொய் சொல்லக் கூடவில்லை. மன்னித்துக் கொள் லூசியா. இனி யாரிடமும் எதுவும் சொல்ல மாட்டேன்.”
தங்கள் ரகசியம் இவ்வாறு வேளியாகிவிட்டது பற்றி மூன்று குழந்தைகளுமே மிகவும் துயரமடைந்திருந்தார்கள். அதிகமாக அவர்களால் பேச முடியவில்லை. ஜஸிந்தா வெகு நேரம் அப்படியே அழுகிறாப்போல் ஒரு கல்லில் போய் உட்கார்ந்து விட்டாள்.
இதைப்பார்த்த லூசியா, இறுதியில்,
“ ஜஸிந்தா, நீ போய் விளையாடு” என்றாள்.
“ இன்றைக்கு விளையாட எனக்கு மனமில்லை. “
“ ஏன்?”
“ பாவிகளுக்காகப் பரித்தியாகம் செய்து ஜெபமாலை சொல்ல வேண்டும் என்று அந்த அம்மா சொன்னார்கள்தானே? அதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இனிமேல் நாம் ஜெபமாலை சொல்லும்போது மந்திரங்களை முழுவதும் சொல்ல வேண்டும்.”
“ நீ எப்படி பரித்தியாகங்கள் செய்யப்போகிறாய்?”
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரான்சிஸ்,
“ நம் பகல் சாப்பாட்டை நம் ஆடுகளுக்குக் கொடுத்து விடுவோம்” என்றான்.
அன்றிலிருந்து பிரான்சிஸ் ஆடுகள் தண்ணீர் குடித்த ஒரு குட்டையிலுள்ள தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தான். அதிலே பெண்களும் துணி துவைப்பார்கள். ஏறக்குறைய அரைமைல் தொலைவிலிருந்து அல்யுஸ்திரலுக்கு பிச்சையெடுக்க வந்த சில பிள்ளைகளுக்குத் தங்கள் மதிய உணவைக் கொடுத்தார்கள். இது ஜஸிந்தாவின் ஏற்பாடு. “ நம் பகல் சாப்பாட்டை இந்தப் பிள்ளைகளுக்கு பாவிகள் மனந்திரும்பும்படியாக கொடுப்போம்” என்றாள் அவள்.
மதியம் திரும்பியதும் குழந்தைகளுக்குக் கடுமையாக பசிக்க ஆரம்பித்து விடும். பிரான்சிஸ் அங்குள்ள அஸிஹேரா மரக் காய்களைத் தின்ன ஆரம்பித்தான். அவை சற்று ருசியாயிருந்தன. ருசியுள்ள காய்களைத் தின்பது பரித்தியாகமாயிராது என்று ஜஸிந்தா வேறு ஒருவகை மரக்காய்களைத் தின்றாள். அது கசப்பாயிருக்கும் !.
தினமும் இப்படிக் கசந்த காய்களைக் கடித்துத் தின்றுவந்தாள் ஜஸிந்தா. “ இதைத் திண்ணாதே ஜஸிந்தா. இந்தக் காய் ரொம்பக் கசப்பாயிருக்கிறது” என்றாள் லூசியா.
“ கசப்பிற்காகத்தான் நான் இதைத் தின்கிறேன். பாவிகள் மனந்திரும்ப” என்றாள் ஜஸிந்தா.
இம்மூவரும் ஆடு மேய்க்க வரும் பாதைகளில் ஏழைப் பிள்ளைகள் காத்து நிற்க ஆரம்பித்தார்கள். இவர்களும் மகிழ்ச்சியோடு தங்கள் உணவை அவர்களிடம் கொடுத்துவிட்டு, காட்டில் அகப்பட்டதைக் கடித்துப் பசியாற்றிக் கொள்வார்கள். சில காய்கள், சில வேர்கள், காளான், சில வகைப் பூக்கள் இப்படி பெயர் தெறியாத பொருள்களைக் கூட தின்று வந்ததாக லூசியா கூறுகிறாள்.
நன்றி : பாத்திமா காட்சிகள் நூல் மற்றும் சிறந்த கத்தோலிக்க நூல்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள Ph. 0461-2361989, 9487609983, 9487257479
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !