“ஆனால் பாலைவனத்தில் குறிக்கப்பட்ட இடத்திற்குப் பறந்து செல்லும்படி பெருங் கழுதின் சிறகுகள் அப்பெண்ணுக்கு அளிக்கப்பட்டன.”
திருவெளிப்பாடு 12 : 14
“அந்தப் பெண் பாலைவனத்திற்கு ஓடிப்போனாள்.”
திருவெளிப்பாடு 12 : 5
கடவுளின் தாயாக மாதாவின் பணி முடிந்திருந்தாலும், பாவிகளாக நம் தாயாக மாதாவின் பணி முடிய வில்லை.. அது உலகம் முடியும் வரை ஓயாது..
மீட்பின் திட்டத்தில் கடவுளுக்கு மகளாக, கடவுளுக்கு தாயாக, கடவுளுக்கு முதல் சீடராக, கடவுளின் ஊழியராக, முதல் கிறிஸ்தவப் பெண்ணாக ஆண்டவரின் சிலுவை மரணத்திற்குப் பின் சீடர்களை ஒன்று சேர்ப்பவராக, ஆண்டவரின் உயிர்ப்பிற்குப் பின் எல்லாரோடும் சேர்ந்து ஜெபித்து பரிசுத்த ஆவியை பெற்றுக்கொடுத்து, சீடர்களை வழி நடத்தி திருச்சபைக்கு தாயாக தனது பணியை செவ்வனே செய்து மீட்பின் திட்டத்தின் ஆண்டவர் இயேசுவோடு உடன் பயணித்து இணை மீட்பராக செயல்பட்டார்கள்..
அதற்கு நன்றிக் கடனாக கடவுள் மாதாவுக்கு எவ்வளவோ மகிமையைக் கொடுத்தார் தேவ பிதா. ஆன்மாவோடும், சரீரத்தோடும் மாதாவை மோட்சத்திற்கு எடுத்துக்கொண்டு, பரலோக பூலோக மூவுலக அரசியாக மாதாவுக்கு முடி சூட்டி தன் திருக்குமாரனின் வலப் பக்கம் வீற்றிருக்கும் மகிமையைக் கொடுத்தார்..
மாதா கடவுளுக்கே அம்மாவாக இருந்தாலும் தன்னைத் தாழ்த்தி தன்னை மறைத்து கடவுளுக்கு அர்ப்பணித்து ஊழியம் செய்ததால் கடவுளுக்கு அடுத்த நிலையில் இருக்கும் வானதூதர்களுக்கும் மேலான இடத்தை, மகிமையைக் கொடுத்தார்..
மாதா மோட்சத்தில் நிம்மதியாக, சந்தோசமாக, மகிமையோடு இருக்கலாம்.. ஆனால் ஏன் அதையெல்லாம் விட்டுவிட்டு பூலோகத்திற்கு வந்து கஷ்ட்டப்பட வேண்டும்.. ஏனென்றால் மாதாவின் பணி முடியவில்லை.. அது உலகம் முடியும் வரை ஓயாது.. முதல் பிள்ளை கடவுள் பிள்ளை, வெற்றியின் பிள்ளை அவர் வெற்றி பெற்றுவிட்டார்.. பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்.. அதற்கு போனசாக சிலுவை அடியியில் மாதா பெற்ற கோடிக்கணக்கான பிள்ளைகளான நம்மையும் அவர் வெற்றியின் பிள்ளைகளாக்கி அவர் குமாரனின் வலப்பக்கம் நம்மை அமர செய்ய வேண்டும் அல்லவா?
முதல் பிள்ளை கடவுள்.. இரண்டாவது பிள்ளைகளான நாமோ பாவிகள், பலவீனமுள்ளவர்கள் நம்மை மோட்சக்கரை சேர்க்கும் வரை மாதாவின் பணியும், அலகையோடு போரும் ஓயாது..
இப்போதும் மாதா மோட்சத்தில்தான் இருக்கிறார்கள்.. ஆனால் அதிகமான நேரம் பூமியில் இருக்கிறார்கள்..
மேலே உள்ள திருவெளிப்பாடு இறைவசனத்தில் குறிக்கப்பட்ட ‘பாலைவனம்’ என்பது உலகத்தைக் குறிக்கிறது. அங்குதான் பிசாசும் இருக்கிறது.‘ மண்ணுலகிற்குத் தள்ளப்பட்டது’, ‘கடுங்கோபத்தோடு பூமிக்கு வந்திருக்கிறது’ என்றெல்லாம் பார்த்தோம்..
ஏதேன்ஸ் தோட்டத்தில் பொறாமையோடு ஏவாளை ஏமாற்றியதுபோல், அதே பொறாமையோடு மண்ணுலகில் ஆன்மாக்களை என்னவெல்லாமோ ‘ஆசை காட்டி’ வஞ்சித்து நரகத்திற்கு கூட்டி செல்ல பல வழிகளில் அது போர் செய்து கொண்டிருக்கிறது..
ஆனால் மாதா அதனிடமிருந்து நம்மைக் காப்பாற்ற அதனோடு மாதா போர் செய்துகொண்டு இருக்கிறார்கள்..
மாதா மண்ணுலகில் அதிகமான நேரத்தை செலவழிக்கிறார்கள் என்பதற்கு மாதாவின் பல காட்சிகள் உதாரணங்கள்..
‘ பாத்திமா காட்சி’, ‘லூர்து காட்சி”, ‘சலேத் காட்சி’, ‘குவாதலூப் காட்சி’, ‘ உத்தரிய மாதா காட்சி’ , ‘ ஜெபமாலை மாதா காட்சி’ என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. மாதாவின் மொத்த காட்சிகள் ஆயிரத்திற்கும் மேலே..
நம்மை எளிதாக பிசாசிடம் இருந்து காப்பாற்ற பல சலுகைகளை கடவுளிடம் வேண்டி பெற்று கொண்டு வந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்..
அதில் முக்கியமானது ‘ ஜெபமாலையும்’ ‘உத்தரியமும்’.. மாதா நமக்காக கண்ணீர் வடித்து ஏன் இரத்தக்கண்ணீர் வடித்து கடவுளிடம் மன்றாடி.. நமக்கு துணையாக நின்று பிசாசோடு போராடும்போது.. நாமும் நம் தாயோடு சேர்ந்து போராடினால்தான் என்ன?
மாதாதான் நம் பக்கத்தில் இருக்கிறார்கள்தானே? நமக்கு என்ன பயம்? ஒரு கையில் மாதாவின் கையை பிடித்துக்கொண்டு, இன்னொரு கையில் ஜெபமாலையைப் பிடித்துக் கொண்டு பிசாசின் தலையில் நன்றாக “ நங்கு.. நங்கு” என்று நாலு மிதி மிதிக்கலாம் அல்லவா? ஏன் நாலுமிதி.. ஆசை தீர அவன் தலையை மிதிக்கலாம் அல்லவா?
மிதிப்போமா?
“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே..
ஜெபிப்போம்.. ஜெபிப்போம் ஜெபமாலை…”
“ அலகைத் தலையை உருட்ட அன்னை அணியைத் திரட்டுவோம்..
ஜெபமாலை ஜெபித்து நாமே ஜெயித்துக் காட்டுவோம்..
பேயை ஒழித்துக் கட்டுவோம்..
நம் நேசப் பிதா வாழ்த்தப் பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !