மாதாவின் முதல் காட்சிக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள்... தொடர்ச்சி.. மாஸ்டர் பலி ஆன்மா பிரான்சிஸ்..
ஊர் முழுவதும் காட்சி பற்றிய பேச்சாயிருந்ததால், பாத்திமா பங்கு குரு மரிய ரோஸாவுக்கு ஆள் அனுப்பினார். லூசியாவையும் கூட்டி வரும்படி கூறினார். பங்குக் குருவிடமாவது லூசியா ஒப்புக்கொண்டுவிட மாட்டளா காட்சி எதுவும் தான் காணவில்லை என்று, என விரும்பிய மரிய ரோஸா மகளை அழைத்துக் கொண்டு பங்குத் தந்தையிடம் சென்றாள்.
பங்குக் குரு லூசியாவிடம் பல கேள்விகள் கேட்டார். கேட்ட கேள்விகளுக்கு லூசியா சுருக்கமாக விடையளித்தாள். மொத்தத்தில் அவளைப் பற்றி பங்குக் குருவுக்கு அவ்வளவு நல்ல எண்ணம் ஏற்படவில்லை. முடிவில் கோவா தா ஈரியாவுக்கு லூசியாவை அனுப்பும்படியும், மீண்டும் காட்சி தோன்றினால் அவளைத் தம்மிடம் அழைத்துக் கொண்டு வரும்படியும் மரிய ரோஸாவிடம் கூறி அனுப்பிவிட்டார் பங்குக் குரு.
ஒரு நாள் வெளியிலிருந்து இரண்டு குருக்கள் லூசியாவுடன் அன்பாகப் பேசினார்கள். அவள் பரிசுத்த பாப்புவுக்காக வேண்டிக்கொள்ளும்படி கூறினார்கள். “ பாப்பு என்றால் யார்?” என்று கேட்டாள் லூசியா. அந்தக் குருக்கள் விளக்கிக் கூறினார்கள். அன்று முதல் இக்குழந்தைகள் தங்கள் ஜெபமாலை முடிந்தவுடன் பாப்புவுக்காக மூன்று அருள் நிறை மந்திரங்களை சேர்த்து சொல்லி வந்தார்கள். எங்கோ தொலைவிலிருக்கும் திருச்சபைத் தலைவரான பாப்பாண்டவருக்காக வேண்டிக்கொள்வதில் அவர்கள் மகிழ்ச்சியும் ஒருவித பெருமையும் அடைந்தனர்.
பிரான்சிஸ் துன்பத்தை சகித்துக் கொள்வது மட்டுமல்ல அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளவும் பழகி விட்டான். “ நாம் அதிகம் துன்பப்பட நேரிடும் என்று நம் அம்மா சொன்னார்கள் தானே? பரவாயில்லை. அவர்கள் எவ்வளவு விரும்புவார்களோ, அவ்வளவுக்கு நான் துன்பப்படுவேன்” என்று சொல்லி துன்பங்களை நிறைவுடன் ஏற்று வந்தான்.
வீட்டிலும் ஊரிலும் எங்கும் எல்லா இடங்களிலிருந்தும் பெருகி வந்த துன்பத்தை நினைத்து லூசியாவுக்குக் கண்ணீர் பெருகியது. பிரான்சிஸ் அவளைப் பார்த்து:
“ பரவாயில்லை, லூசியா நாம் அதிகம் துன்பப்பட வேண்டும் என்று அம்மா சொல்லவில்லையா?” என்று கூறி அவளைத் திடப்படுத்தினான்.
இப்போதெல்லாம் பிரான்சிஸ் தனிமையையும், மவுனத்தையும் விரும்பினான். ஒருநாள் அவர்கள் மூவரும் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டபின், பிரான்சிஸ் மற்ற இருவரையும் விட்டுவிட்டு ஒரு உயரமான பாறையின் உச்சியில் ஏறிப்போய் அங்கு நின்று கொண்டு கீழே பார்த்து,
“ நீங்கள் இங்கே வர முடியாது. என்னை இங்கே தனியாக விட்டுவிடுங்கள் “ என்று கூறினான்.
லூசியாவும், ஜஸிந்தாவும் அவனை அதிகம் கவனிக்கவில்லை. அவர்கள் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்தி விளையாட ஆரம்பித்தார்கள். அப்படியே பிரான்சிஸை மறந்தும் விட்டனர். பசியெடுத்த பிறகுதான் அவனைப் பற்றிய நினைவு வந்தது. அவனைத் தேடினால் அவன் அந்தப் பாறையின் மீது அசையாமல் படுத்திருந்தான்!.
“ பிரான்சிஸ் ! பிரான்சிஸ் ! கீழே வந்து சாப்பிட விரும்பவில்லையா?”
“ இல்லை. நீங்கள் சாப்பிடுங்கள்.”
“ ஜெபமாலை சொல்ல வரவில்லையா?”
“ ஜெபமாலை பிந்தி சொல்வோம்”
மீண்டும் லூசியா அவனைக் கீழே வரும்படி கூப்பிட்டாள்.
“ நீங்கள் இங்கே வந்து ஜெபம் செய்யுங்கள் “ என்றான் அவன்.
அவர்கள் எங்கே வரப்போகிறார்கள் என்று எண்ணி விளையாட்டாகத்தான் அப்படி சொன்னான்.
ஆனால் இரு சிறுமியரும் மிகவும் கஷ்ட்டப்பட்டு, கை விரல்களும், முழங்கால்களும் பாறையில் உராய, மெதுவாக ஏறி, பாறை உச்சியை அடைந்துவிட்டனர்.
“ இங்கே இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டனர்.
“ நான் சர்வேசுவரனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். எத்தனை பாவங்களால் அவர் எவ்வளவு மனம் நொந்து போயிருக்கிறார் ! அவருக்கு என்னால் மகிழ்ச்சியூட்ட முடியுமானல் எவ்வளவு நல்லது!” என்று அமைதியோடு பதில் கூறினான்.
சில நாட்களில் அவர்கள் குழந்தைக்குரிய உற்சாகத்தால் தூண்டப்பட்டு, பழைய பாடல்களைப் பாடத் தொடங்கி விடுவார்கள். ஒரு நாள் ஒரு பாட்டு ரொம்பப் பிடித்திருந்ததால் அதை மீண்டும் பாடினார்கள். பாடி முடியவும் பிரான்சிஸ் ஏதோ ஞாபகப்படுத்திக் கொண்டவன் போல :
“ இந்தப் பாட்டை நாம் இனி பாட வேண்டாம். நாம் சம்மனசைப் பார்த்தோம். அம்மாவையும் பார்த்தோமல்லவா? அதனால் பாட்டுப் பாடுவது எனக்கு விருப்பமில்லை “ என்று சொல்லி விட்டான்.
மாதாவின் இரண்டாம் காட்சிக்குரிய நாள் நெருங்கி விட்டது..
நன்றி : பாத்திமா காட்சிகள், மாதா அப்போஸ்தலர்கள் சபை. பாத்திமா காட்சிகள் நூல் மற்றும் சிறந்த கத்தோலிக்க நூல்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள Ph. 0461-2361989, 9487609983, 9487257479
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !