நற்கருணை நாதருக்கு நிறைய பரிகாரம் செய்ய வேண்டும்
காலம் 1916-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் போர்த்துக்கல் நாட்டில் சமாதானத்தின் தூதுவன் லூசியா, பிரான்சிஸ், ஜெசிந்தா என்ற மூன்று சிறுவர்களை சந்தித்து நற்கருணை நாதர் நன்றியற்ற மனிதர்களால் அவசங்கைப் படுவதை சுடிக்காட்டி நற்கருணை நாதருக்கு பரிகாரம் செய்ய அவர் அக்குழந்தைகளை கேட்டுக்கொண்ட நிகழ்ச்சியைப் பார்ப்போம்.
(கீலே உள்ள பகுதி மாதா அப்போஸ்தலர்கள் சபையின் “ மாதா பரிகார மலரிலிருந்து எடுக்கப்பட்டது )
அவர் மூன்றாவது காட்சியில் நற்கருணையோடு வந்தார். நற்கருணை சேசுவுக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத்திற்குப் பரிகார ஜெபத்தை சொல்லிக்கொடுத்து அவரும் ஜெபித்தார்.
குழந்தைகளுக்கு நற்கருணை வழங்கும் போது: “ நன்றியற்ற மனிதரால் சகிக்கக்கூடாத விதமாய் அவசங்கைப்படுத்தபடுகின்ற சேசு கிறிஸ்துவின் திருச்சரீரத்தையும், திரு இரத்தத்தையும் அருந்தி பானம் செய்யுங்கள். அவர்களுடைய அக்கிரமங்களுக்கு பரிகாரம் செய்து உங்கள் கடவுளை ஆறுதல் படுத்துங்கள் “ என்றார்.
பின்பு லூசியாவுக்கு திவ்ய அப்பத்தை உட்கொள்ள கொடுத்தார். பிரான்சிஸுக்கும், ஜெசிந்தாவிற்கும் திருரத்தத்தை பானம் செய்யக் கொடுத்தார். இரண்டு குணங்களிலும் இயேசு முழுவதும் உட்கொள்ளப்படுகிறார் என்பது இதனால் தெளியாகிறது; ஆகவே அப்ப வடிவில் மட்டும் நற்கருணை வழங்கும் திருச்சபையின் பாரம்பரியம் சரியானதே.
சம்மனசானவர் கூறிய வார்த்தையிலிருந்து நற்கருணையில் நமதாண்டவர் “ சகிக்கக்கூடாத விதமாய் நிந்திக்கப்படுகிறார் என அறிகிறோம். இது எங்கும் பரவலாக நடக்கிறது.
இந்த செய்தி வான தூதரால் வழங்கப்பட்ட ஆண்டு 1916. ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அப்படி சொல்லியிருக்கிறார்.அதே வானதூதர் இப்போது வந்தால் என்ன சொல்லுவார்.
வானதூதர் முதல் காட்சியில் அந்த குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து முழங்காலில் இருந்து நெற்றி தரையில்பட பணிந்து வானதூதரும் அக்குழந்தைகளோடு சேர்ந்து மூன்று முறையும் ஜெபித்த ஜெபம் என்னவென்று தெறியுமா?
“ என் தேவனே! உம்மை விசுவசிக்கிறேன், உம்மை ஆராதிக்கிறேன், உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசியாதவர்க்காகவும், உம்மை ஆராதிக்காதவர்க்காகவும், உம்மை நம்பாதவர்காகவும் உம்மை நேசியாதவர்க்காகவும் மன்னிப்பு கேட்கிறேன் “
(என்ற திவ்ய நற்கருணை ஆசீர்வாதத்தில் நற்கருணை ஆண்டவர் முன் ‘நான்’ சேர்த்து ஜெபிக்கப்படும் ஜெபம்தான். இந்த ஜெபம் இன்றும் அனைத்து ஆலயங்களிலும் சொல்லப்படுகிறதா என்பதும் கேள்விக்குறி).
அவரும் ஜெபித்த பின் அவர் சொன்னார்,
“ இவ்வாறு ஜெபியுங்கள் நீங்கள் மன்றாடும் குரலை சேசு மரியாயின் இருதயங்கள் செவியுற்று கேட்கின்றன “ என்றார்.
மேற்கண்ட வானவரின் வருகை முடிந்ததும் குழந்தைகள் வெகு நேரம் நெற்றி தரையில் பட முழங்காலில் இருந்து மீண்டும் மீண்டும் அதே ஜெபத்தை சொல்லி வெகுநேரம் வரையிலும் ஜெபித்துக்கொண்டே இருந்தனர்.
நன்றி : மாதா பரிகார மலர், பாத்திமா செய்திகள் நூல்
இப்போதுதான் நிறைய மக்களுக்கு தலைவணங்கவே மறுக்கிறதே மூன்று இன்ச் அளவுகூட தலைகள் வணங்குவது இல்லை. நற்கருணை நாதரை உட்கொண்ட பின் தலை தரையை தொடும்வரை வணங்கி அவரை ஆராதித்து அவரிடம் பேச வேண்டும். வானதூதர் சொல்லிக்கொடுத்த ஜெபம் சொல்ல வேண்டும். இன்னும் எவ்வளவோ அவரிடம் பேசலாம், கேட்கலாம். அவரோடு ஒரு பத்து நிமிடங்களாவது செலவு செய்ய வேண்டும்.
அதே போல் நற்கருணை வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு குறுக்கே எத்தனை முறை நடந்தாலும் ஒருகால் முட்டி போட்டுவிட்டுத்தான் குறுக்கே நடக்க வேண்டும். எல்லாம் இருந்தது. இப்போ எங்கே சென்றது என்றுதான் தெறியவில்லை.
ஆண்டவர் முன்னால் தலையை தாழ்த்தவில்லை என்றால் யாருக்கு தாழ்த்துவோம்.
இப்போது யாராவது முழங்காலில் இருந்து நன்மை வாங்கினால், ஒரு கால்முட்டி இட்டு அவரைக்கடந்தால், நற்கருணை உட்கொண்டபின் முகம் குப்புற அவரை ஆராதித்தால் அவரை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்; பெரிய பக்திமான் என்று பரிகாசப்பார்வைதான் பார்க்கப்படுகிறார்கள்.
அவர் நம் ஆண்டவரல்லவா ! நம் தேவாதி தேவனல்லவா ! கடவுளை ஆராதிக்க நான் டீசன்சி பார்ப்பேன். அவரை வாங்க நான் டீசன்சி பார்ப்பேன் ( கரங்களில் வாங்குவது) அவரிடம் நாம் பேச மாட்டேன். ஜெபிக்கும்போதும் நான் டீசன்சி பார்ப்பேன்..ஆபாச ஆடைகளை அணிந்துகொண்டு ஆலயம் வருவதுதான் எனக்கு டீசன்சி.. ஆலயத்தில் இருந்து கொண்டு நான் போனை (Mobile) நோண்டிக்கொண்டிருப்பேன்.. ஆலயத்தில் திருப்பலி நடக்கும்போது நான் வெளியில் அமர்ந்து இருப்பேன்..இப்படி எத்தனையோ பேர்களை பார்க்க முடிகிறது.
இப்படி டீசன்சி பார்ப்போரே ! நாளை உங்களை ஏறெடுத்துப்பார்க்க கூட ஆண்டவருக்கு அறுவருப்பாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நற்கருணை நாதரை நேசிப்போம்.. அவரை பக்தியோடு ஆராதிப்போம்..
சிந்தனை : மாதாவின் காட்சிகள் மற்றும் புனிதர்கள் வரலாற்றில் நாம் முக்கியமாக தெறிந்து கொள்ளவேண்டிய விசயம் என்னவென்றால் அதாவது கடவுளுக்கோ, திவ்ய நற்கருணை நாதருக்கோ, தேவ மாதாவுக்கோ மற்றவர்கள் செய்யும் நிந்தனைகளுக்கு கடவுளின் பிள்ளைகளை, பலி ஆன்மாக்களை வைத்து பரிகாரம் செய்ய வைப்பதைப் பார்க்கலாம்... யார் யார் செய்கிற தெய்வ நிந்தனைகள், துரோகங்கள், அவமரியாதைகள், அவசங்கைகளுக்கு இந்த பாத்திமா சிறுவர்கள் மட்டுமல்ல எத்தனையோ புனிதர், புனிதைகள் பரிகாரம் செய்திருக்கிறார்கள்; செய்ய வைக்கப்பட்டுள்ளார்கள்... உதாரணமாக ஒழுக்கமற்ற அரைகுறை ஆடைகளோடு ஆலயம் சென்று எந்த ஒரு உறுத்தலுமின்றி திவ்ய நற்கருணை நாதரை வாங்கும் பல பெண்களுக்காக ஒரு புனிதை முகம், கரங்கள், பாதம் தவிர உடலின் எந்த பாகமும் ஒரு இம்மி அளவு கூட தெறியாமல் அவள் ஆயுள் காலமும் உடை உடுத்த அறிவுறுத்தப்பட்டாள்.. மனமகிழ்ச்சியோடு மாதா கேட்டுக்கொண்டதற்கு இணங்கினாள் அந்த புனிதை..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !