அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-18

யாகப்பரின் வேத சாட்சியமும்.. எதிர் சாட்சியின் வேத சாட்சிய மரணமும்..

சந்தியாகப்பருக்கு எதிராக சாட்சி சொன்னவன் மனம் மாறி அவரோடு வேதசாட்சியாய் மரிக்கும் துணிவு பெறுகிறான்..

எரோது அகரிப்பா யூதர்களை மகிழ்ச்சிப்படுத்த (அதாவது கிறிஸ்தவர்கள் அல்லாத யூதர்கள். ஏனென்றால் யூத கிறிஸ்தவர்களை புனித சந்தியாகப்பர் தலைமை ஏற்று வழி நடத்துகிறார்) விரும்புகிறான். 

சந்தியாகப்பரைக் கைது செய்தது பாஸ்காவுக்கு ஆயத்தமான காலம். இயேசு சுவாமியின் மரணம் நடந்ததும் இதே காலத்தில்தான்..

ஏற்கனவே யூதர்கள் சந்தியாகப்பரை கொலை செய்ய எண்ணி அவனிடம் அவரைப்பற்றி குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்கள். ஏரோது  அகரிப்பா சந்தியாகப்பரை கைது செய்கிறான். அவரும் மகிழ்ச்சியோடு கைதுக்கு ஒத்துழைக்கிறார். இயேசுவுக்காக மரிப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி. ஏன் “ நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் நீங்களும் குடிப்பீர்களா? “ என்று இயேசு அன்று கேட்டபோது, சவடாலாகவும், தெனாவட்டாகவும்“ ஆம் குடிப்போம் “ என்று யாகப்பரும், அருளப்பரும் பதில் அளித்தார்களே அந்த நாள் வந்தபோது அவருக்கு மகிழ்ச்சி இருக்காதா என்ன?

விசாரனை எருசலேம் தேவாலயத்தில் வைத்து நடக்கிறது..ஏற்கனவே யூதர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்த (அன்று இயேசுவுக்கு எதிராக ஏற்பாடு செய்ததுபோல்) பொய்சாட்சி வந்து தூய சந்தியாகபருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். அப்போதும் எதிர்ப்பு ஏதுமின்றி அமைதி காக்கிறார். 

அந்த பொய்ச்சாட்சி சந்தியாகப்பர் முகத்தை உற்று நோக்குகிறான்.. அவர் முகத்தில் இருந்த அக மகிழ்ச்சியும், இயேசுவுக்காக மரிக்க இருப்பதில் இருக்கும் ஆர்வமும் ஆர்வமும் அவனை புரட்டி போடுகிறது.. சந்தியாகப்பர் வாழ்வதற்காக அல்ல சாவதற்காக இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாரே.. அப்படியானால் அந்த இயேசு யார் “ என்று அவன் சிந்தனை ஓடுகிறது.. கொலைக்களம் வரை அவரோடு பயணம் செய்கிறான்..மீண்டும் மீண்டும் அவர் முகத்தை பார்க்கிறான்.. முடிவில் அவனும் ஒரு முடிவெடுக்கிறான்..இயேசுவை ஏற்றுக்கொள்கிறான்..தானும் கிறிஸ்தவன் என்று தூய சந்தியாகப்பரிடமும், எல்லோரிடமும் அறிக்கையிடுகிறான்.. கூட்டம் திகைக்கிறது..அவனுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மீண்டும் சந்தியாகப்பர் அருகில் வந்து.. அவர்மேல் பொய்ச்சாட்சி சொன்னதற்காக மன்னிப்பு கேட்கிறான்.. நம் சந்தியாகப்பர் அவனை கட்டித்தழுவி முத்தமிட்டு “ உனக்கு சமாதானம் உண்டாகுக “ என்று வாழ்த்துகிறார்.. வாளால் சந்தியாகப்பரின் சிரசும், சாட்சியின் சிரசும் வெட்டப்படுகிறது.. இருவர் ரத்தமுதம் பூமியை நனைக்கிறது..

ஆம் சந்தியாகப்பர் வெற்றி பெற்றுவிட்டார்..இயேசுவின் கிண்ணத்தில் குடித்துவிட்டார்..மரிக்கும் முன் அன்னையிடம் வேண்டிக்கொண்டதையும் நினைத்துக்கொள்கிறார்..

அன்னை தான் வாக்கு கொடுத்தது போலவே அவருக்கு துணையாக வருகிறார். பரிசுத்த அன்னை தூய சந்தியாகப்பரின் ஆன்மாவை தன் கரங்களில் ஏந்தி இயேசுவிடம் ஒப்புக்கொடுக்கிறார். இந்த பாக்கியமும் சந்தியாகப்பரை தவிர வேறு யாருக்கும் கிடைக்கவில்லை..

ஜெபம் : தூய சந்தியாகப்பரே ! தலைவருக்காக தலை கொடுத்த உண்மை சீடரே ! கபடில்லாத அப்போஸ்தலரே ! எதையும் மறைக்கத் தெரியாதவரே ! ஆண்டவர் இயேசு உம்மிடம் கேட்ட கேள்வியின் பொருளைப் புரிந்து கொண்டு அதற்காகவே வாழ்ந்தவரே! அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தவரே !. மாதாவைக் கண்டுபிடித்தவரே ! அவர் மேல் நேசம் வைத்தவரே ! மாதாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கண்டுபிடித்தவரே ! மாதாவின் துணையை நாடியவரே ! அதைப் பெற்றவரே !..

மாதா உயிரோடு வாழும் போதே மாதாவிடம் ஜெபித்தவரே !.. ( ஒரு சில சந்தியாகப்பர் படத்தில் கையில் ஒரு சிரிய மாலையை வைத்திருக்கிறார்.. அது அப்போது உள்ள ஜெபமாலையாக இருக்கலாம்.. எனென்றால் மாதாவுக்கு பிடித்த மொழி கபரியேல் தூதர் அவருக்கு சொல்லிய மங்கள வார்த்தை மொழி.. அந்த இரகசியத்தை சந்தியாகப்பரும் அறிந்திருக்க வேண்டும்.. ஏன் மாதாவே சொல்லியும் இருக்கலாம். மேலும் சந்தியாகப்பர் கண்டுபிடிப்பதில் வல்லவர். திருச்சபையின் ஆரம்ப காலத்திலேயே மாதாவிடம் ஜெபிக்கும் பழக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது)

உம்முடைய வேதசாட்சி மரணம் எங்களுக்குள்ளே ஒரு வித புது உத்வேகத்தை வெளியே கொண்டுவருகிறது.. உமக்கிருந்திருந்த ஆர்வம் எங்களுக்கும் வருகிறது.. இயேசு சுவாமியிடம் கொண்டிருந்த உறவு, உரிமை, நேசம் எங்களுக்கும் ஏற்பட வரம் தாரும்..

அவருக்காக எதையும் உதறித்தள்ள உம்மைப் போல துணிவைத் தாரும்.. ஏன் அது உயிராக இருந்தாலும்..

ஆமென்..

மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு..